நரேந்திர சிங் தோமர், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட 7 மத்திய அமைச்சர்கள் ரேபரேலி, மைன்பூரி போன்ற இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டாலும் 2019 தேர்தலில் பாஜக அந்த தொகுதிகளில் வெற்றி பெறவில்லை.
‘சாய் பே சர்ச்சா’ என்கிற தேநீர் உரையாடல், தலித்துகளின் வீடுகளில் மதிய உணவு, செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் முக்கிய வாக்காளர்களுடன் குறைந்தது மாதம் ஒருமுறை சுற்றுப்பயணம், உள்ளூர் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) தலைவர்களின் கருத்து கேட்பது போன்ற நடவடிக்கைகள்தான், 2019 பொதுத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த உத்தரப் பிரதேசத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டுள்ள 7 மத்திய அமைச்சர்களின் வியூகம்.
உத்தரப் பிரதேசத்தில், ஆளும் பாஜக 2019 பொதுத் தேர்தலில் 16 மக்களவைத் தொகுதிகளில் தோல்வியடைந்தாலும் இந்த ஜூன் மாதம் நடந்த இடைத்தேர்தலில் அசம்கர் மற்றும் ராம்பூர் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றியது. அதன் கட்டுப்பாட்டில் இல்லாத 14 இடங்களில், 2014-இல் 12 இடங்களை பாஜக வென்றது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) - பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) கூட்டணியிடம் தோல்வியடைந்தது.
சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே இனி கூட்டணி இல்லை என்பதால், இரு கட்சிகளின் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பாஜக தன்னால் முடிந்த்ஜ முயற்சிகளை செய்து வருகிறது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய அமைச்சர்களின் வருகை, அடிமட்ட தொண்டர்களுக்கு சக்தியைக் கொடுக்கும். மேலும், 2014ல் மீண்டும் பாஜகவை நம்புவதற்கு வாக்காளர்களை நம்ப வைக்கும்” என்று மாநில பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
மே மாதம், பாஜக மத்திய தலைமை 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தங்களை முடுக்கிவிட்டது. 2019-இல் பாஜக வெற்றிபெறத் தவறிய 144 தொகுதிகளை இந்தியா முழுவதும் பார்வையிடுமாறு அதன் மத்திய அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டது. செப்டம்பர் 6 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்பார்வையிடுகிறார். இந்த நடைமுறையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோர், கடந்த மூன்று மாதங்களில் அமைச்சர்களின் வருகையின்போது பெறப்பட்ட கருத்துகளைப் பற்றி விவாதிக்க கூட்டத்தில் கலந்து கொண்டனர். 2வது கட்ட பயணம் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகுஜன் சமாஜ் வெற்றி பெற்றுள்ள காஜிபூர், லால்கஞ்ச், நாகினா, அம்ரோஹா, பிஜ்னோர், அம்பேத்கர் நகர், சஹாரன்பூர், கோசி, ஷ்ரவஸ்தி மற்றும் ஜான்பூர் ஆகிய தொகுதிகள் உ.பி.-யில் பாஜகவின் கண்காணிப்பில் உள்ளன; சம்பல், மொராதாபாத் மற்றும் மைன்புரி (முலாயம் சிங் யாதவ் எம்.பி.) ஆகிய சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ள இடங்களும் கண்காணிப்பில் உள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியும் பாஜகவின் கண்காணிப்பில் உள்ளது.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜகவை வழிநடத்தும் மத்திய அமைச்சர்களாக விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கல்வித் துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, ஆயுஷ் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர முஞ்சாபரா, மற்றும் சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே ஆகியோர் உள்ளனர்.
தோமருக்கு ரேபரேலி, அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி மற்றும் லால்கஞ்ச் ஆகிய தொகுதிகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது; அன்னபூர்ணா தேவி காஜிபூர் மற்றும் ஜான்பூரின் பொறுப்பாளராக உள்ளார்; ஜிதேந்திர சிங் மைன்புரி மற்றும் மொராதாபாத் தொகுதிகளின் பொறுப்பாளராக உள்ளார்; அஸ்வினி வைஷ்ணவ்வின் பட்டியலில் மேற்கு உ.பி.யில் உள்ள சஹரன்பூர், பிஜ்னோர் மற்றும் நாகினா தொகுதிகள் உள்ளன; மீனாட்சி லேகி, மகேந்திர முஞ்சபரா அம்ரோஹா தொகுதியிலும் அஸ்வினி குமார் சௌபே கோசி, சம்பல் தொகுதிகளிலும் கட்சியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ளனர். அமைச்சர்கள் தங்கள் பயணத்தின் போது அவர்கள் கண்காணிக்கும் தொகுதிகளில் இரவு தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ராம்பூர் மற்றும் அசம்கரில், கட்சி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களான தினேஷ் லால் யாதவ் ‘நிராஹுவா’ மற்றும் கன்ஷ்யாம் சிங் லோதி ஆகியோரை 2024 தேர்தல் தயாரிப்புகளுக்கு பொறுப்பாளராக நியமித்துள்ளது.
நரேந்திர சிங் தோமர்
நரேந்திர சிங் தோமர் ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் அம்பேத்கர் நகர் மற்றும் ரேபரேலியில் சுற்றுப்பயணம் செய்தார். அவர் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அம்பேத்கர் நகரில் இருந்தார். அங்கு அவர் கிராம மக்களுடன் தேநீர் உரையாடல் நடத்தினார். இதற்காக உள்ளூர் பாஜக பிரிவு பல்வேறு கிராமங்களில் இருந்து 350 கட்டில்களை ஏற்பாடு செய்தது. விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிந்த அவர், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அவர்களுக்காக அறிமுகப்படுத்திய நலத்திட்டங்கள் குறித்தும் பேசினார். மடங்கள் மற்றும் ஆசிரமங்களின் தலைமை அர்ச்சகர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க சமூக சேவகர்கள் போன்ற உள்ளூர் முக்கிய நபர்களையும் விவசாய அமைச்சர் சந்தித்தார்.
தோமர், உள்ளூர் தலித் கட்சித் தொண்டரான அசோக் கனோஜியாவின் வீட்டில் உணவருந்தினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் உள்ளூர் தலைவர்கள் மற்றும் மக்களவை மத்தியக் குழு உறுப்பினர்களைச் சந்தித்தார்.
செப்டம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில், அம்பேத்கர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளைப் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விவசாய அமைச்சர் ரேபரேலிக்கு வந்தார். பஞ்சாயத்து பிரதிநிதிகளை சந்தித்து, மத்திய நிதியுதவி திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், இந்த திட்டங்களின் கீழ் அதிக பயனாளிகளை உள்ளடக்குமாறு நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அன்னபூர்ணா தேவி
மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி ஆகஸ்ட் 29, 30, மற்றும் 31 ஆகிய தேதிகளில் காஜிபூரில் இருந்தார். “மோடி@20” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசினார். கோயில்களுக்குச் சென்றார், வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிர்வாக அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தினார். அரசாங்கத் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். கட்சியின் பல்வேறு பிரிவுகளின் தலைவர்களுடன் "சிற்றுண்டி கூட்டங்களில்" கலந்துகொண்டார். மேலும், மாவட்ட கூட்டுறவு வங்கியில் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அமைச்சர் ஜெய்த்புரா பகுதியில் உள்ள ஒரு தலித் பஸ்தி வீட்டுக்கு சென்று, அங்குள்ள மக்களுடன் உரையாடி, பாஜகவின் பட்டியல் இனப் பிரிவு மோர்ச்சாவைச் சேர்ந்த ஒரு தொண்டர் வீட்டில் உணவருந்தினார்.
அன்னபூர்ணா தேவி முன்னதாக ஜான்பூருக்குச் சென்று அங்கு கட்சிப் பணிகளை மேற்பார்வையிட்டதாக பாஜக உள்விவகாரத்தினர் தெரிவித்தனர்.
ஜிதேந்திர சிங்
சமாஜ்வாடி கட்சியை அதன் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் தொகுதியான மைன்புரியில் தோற்கடித்து, அங்கு பாஜகவின் முதல் வெற்றியை உறுதி செய்வது மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு கடினமான பணியாக இருக்கும்.
ஜிதேந்திர சிங் ஆகஸ்ட் 28 முதல் மூன்று நாள் சுற்றுப்பயணமாக மைன்புரிக்குச் சென்று, வணிகத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்களுடன் சந்திப்புகளை நடத்தினார். பிரதமர் மோடியின் ஆட்சியின்கீழ் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக, ‘இந்தியாவின் வளர்ச்சி’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்களின் கருத்துகளையும் ஒத்துழைப்பையும் அவர் கோரினார். உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் பாஜக தொண்டர்களுடனான சந்திப்புகளிலும் அவர் கலந்து கொண்டார். மேலும், பாஜக ஏன் மைன்புரியை வெல்லவில்லை என்று அவர்களிடம் கேட்டார். அமைச்சர் உள்ளூர் மக்களவை ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அரசாங்க திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
அஸ்வினி வைஷ்ணவ்
ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிஜ்னோர் மற்றும் நாகினாவுக்கு அமைச்சர் சென்று ரயில்வே திட்டங்களை ஆய்வு செய்தார். அவர் பாஜக தொண்டர்களை சந்தித்து உள்ளூர் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மோடி அரசு செய்து வரும் பணிகள் குறித்து அறிவுஜீவிகளுடன் கலந்துரையாடினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.