குஜராத் கலவரம் குறித்த பி.பி.சி ஆவணப்படத்திற்கு எதிராக மகாராஷ்டிர சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய நான்காவது மாநில சட்டமன்றமாக மாறியுள்ளது. இந்த படம் நாட்டின் நீதித்துறையை இழிவுபடுத்த முயற்சிப்பதாக்வும் மத பிரிவினைகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளது.
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர் அதுல் பட்கல்கர் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிர்க்கட்சிகள் அவையில் இல்லை.
அஸ்ஸாம்
அஸ்ஸாம் சட்டமன்றம் பி.பி.சி ஆவணப்படத்திற்கு எதிராக மார்ச் 23-ம் தீர்மானம் நிறைவேற்றியது, அந்த நிறுவனத்தின் தீங்கிழைக்கும், ஆபத்தான செயல்திட்டத்திற்கு எதிராக மத சமூகங்களைத் தூண்டுவதற்கும், மத பதற்றத்தைத் தூண்டுவதற்கும், இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாட்டைக் கெடுப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை என்று கோரியது.
இந்த தீர்மானத்தை முன்வைத்த பா.ஜ.க எம்.எல்.ஏ பூபோன் பெகு, இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்ட நேரத்தைக் கேள்வி எழுப்பியதோடு, இது இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதி என்று குற்றம் சாட்டினார். “இது மிகவும் வருத்தமளிக்கிற இதயத்தை உடைக்கும் நிகழ்வு. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு பி.பி.சி-யின் நோக்கம் என்ன? அவர்கள், அதை 2010-ல் அல்லது 2012-ல் செய்திருக்கலாம். ஆனால், பிப்ரவரி 2023-ல் அதை ஒளிபரப்பியதன் பின்னணி என்ன? இந்தியா ராஷ்டிரகுருவாகி, ஜி20 தலைவர் பதவி ஏற்கும் தருணம் இது பிரதமர் நரேந்திர மோடி உலகிற்கு தலைமை தாங்கும் தருணம்… ஓராண்டுக்கு முன், 220 கோடி மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிய பிறகு, இந்தியாவின் பொருளாதாரம் பிரிட்டனின் பொருளாதாரத்தைக் கடந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. இந்த உலகத்தில். அதுதான் பிரிட்டனின் உண்மையான சோகம். அதுதான் பிபிசியின் உண்மையான சோகம். 200 ஆண்டுகளாக அவர்கள் ஆட்சி செய்த ஒரு நாடு, தற்போது அவர்களை விஞ்சி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியிருப்பது அவர்களுக்கு வேதனை அளிக்கிறது. அவர்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை… இது இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதி” என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ தேபத்ரதா சைகியா, இந்த கேள்வி மாநில சட்டமன்றத்தைப் பற்றிய கேள்வி அல்ல, எனவே விவாதிக்க தேவையில்லை என்று வாதிட்டார். பி.பி.சி-யால் தயாரிக்கப்பட்ட முந்தைய ஆவணப்படத்தை அவர் மேற்கோள் காட்டினார்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், “இது அஸ்ஸாமுடன் தொடர்புடையது, ஏனெனில், இது இந்திய நீதித்துறையின் சுதந்திரத்துடன் தொடர்புடையது. இது பி.பி.சி பற்றியது அல்ல, நீதித்துறை அல்லது நீதித்துறை உத்தரவுகளை மதிப்பது… சில நாட்களுக்கு முன்பு, நீதிபதி ஏ.எம்.கான், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நரேந்திர மோடிக்கு 450 பக்க தீர்ப்பில், மோடி குற்றம் அற்றவர் என்று சான்று வழங்கியது மட்டுமல்லாமல் அவர்கள் மொத்த நிகழ்வையும் அரசியல் சதி என்று கூறினார்கள்” என்று கூறினார்.
மத்திய பிரதேசம்
மத்தியப் பிரதேச சட்டமன்றம் பி.பி.சி-க்கு எதிரான தணிக்கைத் தீர்மானத்தை மார்ச் 13-ம் தேதி பா.ஜ.க எம்.எல்.ஏ ஷைலேந்திர ஜெயின் தனிப்பட்ட உறுப்பினர் தீர்மானமாக அறிமுகப்படுத்திய பின்னர், அதை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா ஆதரித்தார்.
இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, 2002 குஜராத் கலவரத்தை தவறாக விளக்கி, நரேந்திர மோடியை மோசமாக சித்தரித்து ஆட்சேபனைக்குரிய ஆவணப்படத்தை பி.பி.சி ஒளிபரப்பியதாக ஷைலேந்திர ஜெயின் கூறினார்.
இந்த ஆவணப்படம் நாட்டின் நீதித்துறையின் மீது கறை பூசியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம் என்றும், இந்தியாவில் நீதித்துறை சுதந்திரமாகவு செயல்படுகிறது என்றும் கூறினார். பி.பி.சி நிறுவனம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷைலெந்திர ஜெயின் கூறினார்.
குஜராத்
குஜராத் சட்டமன்றம் மார்ச் 11-ம் தேதி பி.பி.சி-க்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்தது. மோடியை இழிவுபடுத்தவும் இந்தியாவை சீர்குலைக்கவும் ‘டூல்-கிட்’ ஆக பயன்படுத்தப்பட்ட புனையப்பட்ட ஆவணப்படத்தை ஒளிபரப்பியதற்காக பி.பி.சி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது கோரியது. இருப்பினும், அம்பாஜி கோவிலில் பிரசாதம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், பேரவைக்கு வரவில்லை.
பாஜகவின் சோஜித்ரா எம்.எல்.ஏ விபுல் படேல் முன்வைத்த தனி சட்டமன்ற உறுப்பினர் தீர்மானம், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களின் கிட்டத்தட்ட 90 நிமிட விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. “ஒரு தனி உறுப்பினர் தீர்மானத்தை அங்கிருந்த அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றியது பெரிய விஷயம். பி.பி.சி ஆவணப்படம் தொடர்பாக மக்கள் மத்தியில் எவ்வளவு கோபம் உள்ளது என்பதை இது பிரதிபலிக்கிறது” என்று சபாநாயகர் சவுத்ரி கூறினார்.
“பி.பி.சி நாட்டிற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எதிரான சதி திட்டத்துடன் செயல்படுவதாகத் தெரிகிறது” என்று இந்த தீர்மானம் கூறியது. இது சர்வதேச அளவில் மதிப்பு, மரியாதை மற்றும் தலைமைக்காக பாராட்டப்பட்ட பிரதமர் மோடிக்கு எதிரான நிகழ்ச்சிதானே தவிர வேறில்லை.” என்று அந்த தீர்மானம் கூறியது.
மந்திரி ஹர்ஷ் சங்கவி, 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் படுகொலையின் காலவரிசையை பட்டியலிட்டார் மற்றும் இங்கிலாந்து எம்.பி பாப் பிளாக்மேன் மற்றும் இங்கிலாந்து பிரபுக்கள் ரமிந்தர் ரேஞ்சர் ஆகியோரின் ஆவணப்படத்திற்கு எதிராக கூறிய கருத்துக்களை மேற்கோள் காட்டினார். “இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவதற்கான ஒரு கருவியே தவிர வேறில்லை. உளவியலில், நீங்கள் பயம் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். சில ஊடகங்கள் மோடி-போபியா அல்லது இந்தியா-ஃபோபியாவால் பாதிக்கப்படுகின்றன” என்று அவர் கூறினார்.
இந்த ஆவணப்படம் கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக வதோதரா நகர எம்.எல்.ஏ மனிஷா வகில் தெரிவித்துள்ளார். “பி.பி.சி ஆவணப்படம் வெறும் சர்வதேச பிரச்சாரம். இது முற்றிலும் பக்கச்சார்பானது. வேண்டுமென்றே அதன் பார்வையாளருக்கு தவறான தகவலை தெரிவிக்க முயற்சிக்கும் காலனித்துவ மனநிலையை வெளிப்படுத்துகிறது. இது ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் செயல்படுகிறது” என்று மனிஷா வகில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”