பா.ஜ.க - என்.ஆர்.காங் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. 2026-ல் மட்டுமல்ல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்தக் கூட்டணி தொடரும் என பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக பாஜக மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், புதுச்சேரியில் பா.ஜ.க மேலிட பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் புதுச்சேரி வந்த சுரானா பா.ஜ.க தலைவர் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் அதிருப்தி பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுரானா பா.ஜ.க தேசிய தலைவரிடம் புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் புகார் ஏதும் கூறியதாக தெரியவில்லை. மாநில அரசு செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் என்று தான் கூறியுள்ளனர். புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு கூடுதலாக ஒத்துழைக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளனர். பா.ஜ.க - என்.ஆர்.காங் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. 2026-ல் மட்டுமல்ல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்தக் கூட்டணி தொடரும். கூட்டத்துக்கு வராத அதிருப்தி எம்.ஏல்.ஏ-க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“