பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் போது மோடி யோகா செய்து கொண்டிருக்கிறார் - ராகுல் விமர்சனம்

ஆப்கானிஸ்தான், சிரியா, மற்றும் சவுதி அரேபியாவினை விட இந்தியாவில் பெண்களுக்கான நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது என்று ட்விட்டரில் வருத்தம்

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது லண்டனைச் சேர்ந்த ரெய்ச்சர்ஸ் பவுண்டேசன் நிறுவனம். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சகம் மறுத்து வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்திருக்கின்றார்.

நம்முடைய நாட்டின் பிரதமர் பூங்காவினைச் சுற்றி யோகா செய்து, அதனை வீடியோ எடுத்து கொண்டிருக்கிறார். ஆனால் பெண்களுக்கான பாதுக்காப்பற்ற நாடாக இந்தியா முன்னேறி வருகின்றது. ஆப்கானிஸ்தான், சிரியா, மற்றும் சவுதி அரேபியாவினை விட இந்தியாவில் பெண்களுக்கான நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது என்று அதில் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து, பிஜேபி கட்சியினர் ஒவ்வொருவராக, ராகுலின் கருத்திற்கு எதிர் கருத்து சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்கள்.

பிஜேபியின் தேசிய செய்தி தொடர்பாளரான மீனாட்சி லேக்கி ராகுலின் ட்வீட்டிற்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமன்றி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது கொடுக்கப்பட்டிருக்கும் பாலியல் புகார்களை பட்டியலிட்டார். மேலும் கத்துவா பாலியல் வன்கொடுமையினை எதிர்த்து கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ”பிரியங்கா காந்திக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை தான் நீடித்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

“காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளங்களை மேற்பார்வை செய்து வந்த திவ்யா ஸ்பந்தனா அவருடைய துறையிலும் கூட இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றது. நாங்கள் டெல்லி போலீஸிடம் கூறி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்த வித பிரச்சனையும் வராமல் விரைந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்திருந்தோம்” என்றும் குறிப்பிட்டார்.

548 பெண் பிரதிநிதிகளை வைத்து எடுக்கப்பட்ட இந்த சர்வேயினை பொய் என்று மறுக்கின்றார் பிஜேபி தேசிய செய்தி தொடர்பாளர் லேக்கி. மேலும் “நியூயார்க் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத, அதே சமயம் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் அரங்கேறும் நகரம். அது நியூ டெல்லி இல்லை.” என்றும் தன்னுடைய கருத்தினை பதிவு செய்திருக்கின்றார்.

தாம்சன் ரெய்ச்சர்ஸ் நிறுவனம், பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள், கடத்தல்கள், மற்றும் குடும்ப அமைப்புகளால் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தியே இப்பட்டியலை தயாரித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close