கடவுளும் பேராசையும் - சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கத்தின் காட்சிப் பொருளான மஹாகாலேஷ்வர் கோயில் நடைபாதையில் உள்ள சிலைகள் பலத்த காற்றினால் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை எழுப்பி வருவதால், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.,வை எதிர்கொள்வதற்கான சரியான ஃபார்முலா தன்னிடம் இருப்பதாக காங்கிரஸ் நம்புகிறது.
சப்தரிஷிகள் அல்லது ஏழு பெரிய ரிஷிகளை (துறவிகள்) சித்தரிப்பதற்காகக் கட்டப்பட்ட ஏழு சிலைகளில் ஆறு இடிந்து விழுந்ததற்கு ஊழல்தான் காரணம் என்று கூறிய காங்கிரஸ், தொடர்ந்து பா.ஜ.க மீது "50% கமிஷன்" குற்றச்சாட்டைக் கொண்டு வந்துள்ளது. நடைபாதையில் மொத்தம் 160 சிலைகள் உள்ளன.
இதையும் படியுங்கள்: அரசு திருமண நிகழ்வில் வழங்கிய பரிசுப் பெட்டியில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்; மத்திய பிரதேச சர்ச்சை
தேர்தல் ஆட்டங்களில் பா.ஜ.க.,வை விட காங்கிரஸ் முன்னால் உள்ளது. ஏனெனில், காங்கிரஸுக்கு கர்நாடகாவில் இருந்து ஒரு நல்ல உதாரணம் உள்ளது, அங்கு ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க.,வுக்கு எதிராக "40% கமிஷன் அரசாங்கம்" என்ற முத்திரையைக் குத்தி தேர்தலில் வெற்றி பெற்றது.
மகாகால் லோக் நடைபாதை திட்டத்தின் முதல் கட்டத்தில் சிலைகள் கொண்டு வரப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபரில், மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. கட்டுமானத்தின் தரம் குறித்த கேள்விகளை எழுப்புவது நியாயமானது மட்டுமல்ல, பா.ஜ.க எவ்வாறு மக்களின் “மத உணர்வுகளை” புண்படுத்தியது என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது.
செவ்வாயன்று, மத்தியப் பிரதேசத்திற்கான காங்கிரஸின் பொறுப்பாளர் ஜே.பி. அகர்வால், சிலைகளை கட்டும் போது "ஊழலில் ஈடுபட்டதன் மூலம்" சவுகான் அரசாங்கம் "கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையுடன் விளையாடியது" என்று கூறினார்.
“கர்நாடகாவில் நாங்கள் ‘40% சர்க்காரா’ என்ற முழக்கத்தைக் கொடுத்தோம். மத்தியப் பிரதேசத்தில் இதுபோன்ற மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுவும் உஜ்ஜயினியின் மகாகால் மந்திரில் நடந்துள்ளது. புனிதமான மகாகாலைக் கூட பா.ஜ.க தனது கொள்ளையிலிருந்து விலக்கி வைக்கவில்லை. மதத்தின் பெயரால் பெரிய கொள்ளை நடக்க கூடாது. அவர்கள் கடவுளைக் கூட விட்டுவைக்கவில்லை," என்று ஜே.பி.அகர்வால் கூறினார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், முதல்வர் பதவிக்கு முதன்மைப் போட்டியாளராக இருக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், சிலை விழுந்தது தொடர்பாக ஒரு "உண்மை கண்டறியும் குழு" அமைத்தார், அந்தக் குழு சிலைகள் "தரமற்றவை" என்று அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.,வுமான சஜ்ஜன் சிங் வர்மா செவ்வாய்க்கிழமை, “சிலைகள் பலவீனமான பொருளால் செய்யப்பட்டவை. டெண்டரின்படி சில வலைகள் பயன்படுத்தப்பட வேண்டும், ஆனால் அவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை மற்றும் தரம் குறைந்தவை. சீன தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டாம் என்று பா.ஜ.க தொடர்ந்து குரல் எழுப்புகிறது, ஆனால் நமது கடவுள்கள் தொடர்பான பொருட்களை தயாரிக்க, அவர்கள் அத்தகைய தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தினார்கள்,” என்று கூறினார்.
சிலைகளை உருவாக்க ஃபைபர்-ரீஇன்ஃபோர்ஸ்டு பிளாஸ்டிக்கை (எஃப்.ஆர்.பி) பயன்படுத்துவது குறித்து இங்கு கேள்வி எழவில்லை, ஆனால் பிரேம்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள் தரமற்றதாக இருந்தது என்று வர்மா கூறினார். அவரது கருத்துப்படி, அந்த இடத்தின் மத மதிப்பைக் கருத்தில் கொண்டு, சிலைகள் கல்லால் செய்யப்பட்டிருக்க வேண்டும். "ஒரு மத ஸ்தலத்தில், உடைந்த சிலைகளை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார்.
பின்னோக்கிப் பார்த்தால், நீண்ட காலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், குறுகிய கால கமல்நாத் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் மீது பழியை சுமத்த பா.ஜ.க முயற்சிக்கிறது.
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் பூபேந்திர சிங் செய்தியாளர் சந்திப்பில், ”காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எஃப்.ஆர்.பி சிலைகள் வைக்க முடிவு எடுக்கப்பட்டது என்றும், 7.75 கோடி ரூபாய் மதிப்பிலான 100 எஃப்.ஆர்.பி சிலைகளுக்கான பணி ஆணை மார்ச் 7, 2019 அன்று வெளியிடப்பட்டது,” என்றும் கூறினார். இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆவணங்களை அரசு வெளியிட்டது.
தங்கள் அரசாங்கத்தின் கீழ் 96.97 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது என்று பூபேந்திர சிங் கூறினார்.
“ஊழல் இல்லை. காங்கிரஸ் கேவலமான அரசியல் செய்கிறது. ஊழல் நடந்ததற்கான ஒரு ஆதாரத்தையும் அவர்கள் தரவில்லை. காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறது என்றால், இந்த திட்டம் அவர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது, எனவே அவர்கள் ஊழல் செய்தார்கள் என்பது அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நாங்கள் எங்கள் வேலையை நேர்மையாகவும் உயர் தரத்துடனும் செய்தோம், ”என்று பூபேந்திர சிங் கூறினார், மேலும், மத உணர்வுகளை புண்படுத்துவது “ அவர்களின் (காங்கிரஸின்) குணம்”, என்றும் அவர் கூறினார்.
"அத்தகைய சிலைகளில் மட்டுமே சாத்தியம்" என்ற கலைப்படைப்புக்காக சிலைகளை உருவாக்க எஃப்.ஆர்.பி பொதுவாக பயன்படுத்தப்படுகிறது என்றும், டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவில் மற்றும் இதுபோன்ற பல திட்டங்களில் எஃப்.ஆர்.பி சிலைகள் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். "மற்ற பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளில், கலைப்படைப்பு சாத்தியமில்லை அல்லது அதிக நேரம் எடுக்கும்." என்றும் அவர் கூறினார்.
மற்ற சிலைகளின் நிலை குறித்து கூறுகையில், சிலைகளை கட்டிய நிறுவனம் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அவற்றை மாற்றுவதாகவும் பூபேந்திர சிங் கூறினார்.
சிலைகள் விழுந்ததற்குக் காரணமான காற்றைப் பொறுத்தவரை, அன்றைய புயலால் அப்பகுதியில் "பல கட்டிடங்கள் மற்றும் மரங்கள்" விழுந்தன என்று உஜ்ஜைனி ஆணையர் அறிக்கை சமர்ப்பித்ததாக அமைச்சர் கூறினார்.
மஹாலோக் நடைபாதையின் முன்னணி கட்டிடக் கலைஞர் கிருஷ்ணா முராரி சர்மா மற்றும் சப்தரிஷி சிலைகளின் சிற்பி விஜய் பொட்வால் ஆகியோர் இந்தியா முழுவதும், சிலைகள் செய்ய FRP பயன்படுத்தப்பட்டது என்று கூறினர். “இது செலவுகளை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. கல், வெண்கலம் அல்லது செம்பு சிற்பங்களைச் செய்ய உங்களுக்கு மிகவும் திறமையான உழைப்பு தேவை,” என்று கிருஷ்ணா முராரி சர்மா கூறினார்.
தேவையான அனைத்து தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிலைகளில் மூன்று வருடங்கள் பணியாற்றியதாகக் கூறும் விஜய் பொட்வால், “எஃப்.ஆர்.பி விமானத் தொழில் போன்ற ஹைடெக் தொழில்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பொருள் இலகுரகம், இது எளிதில் நகர்த்தப்படலாம் மற்றும் உலோகம் மற்றும் மரத்துடன் ஒப்பிடும்போது நீடித்தது, இது காலப்போக்கில் மோசமடையத் தொடங்குகிறது. நாங்கள் கல் சிற்பங்களைச் செய்திருந்தால், அது பட்ஜெட்டை விட ஐந்து மடங்கு செலவில் செய்வதற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எடுத்திருக்கும்,” என்று கூறினார்.
குஜராத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது குறித்தும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது.
திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்த ஒரு வாரத்தில், உஜ்ஜைன் காங்கிரஸ் எம்.எல்.ஏ மகேஷ் பர்மர், கட்டுமானத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மத்தியப் பிரதேச லோக்ஆயுக்தாவை அணுகினார், அதைத் தொடர்ந்து 15 அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
குஜராத்தைச் சேர்ந்த எம்.பி. பாபரியாவுக்கு டெண்டர் கொடுக்க அதிகாரிகள் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தினர், குறைந்த விலை டெண்டர்களைப் புறக்கணித்தனர், கோடிக்கணக்கில் ஒப்பந்தக்காரர்களுக்குப் பலனளிக்கும் வகையில் மாற்றங்களை வடிவமைக்க ஒப்புக்கொண்டனர், மேலும் போதுமான சரிபார்ப்பு இல்லாமல் "தவறான விலைப்பட்டியல்களை" அகற்றினர், என்று மகேஷ் பர்மர் கூறினார்.
லோக்ஆயுக்தா நோட்டீஸ்களுக்குப் பிறகு இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இல்லையெனில் "இன்று இந்த ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் விசாரிக்கப்பட்டிருப்பார்கள்" என்று மகேஷ் பர்மர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். "பகவான் மகாகால் இந்தப் பாவிகளை மன்னிக்க மாட்டார்." என்றும் அவர் கூறினார்.
முரண்பாடாக, சிலைகள் காற்றில் விழுவதற்கு முன், கோவில் நடைபாதைக்கான உரிமை தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே மோதல் ஏற்பட்டது. 95 கோடி செலவில் தனது அரசாங்கம் தான் இதை கருத்திற்கொண்டது என்று கூறுவதற்கு சிவராஜ் சிங் சவுஹான் எந்த வாய்ப்பையும் இழக்கவில்லை. கமல்நாத் கூறுகையில், 2019 ஆகஸ்ட்டில் தான் முதல்வராக இருந்தபோது, இத்திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு ஒரு ஓவியம் வரையப்பட்டது, என்று கூறினார்.
பிரதமர் அலுவலகத்தின்படி இறுதி பட்ஜெட் ரூ.850 கோடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.