பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், அம்மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம், இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சேவை நிலை விதிகள் 2023-ல் திருத்தம் செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
நிதிஷ் குமார் அரசாங்கத்தின் ஆசிரியர் பணி நியமனக் கொள்கைக்கு எதிராக பாட்னாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், பா.ஜ.க தலைவர் ஒருவர் காவல் துறையினரின் தடியடியின் போது காம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் கூறியதாவது: “எங்கள் கட்சித் தொண்டர் ஒருவர் போலீசாரின் தடியடியில் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்வோம். இதற்கெல்லாம் நிதிஷ் குமார்தான் காரணம்.” என்று கூறினார்.
பீகார் விதான் சௌதாவை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மூத்த தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வருணா வாகனங்களைப் பயன்படுத்தியும் கலைத்தனர்.
பா.ஜ.க தொண்டர்கள் பலர் காவி குர்தா, புடவைகள், சல்வார் சூட்கள் மற்றும் பந்தனாக்கள் அணிந்து, கட்சிக் கொடியை அசைத்தபடி நடந்து சென்றனர். நிதிஷ் குமார், தேஜஸ்வி ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக டாக் பங்களா கிராசிங்கில் போடப்பட்ட தடுப்புகள் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றனர்.
மாநில பா.ஜ.க தலைவர் சாம்ராட் சௌத்ரி, காந்தி மைதானத்தில் பேரணி தொடங்குவதற்கு முன், செய்தியாளர்களிடம் கூறுகையில், 10 லட்சம் வேலைகள் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த அரசாங்கத்தை, குறிப்பாக துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
“10 லட்சம் வேலைவாய்ப்பு வாக்குறுதியை யார் கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு தனி நபர் மட்டுமே அவ்வாறு செய்துள்ளார். இது, இப்போது, வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நேரம்” என்று சவுத்ரி கூறினார். 2020-ம் ஆண்டு ஆர்.ஜே.டி தலைவரின் இளம் ஆர்.ஜே.டி தலைவரின் பிரச்சாரத்தைப் பற்றி குறிப்பிட்டு, கடந்த ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. முதல்வர் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து பா.ஜ.க-வை ஆட்சியில் இருந்து அகற்றினார்.
இதற்கிடையில், பீகார் மாநிலத்தில் சமீபத்தில் திருத்தப்பட்ட ஆள்சேர்ப்பு கொள்கைக்கு எதிராக பா.ஜ.க-வின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அனைத்து ஆசிரியர்களின் விடுமுறையையும் ஒரு வாரத்திற்கு பீகார் அரசு ரத்து செய்துள்ளது. ஆசிரியர்களின் வருகையை சரிபார்க்க அனைத்து அரசு பள்ளிகளையும் வியாழக்கிழமை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களை கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டசபையில் ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான பிரச்னையை எழுப்பியதாகக் கூறி இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற பாதுகாவலர்களால் இன்று வெளியேற்றப்பட்டனர். ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வெளியே அனுப்பி அவை பாதுகாவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டது தெரிகிறது. அவையின் மத்தியில் நின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து சுவரொட்டிகள் மற்றும் பலகைகள் பறிக்கப்பட்டன.
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பா.ஜ.க “விதானசபா ஊர்வலம்” நடத்துகிறது. அவைக்குள் இருக்கத் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்கள் திறமையற்ற முதல்வர் போன்ற ஆத்திரமூட்டும் முழக்கங்களுடன் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கோபத்தைக் காட்ட முயன்றனர்.
“ஜூலை 13-ம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகை 100 சதவீதமாக இருக்க வேண்டும்… ஜூலை 13-ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வின்போது பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூடுதல் தலைமைச் செயலாளர் (ஏ.சி.எஸ்-கல்வி) கே.கே. பதக் புதன்கிழமை எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து ஆசிரியர் ஊழியர்களின் விடுமுறையையும் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யுமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளை அம்மாநில கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது. “அவசர சூழ்நிலைகளில் மட்டுமே, விடுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும். விடுப்பு நேரடியாக கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம் இருந்து மட்டுமே எடுக்க முடியும்” என்று புதன்கிழமையும் வெளியிடப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் வெளியிடப்பட்ட கடிதங்களில் கல்வித் துறையால் குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும், புதிய ஆசிரியர் பணியாளர் சேர்ப்பு கொள்கைக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்பதைத் தடுக்கவே இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சியான பா.ஜ.க கூறியது.
தற்போது நடந்து வரும் போராட்டங்களில், பீகார் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினரை கலைக்க, பாதுகாப்புப் பணியாளர்கள் வருணா வாகனம் மூலம் தண்ணீரை பீச்சி அடித்ததோடு, தடியடியும் நடத்தினர் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
“ஆசிரியர்களுக்கான புதிய ஆட்சேர்ப்புக் கொள்கைக்கு எதிராக பா.ஜ.க போராட்டம் நடத்துகிறது. பேரணி காந்தி மைதானத்தில் தொடங்கி சட்டமன்ற வாயிலில் நிறைவடையும். போராட்டத்தில் ஆசிரியர்கள் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நிதீஷ் குமார் அரசின் சர்வாதிகார மனப்பான்மையை காட்டுகிறது” என்று மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் குற்றம் சாட்டினார்.
“முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பீகார் அரசு 10 லட்சம் வேலைகள் கொடுப்பதாகப் கூறினார்கள். ஆனால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டனர். இன்று, பா.ஜ.க ஒரு வலுவான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திலும் தெருக்களிலும் நின்று அவர்களுக்கு எதிராகப் போராடுகிறது” என்று பா.ஜ.க தலைவர் ஹரிபூஷன் தாக்கூர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பீகார் மாநில பள்ளி ஆசிரியர்கள் நியமனம், இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை, சேவை விதிகளை மாநில அரசு திருத்தியது. இது அதன் 2020 முடிவை மாற்றியது. பீகாரில் காலியாக உள்ள 1.67 லட்சம் முதன்மை, இடைநிலை மற்றும் உயர்நிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பீகாருக்கு வெளியே உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வழிவகை செய்தது.
ஜூலை 11-ம் தேதி 1.7 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்துவதில் உள்ள குடியுரிமைக் கொள்கையை அகற்றும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து ஆசிரியர் பணி ஆர்வலர்கள் பாட்னாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொள்கை மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை பணியில் பங்கேற்க அனுமதிக்கிறது.
இந்த போராட்டத்தில் சில ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அந்த ஆசிரியர்களை அடையாளம் காண மாவட்ட கல்வி அதிகாரிகளை கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.