பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுக்கும், பாஜக பிரமுகரின் மகனுக்கும் இணையம் வாயிலாக திருமணம் செய்யப்பட்ட சுவாரசிய சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தஷீன் சாஹித் என்பவர் பாஜக பிரமுகராக பதவி வகித்து வருகிறார். இவரது மூத்த மகனான முகம்மது அப்பாஸ் ஹைதர் என்பவருக்கும், பாகிஸ்தானின், லாஹூர் பகுதியைச் சேர்ந்த அந்த்லீப் சஹ்ரா என்ற பெண்ணுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. எனினும், இரு நாட்டுக்கும் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மணப்பெண்ணின் தாயார் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பாகிஸ்தானில் உள்ள மருத்துவனையில் அனுமதித்தனர். இச்சூழலில், நிச்சயிக்கப்பட்ட இருவருக்கும் ஆன்லைனில் வீடியோ கால் மூலம் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
அதன்பேரில், இருவீட்டாரும் ஆன்லைன் மூலமாக அவரவர் இருப்பிடத்தில் இருந்தே திருமணத்தில் பங்கேற்றனர். ஷியா மதத் தலைவரான மௌலானா மஹ்ஃபசூல் ஹசன் கான், இத்திருமணத்தை இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடத்தி வைத்தார்.
மேலும், மணப்பெண்ணுக்கு எந்த விதமான சிக்கலும் இன்றி விரைவில் விசா கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.