Santosh Singh
Bihar govt engineer Suresh Ram : பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் ராம். ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறைக்கு பின்பு அரசு ஊழியர்கள் குறித்த பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஒருங்கிணைப்புக்கு பிரகு ஒரே பெயர், ஒரே முகவரி கொண்ட ஒரே நபர் பிகார் மாநிலத்தின் பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராக கிஷண்ஜங்கிலும், நீர் மேலாண்மைத் துறையில் அரசு அதிகாரியாக பீம்நகர் பகுதியிலும் பதவி வகித்துள்ளது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த அதிகாரியை நேரில் அழைத்து, உரிய ஆவணங்களுடன் விளக்கம் கேட்டுள்ளது பொதுப்பணித்துறை. ஆனால் அவரோ ஆதார் அட்டை, பான் கார்ட் ஆகியவை மட்டும் கொண்டு சென்று தன் தரப்பு விளக்கத்தினை அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் வேலை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டனர். ஜூலை 11ம் தேதி நீர் மேலாண்மைத் துறை செயலாளருடன் முக்கிய சந்திப்பு இருப்பதாக அறிவித்துவிட்டு அவ்விடத்தில் இருந்து சென்றவர் மீண்டும் ஆவண பரிசோதனைக்கு வரவே இல்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அதன் பின்பு விசாரணை செய்த போது இவர் பொதுப்பணித்துறையில் ஒரு வேலையிலும், நீர் மேலாண்மை துறையில் இரண்டு பணிகளிலும் வேலை பார்த்து வந்தது கண்டறியப்பட்டது. இந்த இரண்டு துறைகளிலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வேலை வாங்கியுள்ளார் சுரேஷ் ராம். பிப்ரவரி 20, 1988ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் சாலை கட்டமைப்பு துறையில் வேலைக்கு சேர்ந்தார். ஜூலை 28, 1989ம் ஆண்டு நீர் மேலாண்மை துறையில் வேலைக்கு சேர்ந்தார். மூன்றாவதாக சேர்ந்த பணி குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.
பெல்ஹார், பன்காவில் உள்ள நீர் மேலாண்மை அலுவலகத்தில் இவர் பார்த்த வேலை குறித்து நல்ல விதமான அபிப்ராயங்களையே முன் வைத்தனர் அங்கு பணி புரியும் அதிகாரிகள். கிஷன்ஜங் காவல்துறையினர், இவர் எப்படி இரண்டு துறைகளிலும் வேலை பார்த்தார் என்று விசாரணை செய்து வருகின்றனர். பொதுப்பணித்துறையில் இருந்து சுரேஷ் ராம் மீது ஆகஸ்ட் 10ம் தேதி வழக்கு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
அரசு வேலை இளைஞர்களுக்கு தற்போது குதிரை கொம்பாக இருக்கின்ற நிலையில், ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று இடத்தில் அதுவும் ஒரே பெயரில், அரசாங்க வேலை பார்த்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.