சன்னகிரியில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவர், பத்தாண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வில் இருந்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா வெளியேறியதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறி, பின்னர் லிங்காயத்துகளின் பலத்துடன் மீண்டும் கட்சிக்குத் திரும்பினார்.
லஞ்ச வழக்கில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ மாதல் விருபக்ஷப்பா, முன்னாள் முதல்வரும், லிங்காயத் பிரமுகருமான பி.எஸ் எடியூரப்பாவின் நெருங்கிய உதவியாளரும், தாவங்கரே மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவர்.
அவர் மீதும் அவரது மகன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், சில வாரங்களுக்குப் பிறகு பா.ஜ.க எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார். விருபாக்ஷப்பா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். ஆனால், நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்ததையடுத்து, லோக் ஆயுக்தா போலீசார் திங்கள்கிழமை அவரை தாவணகெரேவில் உள்ள அவரது தொகுதியான சன்னகிரியில் கைது செய்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவுக்குச் சென்றபோது, தேசபக்தர்களின் கட்சியால் மட்டுமே ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று பா.ஜ.க-வை ஆதரிக்க வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட் லிமிடெட் (KSDL) நிறுவனத்திடம் இருந்து மார்ச் 2 ஆம் தேதி மாலை டெண்டர் பெறுவதற்காக லஞ்சம் வாங்கிய விருபாக்ஷப்பாவின் மகன் வி பிரகாஷ் மடலை லோக் ஆயுக்தா பிடித்ததாகக் கூறப்படுகிறது. பிரகாஷ் பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (BWSSB) தலைமை கணக்காளராக பணிபுரிந்தார், அதே நேரத்தில், விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ மாநில பொதுத்துறை பிரிவின் தலைவராக உள்ளார். விருபாக்ஷப்பா கே.எஸ்.டி.எல்-லில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்.
எம்.எல்.ஏ. விருபாக்ஷப்பா சில நாட்களுக்குப் பிறகு சன்னகரியில் மீண்டும் வந்தார். அவருக்கு முன்ஜாமீன் கிடைத்ததும், அவரது ஆதரவாளர்கள் தொகுதியில் பேரணி நடத்தினர். மேலும், சிலர் தாவணகெரேவில் உள்ள ஒரு கிராம கோவிலில் அவரது புகைப்படத்திற்கு பால் ஊற்றினர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராடி வரும் பா.ஜ.க தலைமையிலான அரசுக்கு இந்த நிகழ்வுகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த கைது நடவடிக்கை, தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சியை தாக்குவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் காரணங்களை வழங்க வாய்ப்புள்ளது.
72 வயதான விருபாக்ஷப்பா, சன்னகிரியில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். மெலும், இவர் இந்த மாவட்டத்தில் மிகவும் பிரபலமான முகங்களில் ஒருவர். இவர் லிங்காயத் சமூகத்தின் துணைப்பிரிவான சதர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் பா.ஜ.க-வில் சேர்ந்தார், 2008-ல் தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார்.
2012-ல் எடியூரப்பா பா.ஜ.க-வுடனான உறவைத் துண்டித்து, கர்நாடக ஜனதா பக்ஷாவை (கேஜேபி) தொடங்கியபோது, விருபாக்ஷப்பா அவரைப் பின்தொடர்ந்து வெளியேறி அவருக்கு தனது விசுவாசத்தை உறுதிப்படுத்தினார். அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வட்னல் ராஜண்ணாவிடம் தோல்வியடைந்தார்.
2014-ல் எடியூரப்பா பா.ஜ.க-வுக்குத் திரும்பிய பிறகு, விருபாக்ஷப்பாவும் பா.ஜ.க-வுக்கு வந்தார். 2018-ல், விருபாக்ஷப்பா சன்னகிரி தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால், அவருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, அவர் கே.எஸ்.டி.எல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பா.ஜ.க-வுக்கு உள்ளே இருப்பவர்களின் கருத்துப்படி, விருபாக்ஷப்பாவின் மற்றொரு மகன் மல்லிகார்ஜுன் மடலுக்கு அரசியல் ஆசை இருக்கிறது. அவர் பா.ஜ.க சீட் வாங்க முயற்சிக்கிறார் என்கிறார்கள்.
லஞ்சம் கேட்டதாக பிரசாந்த் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் கருத்துப்படி, பெங்களூரு கிரசென்ட் சாலையில் உள்ள தனது தந்தையின் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் போது பிரசாந்த் பிடிபட்டார். அங்கிருந்து ரூ.2.02 கோடி ரொக்கத்தை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து,பிரசாந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.6.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் தகவல் அறிக்கையில், விருபாக்ஷப்பாவை முக்கிய குற்றவாளியாகவும், பிரசாந்தை 2-வது குற்றவாளியாகவும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர். சுரேந்திரா, பிரசாந்தின் அலுவலகத்தில் கணக்காளர்; பிரசாந்தின் உறவினர் சித்தேஷ்; மற்றும் கர்நாடக அரோமாஸ் நிறுவனத்தின் களப்பணியாளர்களான ஆல்பர்ட் நிக்கோலா மற்றும் கங்காதர் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“