மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், திருணாமுல் கட்சியில் இணைந்த தனது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப பாஜக எம்பி முடிவு செய்துள்ளார்.
பிஷ்ணுபூர் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் செளமித்ரா கான், தனது மனைவி சுஜாதா மொண்டல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மிகப் பெரிய தவறு என்றும், விரைவில் அவருக்கு விவாகரத்து வக்கீல் நோட்டிஸ் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேற்கு வங்க பாஜக யுவ மோர்ச்சா தலைவரான செளமித்ரா கான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்,“ உனக்கு நான் முழு சுதந்திரத்தையும் தருகிறேன். 'கான்' என்ற எனது குடும்பப்பெயரை உனது பெயரிலிருந்து நீக்கிடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் அத்துமீறல்களை நினைவுபடுத்திய அவர்,“அவர்கள் உனது மின்சார விநியோகத்தை குறைத்தனர். தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் இருந்தன. மம்தா பானர்ஜியும், அபிஷேக் பானர்ஜியும் உனது வேலையை பறித்தனர். உனக்கு அளித்த வாக்குறுதியை நான் கடைப்பிடித்தேன். ஒவ்வொரு மாதமும் எனது சம்பளத்தில் 50% தொகை உனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது … தீங்கு விளைவித்தவர்களுடன் இப்போது கைகோர்த்துவிட்டீர்கள்” என்று தெரிவித்தார்.
அமித் ஷாவுடன் சுஜாதா மொண்டல்
பாஜக இல்லாமல் நான் இல்லை என்பதை வலியுறித்திய அவர் “பாஜக எனக்கு எல்லா அங்கீகாரத்தையும் அளித்தது. கடந்த காலங்களில் நீங்கள் எனக்காக பிரச்சாரம் செய்ததற்கு நான் உண்மையில் கடமைப்பட்டுள்ளேன். ஆனால், பாஜக என்ற அரசியல் கட்சி இல்லாமல் நான் பாராளுமன்றத் தேர்தலில் வென்றிருக்க மாட்டேன்,”என்றும் கூறினார்.
சுஜாதா மொண்டல் கான் இன்று முறைப்படி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜகவில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், சட்டமன்றத் தேர்தலில் முகம் இல்லாத ஒரு கட்சிக்கு தான் பணியாற்ற விரும்பவில்லை என்றும் சுஜாதா தெரிவித்தார்.
ஊழல் குற்றங்களுக்காக பாங்குரா மாவட்டத்துக்குள் நுழைய செளமித்ரா கானுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த போது, சுஜாதா தைரியமாக பிரச்சாரம் செய்து தனது கணவனை வெற்றியடை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பாஜகவின் தேர்தல் உத்திகளை விமர்சித்த அவர் , "பாஜகவில் முதல்வர் பதவிக்கு ஆறு பேர் வரிசையில் உள்ளனர். துணை முதல்வர் பதவிக்கு காத்திருப்போர் பட்டியலில் 13 பேர் உள்ளனர். நான் பாஜகவில் இருந்தபோது, பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. மக்களவைத் தேர்தலுக்கு இந்த யுக்தி சரியானதாக இருந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் களம் வேறு. பாஜக மேற்கு வங்கத்தில் அரசியல் செல்வாக்கு பெற்றவரை கண்டுபிடிக்கத் தவறிவிட்டது” என்று தெரிவித்தார்.