மத்தியப் பிரதேசத்திற்கான 39 பெயர்களைக் கொண்ட பா.ஜ.க.,வின் இரண்டாவது பட்டியல் திங்கள்கிழமை பெரிய ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது, காங்கிரஸிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில், மூன்று மத்திய அமைச்சர்கள், 4 எம்.பி.க்கள் மற்றும் ஒரு தேசிய பொதுச் செயலாளரை பா.ஜ.க களமிறக்கியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல் மற்றும் ஃபக்கன் சிங் குலாஸ்தே, தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, எம்.பி.,க்கள் ராகேஷ் சிங் (மாநில பா.ஜ.க முன்னாள் தலைவர்), கணேஷ் சிங், ரீத்தி பதக் மற்றும் உதய் பிரதாப் சிங் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல் மற்றும் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் இப்போது பலமான போட்டியாளர்களாக இருப்பதால், பா.ஜ.க வெற்றி பெற்றால், முதல்வர் தேர்வுக்கான களம் முழுவதுமாகத் திறக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவராஜ் சிங் சவுகான் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்துள்ளார், ஆனால் 2018 ஆம் ஆண்டு முடிவுகளுக்குப் பிறகு சுருக்கமான இரண்டு ஆண்டு காலத்திற்கு பா.ஜ.க.,வை விட காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்தது. கமல்நாத் காங்கிரஸின் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து, இந்துத்துவாவுக்கு ஹிந்துத்வா, மற்றும் திட்டத்திற்கான திட்டம் போன்ற வியூகங்கள் மூலம் பா.ஜ.க.,வை வீழ்த்த களமாடி வரும் நிலையில், தற்செயலாக முதல்வர் முகமாக அறிவிக்கப்படாத சிவராஜ் சிங் சவுகானின் சோர்வு குறித்து பா.ஜ.க கவலை கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒருமுறை கூட சிவராஜ் சிங் சவுகானின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை பெயர் அறிவிக்கப்பட்ட ஏழு எம்.பி.க்களுக்கும் கட்சி முடிவு குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், சிவராஜ் சிங் சவுகானிடம் தெரிவிக்கப்படவில்லை. கட்சி முடிவு குறித்து சிவராஜ் சிங் சவுகான் அதிர்ச்சியடைந்ததாக முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. “கைலாஷ் விஜய்வர்கியா போட்டியிடலாம் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது, ஆனால் மத்திய அமைச்சர்கள் களமிறங்கியது ஆச்சரியமாக இருந்தது. உண்மையைச் சொல்வதானால், அடுத்த முதல்வர் யார் என்று இப்போது எங்களுக்குத் தெரியாது,” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசத்துக்கு பா.ஜ.க அறிவித்துள்ள இரண்டாவது பெயர் பட்டியல் இதுவாகும். 39 பெயர்கள் கொண்ட முதல் பட்டியல் ஆகஸ்ட் 18 அன்று வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் பெரிய பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ஃபக்கன் சிங் குலாஸ்தே ஆறு முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார், ராகேஷ் சிங் மற்றும் கணேஷ் சிங் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர், நரேந்திர சிங் தோமர் மூன்றாவது முறையாகவும், ரீத்தி பதக் இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுள்ளனர்.
நரேந்திர சிங் தோமர், ராகேஷ் சிங் மற்றும் உதய் பிரதாப் சிங் ஆகியோர் ராஜபுத்திரர்கள், பிரஹலாத் படேல் (லோதி) மற்றும் கணேஷ் சிங் (குர்மி) ஓ.பி.சி.,கள், ஃபக்கன் சிங் குலாஸ்தே ஒரு பழங்குடித் தலைவர் மற்றும் ரீத்தி பதக் ஒரு பிராமணர்.
மொரீனா எம்.பி.யான நரேந்திர சிங் தோமர் திமானி தொகுதியில் போட்டியிடுகிறார். சட்னா எம்.பி கணேஷ் சிங் சட்னா சட்டமன்ற தொகுதியில் நிற்கிறார்; மண்டலா எம்.பி.,யான ஃபக்கன் சிங் குலாஸ்தே, நிவாஸ் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்; ஜபல்பூர் எம்.பி ராகேஷ் சிங் ஜபல்பூர் பாசிம் தொகுதியிலும், தாமோ எம்.பி. பிரஹலாத் படேல் நரசிங்பூர் தொகுதியிலும், சித்தி எம்.பி ரீத்தி பதக் சித்தி தொகுதியிலும், ஹோஷங்காபாத் எம்.பி உதய் பிரதாப் சிங் கதர்வாரா தொகுதியிலும், கைலாஷ் விஜயவர்கியா இந்தூர்-1 தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
கேதார்நாத் சுக்லாவின் ஆதரவாளர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பழங்குடியினரின் மீது சிறுநீர் கழித்த சர்ச்சையில் சிக்கிய கேதார்நாத் சுக்லாவுக்குப் பதிலாக ரீத்தி பதக் களமிறக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரின் பாதங்களைக் கழுவி பூஜை செய்து, சர்ச்சையை சமாளிக்க முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தானே இறங்கினார்.
திங்கள்கிழமை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட 39 தொகுதிகளில் பெரும்பாலானவை பா.ஜ.க கடந்த முறை இழந்த இடங்கள். எம்.பி.க்கள் மற்றும் கைலாஷ் விஜயவர்கியா தவிர, ஏழு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். உட்கட்சி ஆய்வுகளை அடுத்து வேட்பாளர்களின் பெயர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குவது குறித்த கேள்விக்கு, கணேஷ் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்: “நாங்கள் கட்சித் தொண்டர்கள், எங்கள் பங்கு மற்றும் பொறுப்புகளை கட்சி தீர்மானிக்கிறது. அதன்படி செயல்படுவோம்” என்றார்.
ஒரே கல்லில் பல பறவைகளை கட்சி கொன்றுவிட்டதாக பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். “தேர்தல் போர்க்களத்தில் பல அனுபவமிக்க தலைவர்கள் களமிறங்குவது கூட்டுத் தலைமையின் தோற்றத்தை அளிக்கிறது. இது சோர்வு காரணி (சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக) என்று அழைக்கப்படுவதையும் நீக்குகிறது, ஏனெனில் வாக்காளர்கள் பா.ஜ.க.,வின் முன்னணியில் பல முகங்களைக் காண்பார்கள்,” என்றும் அவர் கூறினார்.
மாநில பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மற்றொரு மூத்த தலைவர் கூறியதாவது: பல்வேறு ஜாதி குழுக்கள் மற்றும் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய தலைவர்களை பா.ஜ.க வெளிப்படுத்தியுள்ளது. நாங்கள் நீண்ட கால கட்டமைப்பில் இருக்கிறோம் என்பதையும் காட்டியுள்ளோம். மத்தியப் பிரதேசத்தில் வெற்றி பெறுவதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். பிரச்சாரப் அம்சங்களும் தலைவர்களின் சக்தியை உயர்த்திக் காட்டும் என்று கூறினார்.
ஒரு கட்சி வட்டாரம், இந்த முடிவு குறிப்பாக உயர் பதவிக்கு "ஆசைப்படுபவர்களுக்கு" மத்தியில், உள்கட்சி சண்டையை தீர்த்து வைப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகும், என்று கூறினார். "இது திரிபுராவில் நாங்கள் பயன்படுத்திய ஒரு உத்தியாகும், அங்கு மாணிக் சாஹா மற்றும் பிரதிமா பூமிக் இருவரும் களமிறக்கப்பட்டனர், அவர்களின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தீவிரமாக பணியாற்றுவார்கள், இதனால் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக உதவுவார்கள்," என்றும் அவர் கூறினார்.
மாநிலத்தில் உள்ள உட்கட்சி பிரிவுவாதத்துடன் பா.ஜ.க போராடி வருகிறது, இது கட்சியின் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக ஈடுபட வழிவகுத்தது. பா.ஜ.க.,வுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய கைலாஷ் விஜய்வர்கியா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார், அதே நேரத்தில் பிரஹலாத் படேல் சக ஓ.பி.சி தலைவரான லோதி உமாபாரதியின் போட்டியை நீக்குகிறார்.
சமீபத்தில், நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல், ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் பா.ஜ.க.,வின் ஜன் ஆஷிர்வாத் யாத்திரையை ஏற்பாடு செய்வதில் தீவிரப் பங்காற்றினர், இது மாநிலம் முழுவதும் 230 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய 10,000 கி.மீ யாத்திரை ஆகும். யாத்திரையின் கட்டுப்பாட்டை மத்திய தலைமை முழுமையாக எடுத்துக் கொண்டதால், சிவராஜ் சிங் சவுகான் மறைக்கடிக்கப்பட்டார்.
மாநில பா.ஜ.க செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்: “காங்கிரஸுக்கு எதிரான அரசியல் தாக்குதல் தான் இந்த பட்டியல். நாங்கள் எங்கள் கனவான்களை கொண்டு வந்துள்ளோம், காங்கிரஸிடம் இப்போது பதில் இல்லை. இவர்கள் மிகவும் பிரபலமான தலைவர்கள், தொகுதிகள் முழுவதும் அவர்களின் தாக்கம் பரந்து காணப்படுகிறது, இது பா.ஜ.க தொண்டர்களின் மன உறுதிக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும்.”
பா.ஜ.க.,யின் முதல் பட்டியலின் அறிவிப்பு மேற்பரப்பில் அதிருப்தியைக் கொண்டுவந்தது, மேலும் முக்கியப் பெயர்களை இப்போது களமிறக்குவது அவர்களின் ஆதரவாளர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கக்கூடும் என்று மத்திய தலைமை நம்புகிறது, மற்றவர்களைப் பற்றி அவ்வளவு உறுதியாக தெரியவில்லை.
ஈகோ சண்டைகள் இருக்காது என்று ரஜ்னீஷ் அகர்வால் வலியுறுத்தினார். "நரேந்திர சிங் தோமர் மற்றும் கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோர் சிவராஜ் சிங் சவுஹானுடன் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்கிறார்கள் மற்றும் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளனர்."
திங்கட்கிழமை எடுக்கப்பட்ட முடிவின் மற்றொரு அம்சம் என்னவென்றால், மக்களவைத் தேர்தலில் புதிய பெயர்களை வழங்குவதற்கு மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.,வுக்கு இப்போது ஏழு எம்.பி இடங்கள் உள்ளன. கட்சி புதிய முகங்களுக்காக செல்லக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.