பீகார் மாநிலத்தில் 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்து வருகிறது. சட்டம் அமலில் இருக்கும் போதும் அங்கு கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில், அண்மையில் சரண் மாவட்டம் சாப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டதில் 38 பேர் உயரிழந்துள்ளனர். இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2016-ல் மதுவிலக்கு சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு ஏற்பட்ட மோசமான சம்பவம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து அரசு மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டு 87 பேரைக் கைது செய்தது. சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு சட்டத்தின் பதிவேட்டைப் பார்க்கையில், இதன் கீழ் வழங்கப்பட்டுள்ள தண்டனைகள், வழக்கு நிலுவைகள் ஆகியவை சட்டம் முழுமையாக அமல்படுத்தவில்லை என்பதை காட்டுகிறது.
மதுவிலக்கு சட்டம் அமலுக்கு வந்த 2016க்கும் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், பீகார் காவல்துறை மற்றும் கலால் துறை 4 லட்சம் வழக்குகளை பதிவு செய்து, சுமார் 4.5 லட்சம் பேரை கைது செய்துள்ளது. அவர்களில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சப்ளையர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மட்டுமே. இதனால் உறுதியான ஆதாரங்கள் கிடைக்காததால் 900 பேர் விடுவிக்கப்பட்டனர்.
மது தொடர்பான வழக்குகளால் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் சிறை சாலையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரலில் முதல் முறையாக சட்டத்தை மீறி மது அருந்துபவர்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இருப்பினும் 25,000க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுவிலக்கு தண்டனை விகிதம் குறைவு குறித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பேசுகையில், நீதிமன்றங்களுக்கு சாட்சிகளை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன என்றார். பீகார் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (தலைமையகம்) ஜே.எஸ்.கங்வார் சரண் மாவட்ட சம்பவம் தொடர்பாக பதிலளிக்க மறுத்து விட்டார். அக்டோபர் 12-ம் தேதி காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, பாட்னா, ரோஹ்தாஸ், நாலந்தா, பக்சர் மற்றும் பாகல்பூர் ஆகிய 5 மாவட்டங்களிலிருந்து அதிகம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிந்தது. செப்டம்பர் மாதம் முதல் காவல்துறை சார்பில் மது தடுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக பாட்னாவில் 2,094 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் வைஷாலி பகுதியில் 30,960 லிட்டர் சட்டவிரோத மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. ஹரியானா, ஜார்கண்ட், உ.பி, மேற்கு வங்காளம், அசாம், பஞ்சாப், டெல்லி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 83 மதுபான வியாபாரிகளை மாநில காவல்துறை கைது செய்ததாக டிசம்பர் 2-ம் தேதி தெரிவித்தது.
2016 ஏப்ரலில் இருந்து கலால் துறையினர் 74,000க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தி 2 கோடி லிட்டர் மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் 80,000 லிட்டர் நாட்டு மதுபானங்கள் ஆகும். மேலும் 70,000 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 2016- ம் ஆண்டு கஜுர்பானி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரையும் கோபால்கஞ்ச் நீதிமன்றம் குற்றவாளி எனத் அறிவித்தது. ஆனால் பாட்னா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டில்
இந்த ஜூலை மாதம் 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இது மாநில அரசுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. கஜுர்பானி சம்பவத்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று சரண் மாவட்ட கள்ளச்சாரயம் தொடர்பாக சட்டபேரவையில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “மது குடித்தால் இறந்துவிடுவீர்கள். கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது” எனப் பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/