குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி மதுளிகா ராவத் மற்றும் 13 ராணுவ அதிகாரிகள் விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்திய விமானப் படையில் ராணுவ போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் Mi-17 V 5 ஹெலிகாப்டர் விமானம்தான் இன்று குன்னூர் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டால்தான் தெரியவரும் என்று தெரிவிக்கின்றனர்.
இந்திய விமானப்படையில் உள்ள Mi-17 V 5 ஹெலிகாப்டர் வகை விமானம் இதற்கு முன்பும் விபத்துக்குள்ளாகியுள்ளது. தற்போது முப்படைகளின் தளபதி விபின் ராவத் சென்றபோது இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனால், MI-17 V 5 ஹெலிகாப்டர் விமானம் இந்திய அரசு எந்த நாட்டிடம் இருந்து வாங்கியது அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் கடந்த 1977ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அரசு 2008ம் ஆண்டு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் Mi-17 V 5 ஹெலிகாப்டர் 80 விமாணங்களுக்கான ஒப்பந்தத்தை ரஷ்ய தயாரிப்பு நிறுவனத்திடம் அளித்தது. இவற்றில் முதல் கட்டமாக 2013-ல் 36 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் எஞ்சிய அனைத்து ஹெலிகாப்டர்களும் இந்தியாவிடம் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிட்டது.
Mi-17 V5 ஹெலிகாப்டர் ராணுவ துருப்புகளை ஏற்றிச் செல்வதற்கான 36 இருக்கைகள் கொண்ட விமானம், சரக்கு போக்குவரத்து மற்றும் அவசரகால போக்குவரத்து அமைப்புடன் கூடிய பல வகைகளைக் கொண்டுள்ளது.
இன்று விபத்துக்குள்ளான இந்திய விமானப்படையின் இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் பயணம் செய்துள்ளார். இந்த ஹெலிகாப்டர் கோயம்புத்தூர் அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் அமைந்துள்ள 109 ஹெலிகாப்டர் பிரிவைச் சேர்ந்தது. இந்த Mi-17 V5 ஹெலிகாப்டர் உலகம் முழுவதும் இராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டராக உள்ளது. இது ரஷ்யயாவைச் சேர்ந்த Mi-8/17 தொடரின் ஒரு பகுதியாகும்.
பொதுவாகவே இந்த Mi17 V5 ஹெலிகாப்டர்கள் சிறந்த பராமரிப்புப் பணிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஹெலிகாப்டர் அதிகபட்சமாக 13,000 கிலோ எடையுடன் பறக்கும் திறன் கொண்டது.
இந்த ஹெலிகாப்டர் ஒற்றை-சுழற்சி ஹெலிகாப்டர், வால் மீது ரோட்டருடன், ஒரு டால்பின் வகை மூக்கு, கூடுதல் ஸ்டார்போர்டு நெகிழ் கதவு மற்றும் போர்ட்சைட் அகலப்படுத்தப்பட்ட நெகிழ் கதவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக 36 வீரர்கள் அல்லது 4,500 கிலோ எடையை உள்ளே வைத்து எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
மேலும், இது அதிநவீன கட்டுப்பாட்டு சாதனங்கள் கொண்டது. இரவு நேரத்தில் பயணிப்பதற்கான வசதி, மோசமான வானிலையை கணித்து சொல்லும் வசதி, ஆட்டோபைலட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமானப் படையின் Mi-17 V5 ஹெலிகாப்டரில் எந்திர துப்பாக்கி உள்ளிட்ட தற்காப்பு அல்லது தாக்குதல் பயன்பாட்டிற்கான ஆயுதங்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இது பன்முக பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த ஹெலிகாப்டர் மாடலாக கருதப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டர் எரிபொருள் டேங்குகள் விசேஷ ஃபோம் பாலியூரித்தேன் பூச்சு கொடுக்கப்பட்டு இருப்பதால் வெடிக்கும் ஆபத்துக்களை தவிர்க்கும்.
ஜாமர், ஹெலிகாப்டரின் புகைப்போக்கி வெப்பத்தை வைத்து ஏவுகணைகள் தாக்கும் அபாயத்தை தவிர்க்கும் தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.
Mi 17 V5 ஹெலிகாப்டர் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்திலும் சாதாரணமாக மணிக்கு 230 கிமீ வேகத்திலும் பயணிக்கும். அதன் முக்கிய எரிபொருள் டேங்கில் ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டால் 675 கிமீ வரை செல்லும். இரண்டு துணை எரிபொருள் டேங்குகளை பொருத்தினால் 1,180 கிமீ வரை பறக்க முடியும். இது அதிகபட்சமாக 4,000 கிலோ எடையை சுமந்து செல்லும்
.
6,000 அடி உயரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. உலக அளவில் ஏராளமான நாடுகளில் அதிக நம்பகத்தன்மையுடன் இந்த Mi 17 V5 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய விமானப் படை சண்டிகரில் Mi-17 V5 ஹெலிகாப்டர்களுக்கான பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு நிலையத்தை அமைத்துள்ளது. இதற்காக, 2019ம் ஆண்டு தனி பணிமனையும் (Workshop) இந்திய விமானப்படையால் துவங்கப்பட்டது. இதனால், அதிக பராமரிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவே தெரியவருகிறது. எனினும், 8 ஆண்டுகளில் இந்த ரக ஹெலிகாப்டர்க ள் 6 முறை விபத்தில் சிக்கி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“