பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெற்று வந்தநிலையில் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு 11 பேரையும் விடுவித்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது. 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஎம் தலைவர் சுபாஷினி அலி மற்றும் இருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் வியாழக்கிழமை ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு இன்று(ஆகஸ்ட் 25) விசாரணை நடத்தியது.
தலைமை நீதிபதி என். வி ரமணா நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இவ்வழக்கில் குஜராத் அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்" எனக் கூறினர்.
மேலும், பில்கிஸ் பானோ வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் விசாரணையை 2 வாரங்கள் தள்ளிவைத்து உத்தரவிட்டது.
கடந்த 2002இல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உள்பட 14பேர் ன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானு வழக்கு தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 2008இல் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 15அன்று குற்றவாளிகள் 11 பேர் குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil