2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிப் பெற்றால், இந்தியா 'இந்து பாகிஸ்தானாக' மாறிவிடும் என கூறிய சசி தரூரின் கேரள அலுவலகம் இன்று தாக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றிபெற்றால், பாகிஸ்தானில் இருக்கின்ற நிலைமை நம் தேசத்துக்கு உண்டாகும். சுருக்கமாக இந்து பாகிஸ்தானாக உருமாறிவிடும்” எனத் தெரிவித்திருந்தார்.
சசி தரூரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து பேட்டியளித்த பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய சிறு, குறுந்தொழில்துறை அமைச்சருமான கிரிராஜ் சிங், "தேசத்தில் பிரிவினையை உண்டாக்கும் இதுபோன்ற கருத்துக்களை அவர் கூறக்கூடாது. சசி தரூர் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள சசி தரூரின் அலுவலகம் இன்று தாக்குதலுக்கு உள்ளானது.
இந்த தாக்குதல் குறித்து சசி தரூர் தனது ட்விட்டரில், "பாரதீய ஜனதா கட்சியின் யுவமோர்சா மற்றும் சங்கி குண்டர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள எனது தொகுதி அலுவலகத்தினை அடித்து நொறுக்கியுள்ளனர். அலுவலக கதவுகள், சுவர்கள், வாசல் ஆகியவை மீது கருப்பு என்ஜின் ஆயிலை ஊற்றி உள்ளனர். மனு கொடுக்க வந்திருந்த அப்பாவி பொதுமக்களின் மனுக்களை தூக்கி வீசி, அவர்களை விரட்டி அடித்துள்ளனர். எனக்கு எதிராக பேனர்களை வைத்து, பாகிஸ்தானுக்கு என்னை செல்லும்படி கோஷங்களையும் எழுப்பினர்" என தெரிவித்து உள்ளார்.
மேலும், "இந்து ராஷ்டிரா கனவை விட்டு விட்டீர்களா? என்ற எளிமையான கேள்விக்கு பாரதீய ஜனதா அளித்துள்ள பதில், தாக்குதல் மற்றும் வன்முறை. அவர்களின் இந்த முகம் திருவனந்தபுரத்தில் இன்று வெளிப்பட்டு இருக்கிறது. இந்த சங்கி குண்டர்கள் (Sanghi goondas) நாங்கள் இல்லை என பெருமளவிலான இந்துக்கள் கூறுவார்கள்" என்று அவர் தெரிவித்து உள்ளார்.