ஜார்கண்ட் தேர்தலில் பா.ஜ.கவின் பிரச்சார வியூகங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இன்று (நவ 23) பிற்பகல் 2 மணி நிலவரப்படி, இந்தியா கூட்டணியின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்), முன்னணி வகிக்கிறது. குறிப்பாக ஜே.எம்.எம் 33 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கிறது. பா.ஜ.க 22 தொகுதிகளில் முன்னணி வகித்தது. 2:30 நிலவரப்படி இந்தியா கூட்டணியின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சிபிஐ 5 மற்றும் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: As BJP fails the Jharkhand test, calls for a new tribal leadership: ‘Still presenting old faces like Babulal Marandi, Arjun Munda’
ஹேமந்த் சோரன் அரசின் மைய்யா சம்மன் யோஜனா திட்டம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்ததாக பா.ஜ.கவினர் கருதுகின்றனர். இத்திட்டம் மூலம் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் 69 சதவீத பெண்கள் வாக்களித்தனர்.
ஜார்கண்ட் பா.ஜ.கவின் மூத்த தலைவர் ஒருவர், கட்சியின் தோல்வி குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று கூறினார். எனினும், கட்சியின் பழங்குடியின தலைவர்கள் தங்கள் சமூக வாக்குகளை பெற தவறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பாபு லால் மராண்டி மற்றும் அர்ஜுன் முண்டா போன்ற பழைய தலைவர்களையே கட்சி பயன்படுத்துவதாகவும், அவர்களை பெரும்பாலான மக்கள் தற்போது ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலைமை மாற வேண்டுமென மக்கள் கருதுவதையே இது காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாநில பிரிவு தலைவராக இருக்கும் மராண்டி, பழங்குடியினர் தொகுதிக்கு பதிலாக தன்வாரில் பொதுத் தொகுதியில் ஏன் போட்டியிட்டார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.பழங்குடியினர் மத்தியில் அவர் மிகவும் பிரபலமானவராக இருந்தால், அவர் ஏன் பொது தொகுதியில் போட்டியிடத் தேர்வு செய்தார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மராண்டி மாநிலத்தின் முதல் முதலமைச்சராக பதவி வகித்தவர். கடந்த தேர்தலில் குன்தி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முண்டாவும் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தவர். முண்டாவின் மனைவி மீராவை போட்கா (தனி தொகுதி) தொகுதியில் பா.ஜ.க நிறுத்தியது. அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜே.எம்.எம் வேட்பாளரான சஞ்சிப் சர்தாருக்கு கடும் சவாலாக இருந்தார். 12-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் அவர் ஆயிரத்து 149 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார்.
பா.ஜ.க தன் பழங்குடியின தலைமையை வலுப்படுத்த, ஜே.எம்.எம்.மில் இருந்து முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனையும், ஹேமந்த் சோரனின் மைத்துனி சீதா சோரனையும் களமிறக்கியது. 9 சுற்றுகள் முடிவில் சம்பாய் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். சீதா சோரன் 10-வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் இர்ஃபான் அன்சாரியை விட 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார். பழங்குடியினத்தவரில் இருந்து புதிய தலைவர்களை பா.ஜ.க உருவாக்க வேண்டுமென அக்கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பா.ஜ.கவின் பிரச்சார வியூகங்களும் பலனளிக்கவில்லை என அக்கட்சி தலைவர் ஒருவர் கூறியுள்ளார். பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோரை இந்துக்களாக ஒருங்கிணைத்தல், ஊடுருவல்காரர்கள், லவ் ஜிஹாத் போன்ற பிரச்சார வியூகங்கள் பழங்குடியினர் வாக்குகளை கவரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த முழக்கங்கள் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் சந்தால் பர்கானாவில் பழங்குடியின வாக்காளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இருந்தன. மேலும், அவர்கள் தேர்தலில் தீர்க்கமான பங்கை வகிக்கிறார்கள். ஜார்கண்டின் பழங்குடியினர் மற்றும் ஓபிசி வாக்காளர்கள் இந்தப் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவில்லை என்பது தெரிகிறது. பழங்குடியினர் தங்கள் அடையாளத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளனர் மற்றும் ஓபிசி-கள் முற்போக்கான மனநிலையை வளர்த்து வருகின்றனர். பாஜக அல்லது வேறு எந்தக் கட்சியின் பழங்குடித் தலைவர்களும் கடந்த தேர்தல்களில் ஊடுருவல் மற்றும் லவ் ஜிகாத் பிரச்சினையை எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் மக்களுக்கு இந்த பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதை இது குறிக்கிறது,” என்று பா.ஜ.கவினர் கூறுகின்றனர்.
ஜே.எம்.எம் தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது பா.ஜ.கவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஏனெனில், மண்ணின் மைந்தர்களை பா.ஜ.க குறிவைப்பது போன்று தோற்றம் உருவாக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள 28 பழங்குடியினர் தொகுதிகளில், 2019 சட்டமன்றத் தேர்தலில் இரண்டில் மட்டுமே பா.ஜ.க வென்றது. இந்த முறை பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி ஐந்தில் முன்னிலை பெற்றுள்ளது.
செய்தி - லால்மானி வெர்மா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.