ஐயப்ப பக்தர் தீக்குளித்து தற்கொலை... நான்காவது முறையாக கேரளாவில் பாஜக பந்த்

BJP Calls for Hartal in Kerala Today : 144 தடை உத்தரவை நீக்கக் கோரி நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் நடந்த துயரம்

BJP Hartal Kerala : கேரளாவில் புகழ்பெற்று விளங்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 28ம் தேதி வரலாற்று தீர்ப்பு ஒன்றினை வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

பந்தளம் ராஜ குடும்பத்தினர் மற்றும் தலைமைத் தந்திரி உட்பட பலர் மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை நடத்தினர். அக்டோபர் மாதத்தில் மண்டல பூஜைக்காகவும், நவம்பர் மாதத்தில் சித்ர வேஷக்கட்டு நிகழ்ச்சிக்காகவும் கோவில் நடை திறக்கப்பட்டது. பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று கூறி பாஜக தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பக்தர் தற்கொலை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசன் டைம் இது. ஆனாலும் போராட்டக்காரர்களால் பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதிய கேரள அரசு 144 தடை உத்தரவினை பிறப்பித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர், கேரளாவின் தலைமைச் செயலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் கலந்து கொண்ட கேரளாவின் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் உடல்நிலை மோசமானது. அவரைக் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் காவல்துறையினர்.

இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.கே.பத்மநாபன் தலைமையில் போராட்டம் தொடர்ந்தது. அவருக்கு ஆதரவாக பலவர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருக்கும் முட்டடை பகுதியைச் சேர்ந்த வேணுகோபாலன் நாயர் (49 வயது) என்பவர் சாமியே சரணம் ஐயப்பா என கூறிக்கொண்டு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அங்கிருந்த பாஜகவினர் மற்றும் வேலையில் ஈடுப்பட்டு வந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். 90 % தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி மதியம் 3.30 மணி அளவில் உயிரிழந்தார். அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மத்திய அமைச்சரை கேள்வி கேட்ட ஐ.பி.எஸ் அதிகாரி இடம் மாற்றம் 

நான்காவது முறையாக பாஜக பந்த் (BJP Hartal Kerala)

நிலக்கல் பகுதியில் ஐயப்ப பக்தர் ஒருவர் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 2ம் தேதி அன்றி பத்தினம்திட்டா மாவட்டத்தில் 12 மணி நேர அடைப்பு அறிவிக்கப்பட்டது.

யுவா மோர்ச்சா அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நவம்பர் 11ம் தேதி திருவனந்தபுரம் மாவட்டத்தில் 12 மணி நேர கடை அடைப்பு நடத்தப்பட்டது.

இந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பின் தலைவராக செயல்படும் கே.பி.சசிகலாவினை கைது செய்தது தொடர்பாக நவம்பர் 17ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.

வேணுகோபாலன் நாயரின் மறைவைத் தொடர்ந்து நான்காவது முறையாக இன்று 12 மணி நேர கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது பாஜக.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close