2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு மீதான கூட்டுப் பலாத்காரத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் பத்து பேர் தலா 1000 நாட்களுக்கு மேலும், 11 வது நபர் 998 நாட்களும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று குஜராத் அரசால் “நல்ல நடத்தைக்காக” விடுவிக்கப்படுவதற்கு முன்னர், பரோல், ஃபர்லோ, தற்காலிக ஜாமீனில் சிறைக்கு வெளியே இருந்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு அளித்த வாக்குமூலத்தின்படி, ரமேஷ் சந்தனா (58) 1576 நாட்கள் சிறையில் இருந்து வெளியே இருந்தார் (மொத்தம் 1198 நாட்கள் பரோல் மற்றும் 378 நாட்கள் ஃபர்லோ) 11 குற்றவாளிகளில் அதிக நாட்கள் வெளியே இருந்தவர் இவர்.
இதையும் படியுங்கள்: வெவ்வேறு சட்டங்கள் தேசத்தின் ஒற்றுமைக்கு அவமானம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
பரோல் மற்றும் ஃபர்லோ என்பது காவலில் இருந்து தற்காலிக விடுதலை ஆகும்.
வழக்கமாக அதிகபட்சமாக ஒரு மாத காலத்துடன், குறுகிய கால சிறைத்தண்டனையின் போது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக பரோல் வழங்கப்படுகிறது, அதே சமயம் நீண்ட கால சிறைத்தண்டனையில் குறிப்பிட்ட குறைந்தபட்ச காலத்தை அனுபவித்த பிறகு அதிகபட்சமாக 14 நாட்களுக்கு ஃபர்லோ வழங்கப்படுகிறது. ஃபர்லோ கோருவதற்கு எந்த காரணமும் தேவையில்லை என்றாலும், அது கைதிக்கு எந்த சட்ட உரிமையையும் வழங்காது.
திங்களன்று, குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் “14 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறைவாசத்தை முடித்துவிட்டதால் அவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளோம்… அவர்களின் நடத்தை நன்றாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது” மற்றும் மத்திய அரசும் “அனுமதி தெரிவித்தது (அதன் இணக்கம்/அனுமதி)” என்று கூறியது.
கைதிகளுக்கு வழங்கப்பட்ட விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், குஜராத் அரசு மார்ச் 2021 இல், “காவல்துறை கண்காணிப்பாளர், சி.பி.ஐ, சிறப்புக் குற்றப் பிரிவு, மும்பை” மற்றும் “சிறப்பு சிவில் நீதிபதி (சி.பி.ஐ) சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் கோர்ட், கிரேட்டர் பாம்பே” கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்தது என்றும் கூறியது.
குஜராத் கலவரத்தின் போது, தாஹோத் மாவட்டத்தின் லிம்கேடா தாலுகாவில், மார்ச் 3, 2002 அன்று ஒரு கும்பலால் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது, பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது மூன்று வயது மகளும் கொல்லப்பட்டார். அப்போது பில்கிஸ் பானு கர்ப்பமாக இருந்தார்.
சிறைக் கைதிகள் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து விட்டதாலும், கைதிகள் “சிறையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் நன்னடத்தையுடன்” இருந்தார்கள் என்ற கோத்ரா துணை மாவட்ட சிறை அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையிலும், 11 பேரின் விடுதலைக்கு சிறை ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டது, என்று குஜராத் அரசு கூறியது.
ரமேஷ் சந்தனா சிறையில் இருந்து பரோல் மற்றும் ஃபர்லோவில் கழித்த காலம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. ஜனவரி மற்றும் ஜூன் 2015 க்கு இடையில், 122 நாட்கள் தாமதமாக வந்த நிலையில், 14 நாள் ஃபர்லோ அளிக்கப்பட்டு மொத்த ஃபர்லோ காலம் 136 நாட்களுக்கு மாறியது.
குஜராத் அரசின் பிரமாணப் பத்திரத்தில் உள்ள விவரங்கள், 11 குற்றவாளிகள் தலா சராசரியாக 1176 நாட்கள் ஃபர்லோ, பரோல் மற்றும் தற்காலிக ஜாமீன் ஆகியவற்றைப் பெற்றுள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறது. அவர்களில் ஒருவரான பகபாய் வஹோனியா (57) மட்டும் மொத்தம் 998 நாட்கள் சிறைக்கு வெளியே இருந்துள்ளார்.
ராஜூபாய் சோனி (58) செப்டம்பர் 2013 மற்றும் ஜூலை 2014 க்கு இடையில் 197 நாட்கள் தாமதமாக சிறைக்கு வந்ததோடு மொத்தம் 1348 நாட்கள் விடுப்பில் இருந்தார். நாசிக் சிறையில் இருந்து வந்த சோனியின் 90 நாள் பரோல் தாமதமாக சரணடைந்ததால் 287 நாள் விடுப்புக்கு மாறியது.
11 பேரில் மூத்தவரான ஜஸ்வந்த் நாய் (65), நாசிக் சிறையில் 2015 இல் 75 நாட்கள் தாமதமாக சரணடைந்ததன் மூலம் மொத்தம் 1169 நாட்கள் வெளியே இருந்தார்.
ஆகஸ்ட் மாதம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 11 குற்றவாளிகள் தங்கள் சிறைக் காலத்தில் எப்படி அடிக்கடி பரோல் மற்றும் ஃபர்லோவில் வெளியே வந்தனர், மேலும் இந்த வழக்கில் பல சாட்சிகள் அச்சுறுத்தல்கள் குறித்து புகார் அளித்தனர் என்பதை செய்தியாக வெளியிட்டு இருந்தது.
குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கு ஒப்புதல் அளிக்க குஜராத் அரசு நம்பியிருந்த அனைத்து ஆவணங்களையும் உள்ளடக்கிய குஜராத் பிரமாணப் பத்திரம், பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் அவரது உறவினர்களிடமும் முன்கூட்டியே விடுவிப்பது குறித்து கருத்து கேட்டபோது ராதேஷ்யாம் ஷாவை, “முன்கூட்டியே விடுவிக்க வேண்டாம் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்” மற்றும் அதற்கான பதிவு ஸ்டேஷன் டைரியில் செய்யப்பட்டது, என்று தாஹோத் எஸ்.பி கூறியதாகக் காட்டுகிறது.
இதன் காரணமாக, ராதேஷ்யாமின் விடுதலை குறித்து தஹோத் எஸ்.பி எதிர்மறையான கருத்தை தெரிவித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தாஹோத் எஸ்.பி மட்டும் இல்லை. மும்பையில் உள்ள சி.பி.ஐ மற்றும் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் தவிர, தாஹோத் கலெக்டர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி மற்றும் கோத்ராவின் முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலையும் கருத்தையும் கோரும் போது, குஜராத் உள்துறை அமைச்சகம், “கலெக்டர் தலைமையிலான சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை மாநில அரசு ஏற்றுக்கொள்கிறது… மற்றும் 10 உறுப்பினர்களில், 9 உறுப்பினர்கள் ஸ்ரீ ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷாவை முன்கூட்டியே வெளியிடவும், முன்கூட்டியே விடுவிக்கவும் பரிந்துரைத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
மாநில உள்துறைச் செயலாளர், ராஜ் குமார், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், அரசாங்கம் ஏற்கனவே உண்மைகளை நீதிமன்றத்தின் முன் உறுதிமொழியாக வைத்துள்ளது என்று கூறினார். மேலும், “இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது மற்றும் நான் இதற்கு மேல் கருத்து தெரிவிக்க முடியாது,” என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil