தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில், சமூக வலைதளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதனால் அனைத்துக் கட்சியிலும் ஐ.டி விங்க் என்ற ஒன்று செயல்பட்டு வருகிறது. இது ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தங்களது கட்சியை ப்ரொமோட் செய்யும்.
ஐ.டி விங்க் தலைவராக ஒருவரும் அவருக்குக் கீழ் ஒரு குழுவும் செயல்படும்.
இப்படித்தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீபக் தாஸ் என்பவர் பா.ஜ.க-வின் ஐ.டி பிரிவு தலைவராக உள்ளார். இரண்டு கைகளிலும் இரண்டு செல்ஃபோன்களில் பரபரப்பாக உள்ள அவருக்கு, பேட்டரியும் சார்ஜரும் எப்போதும் தயாராக உள்ளன.
இன்று முதல் கட்ட தேர்தல் நடைப்பெறும் மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்தை தான் இவர் நிர்வகித்து வருகிறார். 36 வயதாகும் தீபக் தாஸ் அங்குள்ள கோபால்பூர் எனும் சிற்றூரில் மருந்துக் கடையை நடத்தி வருகிறார்.
”நான் பா.ஜ.க ஐ.டி பிரிவின் மாவட்ட தலைவர். 1,114 வாட்ஸ் ஆப் குரூப்களுக்கு அட்மினாக உள்ளேன். கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிக்கும் நான் ட்விட்டர் டிரெண்டுகளையும் உருவாக்குகிறேன்.
என்னைப் போன்றவர்களால் சமூக வலைதளங்கள் மூலமாக மூலை முடுக்குகளில் எல்லாம், பா.ஜ.க-வுக்கு பிரச்சாரம் நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், பா.ஜ.க-வால் நேரடி பிரச்சாரத்தில் இறங்க முடிவதில்லை.
அதனால் என்னைப் போன்றவர்கள் கட்சிக்கு சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்கிறோம்.
என்னிடம் இரண்டு ஃபோன்கள் உள்ளன. ஒன்றில் 229 குழுக்களையும், மற்றொரு ஃபோனில் 885 குழுக்களையும் வாட்ஸ் ஆப்பில் நிர்வகித்து வருகிறேன்.
ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது 30 முதல் 250 வரையிலான உறுப்பினர்கள் உள்ளனர். தினமும் சிலர் நீங்குவார்கள், சிலர் இணைவார்கள். நான் காலை 6 மணியிலிருந்து இதற்காக வேலைப் பார்க்கத் தொடங்கிவிடுவேன். பாகிஸ்தான் விமான தாக்குதலின் போது 24 மணி நேரமும் வேலை செய்தேன்” எனக்கூறும் தீபக் தாஸுக்கு திருமணமாகி, 5 வயது மகள் இருக்கிறாள்.
“இதற்கு முன் நடந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பா.ஜ.க மற்றும் அதன் நிர்வாகத்தைப் பற்றி பேசினோம். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஸ்மார்ட் ஃபோன் நம்பர்களையும் சேகரித்துக் கொண்டோம். அதோடு ”நேஷனல் ஆன்லைன் மெம்பர்ஷிப் பிரச்சாரத்திலும்” நம்பர்கள் கிடைத்தது” என்கிறார்.
12-ம் வகுப்பு வரை படித்திருக்கும் தீபக், 2014-ல் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். 2015 முதல் சமூக வலைதள பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.
”இந்த வருடம் எனக்கும் 10,000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு ஃபோனை கட்சி வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதோடு எனது பயண செலவுக்கான பில்லையும் செட்டில் செய்கிறது” என சிலிர்க்கிறார் தீபக்.
முதலில் கொல்கத்தா ஐ.டி பிரிவு இவருக்கு பயிற்சியளித்ததாம். அந்த பயிற்சி முகாமுக்கு வந்த அமித்ஷா இவரை ’ஐடி போர் வீரர்’ எனப் பாராட்டினாராம். பின்னர் சமூக வலைதளங்களில் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பது பற்றிய முழு விபரங்கள் அடங்கிய லிஸ்ட் ஒன்று கொடுக்கப்பட்டதாம்.
இப்போது தீபக் தாஸுக்கு கீழ் கூச் பெஹார் மாவட்டத்தில் 40 பேர் பணியாற்றுகிறார்கள். அவ்வப்போது டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வார்களாம்.
“என்னிடம் பைக் இருக்கிறது. ஆனால் ஓட்ட மாட்டேன். காரணம் எப்போதும் எனது கைகளில் செல்ஃபோன் மட்டும் தான் இருக்கும். கட்சி எதாவது பதிவு போட்டுவிட்டால், அடுத்த நொடியே அதை ஆதரித்து லைக், ஷேர் செய்து, டிரெண்ட் ஆக்க வேண்டும். அதனால் கைகளை ஃப்ரீயாக வைத்துக் கொள்வேன்” எனும் தாஸிடம் மூன்றாவதாக ஒரு ஃபோனும் உள்ளது.
ஆனால் அது பேசுவதற்கு மட்டும்!