Advertisment

கலப்பு திருமணம், மனைவி மரணம்… அரசுடன் போராடி உடைந்து போன பீகார் மனிதர்!

மினோதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் இறந்தார். அவரது சிகிச்சைக்காக ரூ. 12 லட்சம் வரை கடன் வாங்கினார் கிலா நந்த் ஜா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bihar man Khila Nand Jha inter-caste marriage wife Minoti no more, broken man Tamil News

சோர்வு மற்றும் ஏமாற்றத்துடன், கிலா நந்த் ஜா மீண்டும் டெல்லிக்கு சென்று திருமணங்களில் உணவு வழங்குபவராக வேலை செய்யத் தொடங்கினார்.

மும்பையின் வடாலா ரயில் நிலையத்திற்கு வெளியே ஒரு பெஞ்சில் உட்கார்ந்து இருந்த 'கிலா நந்த் ஜா', தனது வாழ்நாள் போராட்டத்தை ஆவணப்படுத்தும் காகிதங்கள் நிறைந்த வெள்ளை பிளாஸ்டிக் பையை பிடித்துக்கொண்டு, தனது கடன் சுமைகளை தீர்த்து வைக்க நடிகர் சோனு சூட் அல்லது சல்மான் கான் ஆகிய இருவரில் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார்.

Advertisment

65 வயதான கிலா நந்த் ஜா 1970 மற்றும் 80களில் பீகாரில் சமூகப் புரட்சியைக் கிளப்பியவர். பிராமணரான அவர் பட்டியல் இன (தலித்) பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாதிவெறியில் ஊறிப்போன சமுதாயத்தை எதிர்த்து போராடிய அவர் தனது கலப்பு திருமணத்திற்காக துன்புறுத்தலையும் கேலியையும் எதிர்கொண்டார். ஒருகட்டத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தார். இன்று, ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மனைவி மினோதி பாஸ்வானின் மரணம் அவரை ஒரு மனிதனாக உடைத்துவிட்டது.

62 வயதான மினோதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் இறந்தார். அவரது சிகிச்சைக்காக ரூ. 12 லட்சம் வரை கடன் வாங்கினார் கிலா நந்த் ஜா. அந்த கடனை திருப்பி அடைக்க முடியாமல் தவித்து வரும் அவர், இப்போது தனது இளைய மகன் பவன் குமாருடன், கடனைத் திருப்பிச் செலுத்த உதவக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் மும்பையில் இருக்கிறார்.

கிலா நந்த் ஜா தனது போராட்ட கதையை விவரிக்கையில், அவர் அவ்வப்போது தட்டச்சு செய்யப்பட்ட, துண்டாக்கப்பட்ட கடிதங்கள் மற்றும் செய்தித்தாள் துணுக்குகளை வெளியே எடுப்பதை நிறுத்துகிறார். அதில் அவருக்கு ஆதரவாக பிப்ரவரி 18, 1988 தேதியிட்ட தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளும் உள்ளது.

தற்போது அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள மாதேபூர் கிராமத்தில் வசிக்கும் கிலா நந்த் ஜா, மரம் வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்தார். ஒவ்வொரு முறையும் மக்கள் வீடுகளில் மரங்களை வெட்ட அல்லது அறுக்க அழைக்கப்படும்போது சுமார் 2 ரூபாய் சம்பாதித்தார். 1970 களின் பிற்பகுதியில், அவர், தனது இருபதுகளின் ஆரம்பத்தில், வழக்கமாக தனது தந்தையுடன் வேலைக்குச் செல்லும் பட்டியல் இன விறகுவெட்டியின் மகள் மினோதியைச் சந்தித்தார். இருவரும் காதலித்தனர். அதற்கு அவர் தந்தை மறுப்பு தெரிவித்தார் என்கிறார். “மினோதி பட்டியல் இன வகுப்பைச் (சோட்டி ஜாத்) சேர்ந்தவர் என்பதால் இது நடக்காது என்று அவர் என்னிடம் கூறினார். ‘உனக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். நமது வகுப்பை மீறி நீ திருமணம் செய்தால், யாரும் அவர்களை திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றார்.’ நான் எனது நிலைப்பாட்டை மாற்றாமல் இருந்தபோது, ​​​​என் தந்தை என்னை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார்." என்கிறார்.

khila nand minoti family - கிலா நந்த் ஜா மற்றும் மினோதி பாஸ்வான் தங்கள் குழந்தைகளுடன்.
கிலா நந்த் ஜா மற்றும் மினோதி பாஸ்வான் தங்கள் குழந்தைகளுடன்.

இதன்பின்னர் கிலா நந்த் ஜா 1979ல் மதுபானியில் உள்ள ஜாஞ்சர்பூர் பதிவு அலுவலகத்தில் மினோதியை மணந்தார். "என் தந்தை எச்சரித்ததைப் போலவே இது கடினமாக இருந்தது. மினோதி பொதுக் குழாயில் தண்ணீர் எடுக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும், மக்கள் அதை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு சேற்றைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். அதைப் பார்க்கவே வேதனையாக இருந்தது” என்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு, கிலா நந்த் ஜா மற்றும் மினோதி மதுபானியில் உள்ள தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி தர்பங்காவுக்குச் சென்றனர். அங்கு அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.எம் லிங்டோவை அணுகினார். அவர் அப்போது தர்பங்கா வட்டத்தின் ஆணையராக இருந்தார். மேலும் அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்கவும் இருந்தார்.

publive-image
பிப்ரவரி 18, 1988 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்.

“எனது கலப்புத் திருமணத்திற்கான ஆவணங்களை அவரிடம் காட்டி, நான் எதிர்கொள்ளும் துன்புறுத்தலை அவரிடம் கூறினேன். அவர் என்னை கமிஷனரேட்டில் பியூனாக (எடுபுடி) வேலைக்கு அமர்த்தலாம் என்று என்னிடம் கூறினார். ஆனால் நான் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் மற்றவர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். எனக்கு வேறு வழியில்லை, எனக்கு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி, அதனால் நான் அங்கு வேலை செய்ய ஆரம்பித்தேன், ”என்று அவர் கூறுகிறார்.

ஆனால், அவரது கலப்புத் திருமணம் பற்றிய செய்தி அலுவலகம் முழுதும் பரவியதால், அங்கு மற்றவர்களுடன் அவருக்கு விரோதம் ஏற்பட்டது. “நான் கமிஷனர் அலுவலகத்தில் பறக்கும் படைக்கு அனுப்பப்பட்டேன். அந்த குழுவின் தலைவரான பிராமணர் ஒன்றும் செய்யாமல் என்னை தொந்தரவு செய்வார். அவர் எனக்காக பெல் அடிப்பார், சில நொடிகளில் நான் அவரது அறைக்குள் விரைந்தாலும், தாமதமாக வந்ததற்காக அவர் என்னைக் கத்துவார். நான் எந்தத் தவறும் செய்யாதபோதும் அவரும் மற்றவர்களும் விளக்கம் கோருவார்கள். நான் சரியான நேரத்தில் வந்தாலும் தாமதமாக வருகிறேன் என்று அவர்கள் என்னைக் கத்துவார்கள். ஆரம்பத்தில் நான் திரும்பிப் பேசுவேன். ஆனால் பிறகு நான் அதை விட்டுவிட்டேன். எனக்கு எந்த சக்தியும் மிச்சமிருக்கவில்லை,” என்று கலங்கிய கண்களுடன் நினைவு கூர்ந்தார் கிலா நந்த் ஜா.

publive-image

அவை கடினமான நாட்கள், ஆனால் கிலா நந்த் ஜா மற்றும் மினோதி ஆகியோர் தங்கள் குழந்தைகளான கமல், பவன் மற்றும் மஞ்சு ஆகியோரிடம் மகிழ்ச்சியைக் கண்டனர். இருப்பினும், அதைத் தொடர நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. “நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது, என் மனைவிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. நான் மீண்டும் லிங்டோவை அணுகினேன், அவர் தர்பங்காவில் உள்ள ஒரு நல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்தார். அங்கு என் மனைவிக்கு தோல் ஒட்டுதல் செய்யப்பட்டது,” என்று அவர் கூறுகிறார்.

1983ல் தனது வேலை ராஜினாமா செய்தார் கிலா நந்த் ஜா. குடும்பத்துடன் டெல்லியின் நங்லி விஹார் பகுதிக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் உணவு வழங்குபவராக வேலை செய்யத் தொடங்கினார். அதில் ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதித்தார்.

"நாங்கள் புதிதாக தொடங்குவோம் என்று நினைத்தோம், ஆனால் நான் டெல்லியில் போராடியதால், எங்களின் கடந்த காலத்தை என்னால் பின்னுக்குத் தள்ள முடியவில்லை. நான் எனது அரசாங்க வேலையை இழந்துவிட்டேன், மினோதி மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது… அதனால் நான் இறுதியாக தைரியத்தை சேகரித்து மீண்டும் போராட முடிவு செய்தேன்," என்று கிலா நந்த் ஜா கூறுகிறார்.

1983 அக்டோபரில், பீகாரில் தன்னை துன்புறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பண உதவி கோரியும் டெல்லியில் உள்ள போட் கிளப்பில் தர்ணாவில் ஈடுபட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் மற்றும் "சில மக்களவை உறுப்பினர்களையும் சந்தித்து எனது அவலநிலையை அவர்களிடம் தெரிவித்தார்".

“ நான் எந்த பாவமும் செய்யவில்லை. கலப்பு திருமணம் தான் செய்து கொண்டேன் என்று அவர்களிடம் சொன்னேன். டெல்லியில் சுற்றுப்பயணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை, உங்கள் அதிகாரிகள் என்னை இங்கு வருமாறு கட்டாயப்படுத்தினார்கள்” என்கிறார். விரைவில், அவரது வழக்கு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது மற்றும் 1985 ஆம் ஆண்டில், சிபிஐ (எம்) எம்.பி சைபுதீன் சவுத்ரி மக்களவையில் பிரச்சினையை எழுப்பினார்.

khila nand and son
மும்பையில் கிலா நந்த் ஜா தனது மகன் பவனுடன் இருக்கும் புகைப்படம் (எக்ஸ்பிரஸ்)

இறுதியில், அப்போதைய பீகார் முதல்வர் பிந்தேஸ்வரி துபே ஜாவை போட் கிளப்பில் அழைத்து பேசினார். “நான் அடமானம் வைத்த நிலத்தை விடுவிக்க ரூ. 5,000 தருவதாக உறுதியளித்த அவர், நான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவேன் என்றும், எனக்கு எதிராக பாரபட்சமாக நடந்துகொண்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதன் பிறகு எனது 13 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டேன்,” என்று கிலா நந்த் ஜா கூறுகிறார்.

அப்போதைய பீகார் தலைமைச் செயலாளர் கே.ஏ.எச்.சுப்ரமணியனின் கடிதத்துடன், கிலா நந்த் ஜா பீகாருக்குப் புறப்பட்டார். இறுதியில் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் அப்படி இருக்கவில்லை. “10 நாட்கள், தலைமைச் செயலாளரின் கடிதத்துடன் சுற்றித் திரிந்தேன். ஆனால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் கிலா நந்த் ஜா.

சோர்வு மற்றும் ஏமாற்றத்துடன், கிலா நந்த் ஜா மீண்டும் டெல்லிக்கு சென்று திருமணங்களில் உணவு வழங்குபவராக வேலை செய்யத் தொடங்கினார். வேலை கிடைக்காத நாட்களில் சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.

இந்த ஆண்டு ஜனவரியில், மினோதி-க்கு பக்கவாதம் ஏற்பட்டது. “அவள் மாவு வாங்கச் சென்றிருந்தபோது பக்கவாதத் தாக்குதலுக்கு ஆளாகி சரிந்து விழுந்தாள். நாங்கள் ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரைக்கப்பட்டோம், அவர் அறுவை சிகிச்சை செய்து மினோதிக்கு மருந்து கொடுத்தார். செலவுகள் மிக அதிகமாக இருந்ததால் என்னிடம் பணம் இல்லாததால், உள்ளூர் அறிமுகமானவர்களிடம் சிறு கடன் வாங்க ஆரம்பித்தேன். ஏப்ரல் மாதத்துக்குள் சுமார் ரூ.12 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். நான் விரும்பியதெல்லாம் மினோதி பிழைக்க வேண்டும் என்பது தான். பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவள் ஏப்ரல் மாதத்தில் என்னை மட்டும் தவிக்க விட்டுவிட்டு இறந்துபோனாள், ”என்று மினோதி கிலா நந்த் ஜா கூறுகிறார்.

newspaper clippings khila nand jha
கிலா நந்த் ஜாவின் கதையைக் கொண்ட செய்தித்தாள் துணுக்குகள்.

மினோதியின் இறுதிச் சடங்குகளைச் செய்ய மேலும் 50,000 ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனைத் திருப்பி செல்ல அவர் சமாளிக்கும்போதே, கடன் கொடுத்தவர்கள் வந்து கதவைத் தட்டினார்கள் என்றும் அவர் கூறினார். “பணத்தைத் திருப்பிச் செலுத்த சிறிது அவகாசம் கேட்டேன். ஆனால் மக்கள் ஆக்ரோஷமாக மாறத் தொடங்கினர். அதனால் நானும் என் இளைய மகனும் மும்பைக்கு கிளம்பினோம். நான் அதிலிருந்து வெளியேற வழி இல்லை, ”என்று கிலா நந்த் ஜா கூறுகிறார். அவரது இளைய மகன் டெல்லியில் சமையல் பணியாளராகப் பணிபுரிகிறார்.

அவர் ஒருமுறை மினோதியுடன் பேசிய உரையாடல்தான் மும்பைப் பயணத்தைத் தூண்டியது. “ஏழைகளை மீட்பவர் என்ற சோனு சூட்-டின் வீடியோவை அவள் போனில் வைத்திருந்தாள். ஒருவேளை அவர் எனக்கு உதவுவார் என்று நினைத்தேன். சல்மான் கான் உதவுவதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்கிறார் கிலா நந்த் ஜா.

தந்தையும் மகனும் தங்களுக்குள் 6,000 ரூபாயுடன் மும்பையை அடைந்ததால், அவர்கள் விலே பார்லேயின் நேரு நகர் பகுதியில் உள்ள ஒரு சேரிக்கு மாதம் 3,000 ரூபாய்க்கு குடிபெயர்ந்தனர். “நான் சோனு சூட்டின் வீட்டிற்கும், சல்மான் கானின் வீட்டிற்கும் சென்றிருந்தேன். ஆனால் என்னால் அவர்களை சந்திக்க முடியவில்லை. எனக்கு ஒரு மாதம் நேரம் இருக்கிறது. இது நடக்கவில்லை என்றால், நாங்கள் எங்கள் வாழ்க்கையை முடித்துவிடுவோம். நாங்கள் டெல்லிக்கு திரும்பிச் செல்ல வழியில்லை." என உடைந்து போனவராக கிலா நந்த் ஜா கூறுகிறார்.

khila nand jha minoti paswan
கிலா நந்த் ஜா மனைவி மினோதி

வடிந்தோடும் கண்ணீரைக் அடக்கிக்கொண்டு, “நான் மினோதியை வணங்கினேன். அவளால் தான் நான் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது என அவள் அடிக்கடி என்னிடம் சொல்வாள். அப்போது நான் அவளிடம், ‘அப்படிச் சொல்லாதே. என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி.’ என்பேன். ஆனால், இப்போது அவள் போய்விட்டாள்." என்று தனது பெருந்துயர கதையை முடித்துக்கொண்டார் கிலா நந்த் ஜா.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Mumbai Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment