இந்திய ஜனநாயகம் குறித்து இங்கிலாந்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரை மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யும் நடவடிக்கையில் பாரதிய ஜனதா கட்சி இறங்கியுள்ளது.
மேலும், வயநாடு எம்.பி.யை சபையில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்புக் குழுவை அமைக்க கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவை கட்சி ஏற்கனவே அணுகியுள்ளது.
இந்த விவகாரம் வெறும் சலுகைப் பிரச்னை மட்டுமல்ல, அதையும் தாண்டியது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், ஜனவரி மாதம் காஷ்மீரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது கூறிய பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் குறித்த தகவல்களைக் கோரி ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராகுல் காந்தியின் மேடை பேச்சு, சமூக ஊடக பதிவுகளை போலீசார் அறிந்திருப்பதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புவதாகவும் ஒரு அதிகாரி கூறினார்.
தொடர்ந்து, அவர் மீது சபை நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில், பா.ஜ., வட்டாரங்கள் கூறுகையில், 2005ல் நடந்த பண மோசடி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அடிப்படையில் சிறப்பு குழுவை அமைக்க, சபாநாயகரை அணுகி உள்ளோம்.
காங்கிரஸ் தலைவர் பவன் குமார் பன்சால் தலைமையிலான ஒரு சிறப்புக் குழு, 10 மக்களவை எம்.பி.க்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவர்கள் தொடர்வது “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியது. அது அவர்கள் வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது.
சிறப்புக் குழு அமைக்கப்பட்டால், மக்களவையில் உள்ள பலத்தைப் பொறுத்து அதில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும். ஒரு சிறப்புக் குழு வழக்கமாக ஒரு மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இது குறித்து பாரதிய ஜனதா மூத்தத் தலைவர் ஒருவர், “ராகுல் காந்தி மீதான பிரச்னையை பாஜக மிகவும் தீவிரமானதாகக் கருதுகிறது, அது ஒரு சலுகைப் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது. எனவே இது தீவிரமாக நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ”என்றார்.
மேலும், வியாழக்கிழமை (மார்ச் 16) செய்தியாளர்களை சந்தித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த விவகாரம் “சலுகைக்கு அப்பாற்பட்டது” என்றும், “கிடைக்கும் அனைத்து கருவிகள், விதிகள் மற்றும் மரபுகளை” கட்சி பயன்படுத்த முற்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து, “தேசம் தொடர்பான எந்தவொரு விஷயமும் அனைவருக்கும் கவலை அளிக்கும் விஷயம். காங்கிரஸுக்கோ அல்லது அதன் தலைமைக்கோ என்ன நடக்கிறது என்பதில் எங்களுக்கு அக்கறை இல்லை.
ஆனால் அவர் தேசத்தை அவமதித்தால், நாங்கள் அமைதியாக இருக்க முடியாது, ”என்று அவர் கூறினார்.
மேலும், “இந்திய எதிர்ப்பு சக்திகளின் மொழியும் அவரது மொழியும் ஒன்றுதான். அவர்கள் ஒரே வரியில் பேசுகிறார்கள். இதே மொழியை ராகுல் காந்தி பயன்படுத்தியுள்ளார். இது இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அனைவரின் மொழியாகும்,” என்றார் ரிஜிஜு.
முன்னதாக ஸ்ரீநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, “நான் நடந்து செல்லும் போது, நிறைய பெண்கள் அழுது கொண்டிருந்தனர்… அவர்களில் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக என்னிடம் கூறியுள்ளனர். சிலர் தங்கள் உறவினர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறினர். போலீசில் சொல்ல வேண்டுமா என்று கேட்டபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்… காவல்துறையிடம் சொல்லக்கூடாது. மேலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்” எனக் கூறினர் என்றார்.
இந்தப் பேச்சு தொடர்பாக டெல்லி காவல் துறை ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ், “ஜனநாயகம், பெண்கள் அதிகாரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் எதிர்க்கட்சிகளின் பங்கை பலவீனப்படுத்துவதற்கான முயற்சி” எனக் கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/