/tamil-ie/media/media_files/uploads/2019/01/MLA-Sitaram-Adivasi.jpg)
MLA Seetharam Living in hut, குடிசையில் வசிக்கும் எம்.எல்.ஏ.
அரசியல்வாதிகள் என்றாலே செல்வச் செழிப்பில் மூழ்கித் திளைப்பவர்கள் என்ற எண்ணம் தானாக நம் மூளையை ஆட்கொள்ளும். அதுவும் பதவியில் உள்ளவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் இப்படியான பொதுக்கருத்தை, உடைத்து சுக்கு நூறாக்கியிருக்கிறார் ஓர் எம்.எல்.ஏ. உடனே தமிழகத்திலா? என ரொம்பவும் யோசிக்காதீர்கள்.
அவர் மத்தியபிரதேச மாநிலம், சியோப்பூர் மாவட்டத்திலுள்ள, விஜய்பூர் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ சீதாராம் ஆதிவாசி. 55 வயதாகும் இவர் தேர்தலின்போது சமர்ப்பித்த சொத்துக் கணக்கில், ரொக்கமாக 25000 ரூபாயும், இரண்டு வங்கிக் கணக்குகளில் சேமிப்பாக 21000 ரூபாயும் இருப்பதாகக் கூறியிருந்தார். அதோடு தனக்கு 2 ஏக்கர் நிலமும், ஒரு குடிசை வீடும் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அந்த குடிசை வீட்டில், சீதாராமும் அவரது மனைவி இமார்தி பாயும் வசித்து வருகிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ இப்படியான ஒரு குடிசை வீட்டில் வசித்து வருவதை தாங்கிக் கொள்ள முடியாத விஜய்பூர் தொகுதி மக்கள் தாங்களாகவே ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்க முன் வந்துள்ளனர்.
இரண்டு அறைகளைக் கொண்ட அந்த வீட்டைக் கட்டுவதற்கு, தொகுதி மக்கள் நிதியுதவி செய்து வருகிறார்கள். இது குறித்து பேசிய தொகுதி மக்களில் ஒருவர், “எந்த எதிர்பார்ப்புமின்றி, எங்களின் தேவைகளுக்காக தினமும் போராடி வரும் எங்கள் எம்.எல்.ஏ-வுக்காக, எங்களால் இயன்றதைச் செய்கிறோம்” என்றார்.
‘நான் தேர்தலில் வெற்றி பெற்றதும், என் எடைக்கு நிகராக எனக்கு காசு வழங்கினார்கள். அந்த பணத்தை வைத்து, குடிசையில் சில பராமரிப்புப் பணிகளை செய்தேன். தற்போது வீடு கட்டித் தருகிறார்கள், இப்படி தொகுதி மக்கள் என் மீது காட்டும் அன்புக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன்” என்றார் இந்த அபூர்வ எம்.எல்.ஏ சீதாராம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.