மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர சிவராஜ் சிங் சௌஹான் அரசின் நலத்திட்டங்கள் உதவும் என பா.ஜ.க நம்பும் அதே வேளையில், காங்கிரஸ் அரசின் நலத்திட்டங்கள் ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல்களில் வாய்ப்புகள் குறித்து பா.ஜ.க கவலைப்படுவதாக தெரிகிறது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க-வின் திட்டத்திற்கு அவை முக்கியமானவை என்பதால், வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு - குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் - பா.ஜ.க தயார் ஆவதைத் தீவிரப்படுத்துகிறது. தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில், மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பா.ஜ.க-வின் பரம எதிரியான காங்கிரஸ் ஆட்சி செய்கிறது.
மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர, சிவராஜ் சிங் சௌகான் அரசு மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்கள் மீது கட்சி சவாரி செய்ய முடியும் என்று பா.ஜ.க தலைமை நம்பும் அதே நேரத்தில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் கட்சியின் வாய்ப்புகள் குறித்து கவலை கொண்டுள்ளதாக தெரிகிறது. இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மத்தியப் பிரதேசத்டில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்த டிசம்பர் 2018 மற்றும் மார்ச் 2020-க்கு இடையேயான காலத்தைத் தவிர்த்து, 2003 ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க அம்மாநிலத்தில் ஆட்சி செய்து வருவதால், பா.ஜ.க சோர்வாகப் போராடி வருகிறது. இருப்பினும், சிவராஜ் சிங் சௌஹான் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள், குறிப்பாக அதன் லட்லி பெஹ்னா திட்டம், மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததாக நம்பப்படும் நிலையில், மாநிலத்தில் பா.ஜ.க-வின் மனோபலம் அதிகரித்துள்ளது.
அண்டை மாநிலமான ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் போன்ற நலத்திட்டங்களை மக்கள் வரவேற்பு அளித்துள்ளது குறித்து பா.ஜ.க கவலைப்படுவதாகத் தெரிகிறது என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“ஒரு வலுவான கட்சி அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் தயாரிப்புகள் மற்றும் முதல்வர் சௌஹானின் நலத்திட்ட முயற்சிகள் மூலம் ஆட்சிக்கு எதிரான காரணங்களை அகற்றுவதன் மூலம் பா.ஜ.க மத்தியப் பிரதேசத்தில் முன்னேறி வருகிறது” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
“சௌஹானின் லாட்லி பெஹ்னா திட்டம் அரசியல் களத்தின் போக்கையே மாற்றும் ஒன்றாக இருக்கும். எங்கள் மதிப்பீட்டில், இந்த திட்டம் ஏற்கனவே மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது”என்று ஒரு பா.ஜ.க தலைவர் கூறினார். பா.ஜ.க அரசின் முதலமைச்சர் லட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ், 23 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு அவர்களின் நிதி வலுவூட்டலுக்காக ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 அனுப்பப்படுகிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில், பா.ஜ.க அரசாங்கம் இந்தத் திட்டத்தின் இரண்டாவது தவணைப் பணத்தை 1.25 கோடி பெண்களுக்கு செலுத்தியது” என்று கூறினார்.
விலைவாசி உயர்வு தொடர்பாக வாக்காளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியைக் கருத்தில் கொண்டு, சமையல் எரிவாயு உள்ளிட்ட சில புதிய மானியங்களை சிவராஜ் சிங் சௌகான் அரசாங்கம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
பல பா.ஜ.க தலைவர்கள் சிவராஜ் சிங் சௌஹான் ஒரு தலைசிறந்த பிரச்சாரகர் என்றும், துல்லியமும் சகிப்புத்தன்மையும் கொண்டவர் என்றும், அது அவரது போட்டியாளர்களுக்கு அவரை ஒரு வலிமையான சவாலாக மாற்றும் என்றும் கூறினர். “சௌகானின் முக்கிய போட்டியாளரான கமல்நாத்தால் அவரைப் பிடிக்க முடியாது. சௌஹானுக்கு எதிராக மக்கள் கோபம் இல்லை, சோர்வு தான் உள்ளது. ஆனால், பிரபலமான திட்டங்களுடன், அவருக்கு நல்லெண்ணம் உள்ளது - மேலும் அதைக் கட்டியெழுப்பும் திறன் அவருக்கு உள்ளது” என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தில் அதன் தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக, கடினமான இடங்களிலும், குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளிலும், பாரம்பரியமாக காங்கிரஸுக்கு முன்னிலை வகிக்கும் தொகுதிகளிலும், மும்முனைப் போட்டி நிலவுவதை உறுதி செய்ய பா.ஜ.க முயற்சிக்கிறது. ஏற்கனவே தனது வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கியுள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தவிர, மாநிலத்தின் 230 இடங்களில் 80 இடங்களில் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை அறிவித்த பழங்குடியின அமைப்பான ஜெய் ஆதிவாசி யுவ சங்கதன் (JAYS) போன்ற சிறிய கட்சிகளும் களத்தில் இருக்கின்றன.
அமைப்பு ரீதியாக, பா.ஜ.க ஏற்கனவே மத்திய அமைச்சர்களான பூபேந்தர் யாதவ் மற்றும் அஷ்வினி வைஷ்ணவையும் பொறுப்பாளராகவும், துணைப் பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது. மேலும், குவாலியர் சம்பல் பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கட்சியின் பிரச்சார நிர்வாகக் குழுவின் அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச பா.ஜ.க-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவை போக்க, மாநில தலைமை பல தலைவர்களை கட்சி கட்டமைப்பில் இடமளித்து, அவர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி வருகிறது. அக்கட்சி சமீபத்தில் மாவட்டங்களிலும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது.
கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வியால் திணறிப்போன பா.ஜ.க, ஆரம்ப கட்டங்களில் சிவராஜ் சிங் சௌஹான் அரசுக்கு எதிரான ஊழல் குறித்த காங்கிரஸ் பிரச்சாரத்தை எதிர்கொள்ள விரும்புகிறது. பா.ஜ.க அரசு ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டிய பிரியங்கா காந்தி வத்ரா, கமல்நாத் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் யாதவ் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களின் சமூக ஊடக கையாளுபவர்களுக்கு எதிராக மாநில காவல்துறை சமீபத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
ஒருங்கிணைந்த நடவடிக்கையில், காங்கிரஸ் தலைவர்கள் சிவராஜ் சிங் சௌஹான் அரசாங்கம் 50 சதவீத கமிஷன் பெற்றதாகக் குற்றம் சாட்டினர் - இது மே மாதம் கர்நாடகாவில் நடைபெற்ர தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிகரமான பிரச்சாரத்தின் மறுதொடக்கம் ஆகும் - கர்நாடகாவில் அப்போது ஆட்சியில் இருந்த பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தை ‘40 சதவீத கமிஷன் அரசு’ என்ற பிரச்சாரம் செய்து குறிவைத்தது.
“காங்கிரஸின் அந்த பிரச்சாரத்திற்கு கர்நாடகாவில் பா.ஜ.க பெரும் விலை கொடுத்தது. மத்தியப் பிரதேசத்தில் அப்படி நடக்க விடக்கூடாது” என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கான நடவடிக்கை, மத்தியப் பிரதேசத்தில் அவர்களின் இந்த குற்றச்சாட்டு பிரச்சாரத்தை கட்சி அனுமதிக்காது என்பதற்கான வலுவான சமிக்ஞையை தெரிவிப்பதாகும்.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் கதை வேறு, இங்கு முறையே முதல்வர் கெலாட் மற்றும் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கங்கள் பல்வேறு நலத்திட்டங்களுக்கான முக்கிய உந்துதல் பா.ஜ.க முகாமில் சிறிது கவலையை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, ராஜஸ்தானில், பா.ஜ.க தனது வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கும் நிலையில், சிரஞ்சீவி திட்டத்தின் பிரபலத்தைப் பற்றி அக்கட்சி கவலைப்படுகிறது. “சிரஞ்சீவியின் பரவலான கவரேஜ் மற்றும் பொது மக்களின் வரவேற்பு ராஜஸ்தானில் காங்கிரஸின் மன உறுதியை உயர்த்தியுள்ளது. அதை எதிர்கொள்ள கட்சி ஒரு வியூகத்தை வகுக்க வேண்டும்” என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.