லடாக் சமூகத்தினர் கழுதைப்பாலை சோப்பு தயாரிக்க பயன்படுத்துகின்றனர். அந்த சோப்பு பெண்களின் சருமத்தை அழகாக வைத்திருக்கும் என்று மேனகா காந்தி கூறினார்.
பா.ஜ.க எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, கழுதைப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் சோப்பு பெண்களின் உடலை அழகாக வைத்திருக்க உதவுகிறது என பேசியது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் சௌபால் பேசிய அவர், “எகிப்தின் புகழ்பெற்ற ராணியான கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளிப்பது வழக்கம். டெல்லியில் கழுதைப்பாலில் தயாரிக்கப்படும் சோப்பின் விலை ரூ.500. ஆட்டுப்பாலைக் கொண்டும், கழுதைப் பாலைக் கொண்டும் ஏன் சோப்புகளைத் தயாரிக்கக் கூடாது?” என்று பேசினார்.
மேலும், லடாக்கில் கழுதைப் பாலை சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் சமூகத்தைப் பற்றி அவர் பேசினார். “எப்போது கடைசியாக கழுதையைப் பார்த்தீர்கள்? அவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கழுதைகளைப் பயன்படுத்துவதை சலவைத் தொழிலாளர்கள் நிறுத்திவிட்டனர். ஒரு சமூகம் லடாக்கில் கழுதைகளின் எண்ணிக்கை குறைவதைப் பார்க்கிறது. அதனால், அவர்கள் கழுதைப் பாலை சோப்பு தயாரிக்க பயன்படுத்த ஆரம்பித்தனர். கழுதைப்பாலில் தயாரிக்கப்படும் சோப்புகள் ஒரு பெண்ணின் உடலை என்றென்றும் அழகாக வைத்திருக்கும்.” என்று மேனகா காந்தி கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பல பகுதிகளில் வேகமாக காடுகள் அழிக்கப்படுவதைப் பற்றி பேசினார். “மரம் மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது. மரணத்தில் கூட, குடும்பங்கள் வறுமையில் விடப்படுகின்றன. மரத்தின் விலை சுமார் 15,000-20,000 ரூபாயாக உள்ளது. மாறாக, மாட்டுச் சாணக் கட்டைகளில் நறுமணப் பொருட்களைச் சேர்த்து இறந்தவர்களை தகனம் செய்ய பயன்படுத்த வேண்டும். இது சடங்குகளின் விலையை வெறும் 1,500-2,000 ரூபாயாகக் குறைக்கும். மேலும், இந்த மரக் கட்டைகளை விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்” என்று மேனகா காந்தி கூறினார்.
“விலங்குகளில் இருந்து பணம் சம்பாதிப்பதை தான் கடுமையாக எதிர்க்கிறேன்” என்று மேனகா காந்தி கூறினார். “மாடு, ஆடு வளர்த்து யாரும் பணக்காரர் ஆகவில்லை. சுல்தான்பூரில் உள்ள 25 லட்சம் மக்களில் போதுமான மருத்துவர்கள் இல்லை. எருமை, ஆடு நோய்வாய்ப்பட்டால் லட்சங்கள் செலவாகும். பெண்கள் கால்நடைகளுக்கு உதவுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், அவர்களால் எவ்வளவு செய்ய முடியும்? ஒரு விலங்கிலிருந்து சம்பாதிக்க உங்களுக்கு ஒரு பத்தாண்டு ஆகும். ஆனால், அது ஒரு நாள் இறந்தால் எல்லாம் முடிந்து விடும்” என்று மேனகா காந்தி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“