கர்நாடகாவில் பட்டியல் சாதி (எஸ்.சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்.டி) சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான பா.ஜ.க.,வின் தேர்தலுக்கு முந்தைய நடவடிக்கை பலனளிக்கவில்லை என்பதை அந்த ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் கட்சியின் செயல்பாடு எடுத்துரைக்கிறது. கடந்த முறை ஏழு எஸ்.டி தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை, மேலும், எஸ்.சி-ஒதுக்கீடு தொகுதிகளின் எண்ணிக்கை 2018 இல் 16 இல் இருந்து தற்போது 12 ஆகக் குறைந்துள்ளது.
36 எஸ்.சி-ஒதுக்கீடு தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதிகளை வென்றது, மேலும் எஸ்.டி ஒதுக்கீடு தொகுதிகளில் 15 இல் 14 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது, ஒன்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு சென்றது. 2018 இல் ஏழு எஸ்.டி தொகுதிகளையும் 12 எஸ்.சி தொகுதிகளையும் வென்ற காங்கிரஸுக்கு இந்த இரண்டு எண்களும் பெரிய அதிகரிப்பைக் குறிக்கின்றன.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க எப்படி பா.ஜ.க-வையே தோற்கடித்தது? கடும் வெற்றி பெற காங்கிரஸ் இன்னும் போராட வேண்டும் ஏன்?
வால்மீகி சமூகத்தின் உயரிய தலைவர்களில் ஒருவரான பி ஸ்ரீராமுலு போட்டியிட்ட மொளகல்முரு (எஸ்.டி) தொகுதியை பா.ஜ.க இழந்தது. ஸ்ரீராமுலு 2018 தேர்தலுக்கு முன்பே துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலுக்கு முன் காங்கிரஸில் இணைந்த குட்லிகி தொகுதி பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ.,வும், காங்கிரஸ் வேட்பாளருமான என்.ஒய் கோபாலகிருஷ்ணா, ஸ்ரீராமுலுவை தோற்கடித்தார்.
பழங்குடியினரின் முக்கியத் தலைவரும், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான சதீஷ் ஜார்கிஹோலி, யெம்கன்மார்டி தொகுதியில் நான்காவது முறையாக வெற்றி பெற்றார். ஷோரப்பூர், ராய்ச்சூர் ரூரல், மான்வி, மஸ்கி, கம்பளி, சிறுகுப்பா, பெல்லாரி ரூரல், சந்தூர், குட்லிகி, மொளகல்முரு, சால்லகெரே, ஜகளூர், எச்.டி.கோட் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எஸ்.டி-ஒதுக்கீடு தொகுதிகளில் இருந்து வெற்றி பெற்ற ஒரே மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ கரேம்மா ஜி நாயக் ஆவார். அவர் 34,256 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ சிவானகவுடாவை தோற்கடித்து தேவதுர்கா தொகுதியை வென்றார்.
முன்னாள் துணை முதல்வரும், பொதுப்பணித் துறை (PWD) அமைச்சருமான கோவிந்த் கர்ஜோல், எஸ்.சி-ஒதுக்கீடு தொகுதிகளில் தோல்வியடைந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர். அவரை பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முதோல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பி திம்மாபூர் தோற்கடித்தார். ஹாவேரி தொகுதியில் வேட்பாளரை தெரிவு செய்வதில் ஏற்பட்ட தகராறு, பா.ஜ.க.,வுக்கு இழப்பு ஏற்படுத்தியது மற்றும் காங்கிரஸின் ருத்ரப்பா மலானி 11,900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொரட்டகெரே தொகுதியில், முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி பரமேஸ்வர், பா.ஜ.க வேட்பாளரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பி.எச் அனில் குமாரை தோற்கடித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கே.எச்.முனியப்பா, தேவனஹள்ளி தொகுதியில் 4,256 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நஞ்சன்கூடு தொகுதியில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்த முன்னாள் எம்.பி.,யும், மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவருமான ஆர்.துர்வநாராயணனின் மகன் தர்ஷன் துருவநாராயணன் வெற்றி பெற்றுள்ளார்.
அவுராத் தொகுதியில் பா.ஜ.க.,வின் பிரபு சவுகான் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார், மேலும் பா.ஜ.க எம்.பி உமேஷ் ஜாதவின் மகனான தற்போதைய சிஞ்சோலி எம்.எல்.ஏ அவினாஷ் ஜாதவ் வெறும் 814 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த அக்டோபரில், கர்நாடக அரசு எஸ்.சி.,களுக்கான இடஒதுக்கீட்டை 15%-லிருந்து 17% ஆகவும், எஸ்.டி-களுக்கு 3%-லிருந்து 7% ஆகவும் உயர்த்தி அறிவித்தது. ஆதிக்கம் செலுத்தும் வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான முந்தைய நடவடிக்கையுடன், இந்த இடஒதுக்கீட்டு உயர்வு SC மற்றும் ST சமூகங்களைச் சென்றடையவும், கட்சியின் தேர்தல் வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும் என்று பா.ஜ.க நம்பியது.
இடஒதுக்கீடு அளவில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் ஒரு பகுதியாக இல்லாததால், இந்த இடஒதுக்கீடு உயர்வு இன்னும் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டில் இல்லை. ஒன்பதாவது அட்டவணை என்பது நீதிமன்றங்களில் சவால் செய்ய முடியாத மாநில மற்றும் மத்திய சட்டங்களை பட்டியலிடுகிறது. மேலும், இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் 50% உச்சவரம்பு விதித்துள்ளது. இந்த இடஒதுக்கீடு உயர்வு அறிவிப்பு மூலம், கர்நாடகா உச்ச நீதிமன்ற வரம்பை மீறி, 56% ஆக அதிகரித்து உள்ளது.
பா.ஜ.க தனது மற்றொரு சமூகப் பொறியியல் முயற்சியில், தலித்துகளில் மிகவும் பின்தங்கிய பிரிவாகக் கருதப்படும் SC இடது பிரிவினருக்கு 17% SC ஒதுக்கீட்டில் 6% உள் இட ஒதுக்கீட்டை அறிவித்தது. SC வலது குழுவிற்கு 5.5% பங்கும், பஞ்சாராக்கள் மற்றும் போவிஸ் போன்ற "தொடக்கூடிய" சமூகங்களுக்கு 4.5% பங்கும், மற்ற SC சமூகங்களுக்கு மீதமுள்ள 1% பங்கும் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வன்முறை எதிர்ப்புகளைத் தூண்டியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.