அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) (Joint Parliamentary Committee) விசாரணைக்கு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் வலியுறுத்தினார். அதானி விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாகத் தாக்கி பேசினார். இதையடுத்து, கார்கே அணிந்திருந்த
லூயிஸ் உய்ட்டன் ஸ்கார்வ்-வை (scarf) சுட்டிக்காட்டி இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமா? என பா.ஜ.க தாக்கியது.
அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் பேசிய கார்கே, பிரதமர் தான் ஊழல் செய்ய மாட்டேன், மற்றவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்று கூறினார். ஆனால் ஒவ்வொரு நாளும், நாட்டில் ஒரு சில தொழிலதிபர்கள் பணக்காரர்களாகிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளில் மோடி நெருங்கிய நண்பர் ஒருவரின் சொத்து 14 மடங்கு அதிகரித்துள்ளது. 2014-ல் அவர் ரூ.50,000 கோடி சொத்து வைத்திருந்தார். இன்று அவர் 1 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். குறுக்கிய காலத்தில் வேகமான சொத்து உயர்வு எப்படி ஏற்பட்டது? மந்திரத்தால் நடந்ததா?” என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய அவைத் தலைவர் பியூஷ் கோயல், “கார்கேவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் பங்குச் சந்தைகளை பார்க்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற கூட்டுக் குழு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறார். கூட்டுக் குழு என்பது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது அரசாங்கம் தொடர்பான விவகாரங்கள் மற்றும் மோசடிகளை ஆராய்வதற்காகவே உள்ளது. கார்கே லூயிஸ் உய்ட்டன் ஆடை அணிந்துள்ளார். இதையும் ஆராய ஒரு கூட்டுக் குழு அமைக்க வேண்டுமா? அவர் ஸ்கார்வ் எப்படி வாங்கினார்? எவ்வளவு விலை? இதற்கும் கூட்டுக் குழு அமைத்து ஆராய வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூன்வாலாவும் இதுகுறித்து ட்விட் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று அணிந்திருந்த ப்ளு நிற ஜாக்கெட்டையும், கார்கேவின் உடையையும் ஒப்பிட்டுப் பேசினார். “பிரதமரின் ஜாக்கெட் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டதாகவும், திங்களன்று பெங்களூரில் நடந்த இந்திய எரிசக்தி வாரத்தின் போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மோடிக்கு வழங்கியதாகவும் கூறினார்.
பிரதமர் மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் அணிந்துள்ளார். காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது குறித்து செய்தி அனுப்புகிறார். ஆனால் கார்கே விலையுயர்ந்த லூயிஸ் உய்ட்டன் ஆடை அணிந்து வறுமை பற்றி பேசுகிறார். பர்பெர்ரி-எல்வி வறுமை நிபுணர்கள்” என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/