குஜராத்தில் 31 மாவட்ட பஞ்சாயத்து, 231 தாலுகா பஞ்சாயத்து மற்றும் 81 நகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. குஜராத் மாநில தேர்தல் ஆணையம் வலைதளத்தில் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாநகராட்சி தேர்தலைப் போன்று, நகராட்சித் தேர்தலிலும் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கடந்த மாதம் 21-ம் தேதி அகமதாபாத், ராஜகோட், சூரத், வதோதரா, பவநகர், ஜாம்நகர் ஆகிய மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த 6 மாநகராட்சிகளையும் பாஜக கைப்பற்றியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் சராசரியாக 66.67 சதவீத வாக்குகள் பதிவானது. தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் 66.86 சதவீத வாக்குகளும், நகராட்சி பதவிகளுக்கான தேர்தலில் சராசரியாக 59.05 சதவீத வாக்குகளும் பதிவானது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முணை போட்டிகள் நிகழ்கின்றன.
மொத்தமுள்ள 81 நகராட்சிகளில், 67 ல் பாஜக முன்னிலை வகுக்கிறது. காங்கிரஸ் ஏழு இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சியும் 1 இடத்திலும் முன்னிலை வகுக்கின்றன.
அனைத்து மாவட்ட பஞ்சாயத்து இடங்களிலும் ( 31) பாஜக முன்னிலை வகுக்கிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பின்னடவை சந்தித்துள்ளன. சவுராஷ்டிரா-கட்ச்பகுதிகளில், 10 மாவட்ட பஞ்சாயத்து இடங்களை பாஜக கைப்பற்றியது. 2015 ஆம் ஆண்டில், போர்பந்தர், கட்ச் ஆகிய இரண்டு மாவட்ட பஞ்சாயத்து இடங்களை பாஜக வென்றிருந்த நிலையில், இந்தமுறை ராஜ்கோட், ஜாம்நகர், தேவ்பூமி துவாரகா, கிர் சோம்நாத், அம்ரேலி, ஜுனகத், பொட்டாட், மோர்பி, சுரேந்திரநகர் ஆகிய இடங்களை கைப்பற்றியது.
Gujarat Local Body Election Results 2021 Live Updates
231 தாலுகா பஞ்சாயத்துகளில் 185 ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. 34 ல் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. குஜாரத் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளை பாஜகவின் வெற்றி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக மாநகராட்சித் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சித் தேர்தல்களின் முடிவுகள், வளர்ச்சி மற்றும் நல்லாட்சி அரசியல் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை தெளிவாகக் காட்டுகிறது. பாஜகவை மீண்டும் நம்பியதற்காக மாநில மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil