BJP leader Mukul Roy rejoins TMC : பாஜக துணைத் தலைவர் முகுல் ராய் மே. வங்க முதல்வர் மமதா பானர்ஜி முன்னிலையில் இன்று மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கொல்கத்தாவில் நடைபெற இந்த நிகழ்வில் அவருடைய மகன் சுப்ராஷ்ஷூ ராயும் டி.எம்.சி. கட்சியில் இணைந்து கொண்டார்.
சிறிது நேரத்திற்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திற்கு தன் மகனுடன் சென்றார் முகுல். பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியும் தலைமையகத்திற்கு வந்தார்.
மமதாவின் நெருங்கிய வட்டங்களில் ஒருவராக கருதப்பட்ட முகுல் ராய் கருத்து வேறுபாடுகள் காரணமாக 2017ம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் பாஜகவில் இணைய இவர் முக்கிய பங்காற்றினார்.
மமதா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, முகுல் ராயின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பிறகு முகுல் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்வது தொடர்பான தகவல்கள் பரவின. அபிஷேக் வருகையை தொடர்ந்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் ராயை மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்தார். பிரதமர் மோடி ராயை தொடர்பு கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது. மே மாதம் மத்திய வாரத்தில் இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக வீட்டில் சுயதனிமைப்படுத்திக் கொண்டார் ராய். மே 2ம் தேதி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மிகவும் அமைதியாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு நிறைய தலைவர்கள் சென்றனர். தற்போது இது பாஜக தலைவர்கள் ”எக்ஸிட் டோரை” பார்ப்பதற்கான தருணம். பலரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைவது குறித்து தங்களின் விருப்பத்தை மமதாவிடம் தெரிவித்துள்ளனர். சிலர் சமூக வலைதளங்களில் தங்களின் வருத்தங்களை குறிப்பாக வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு, ஹௌராவின் டோம்ஜூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் டி.எம்.சி. கட்சியின் அமைச்சர் ராஜிப் பானர்ஜீ, மேற்கு வங்க மக்கள் அவர்களின் முடிவை தெளிவாக கூறிவிட்டனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மேற்குவங்கம் போராடிக் கொண்டிருக்கும் போது ஏதேனும் அரசியல் செய்வதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தினால் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ட்வீட் செய்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.