கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் ஜனவரி 15-ஆம் தேதி வரை தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால், உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, ஏற்கனவே பேரணியை மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
பாஜகவின் முன்னணி பிரச்சாரகரான உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த சில மாதங்களில் மாநிலம் முழுவதும் குறைந்தது 250 சட்டப்பேரவை தொகுதிகளில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 19 அன்று கட்சியின் ஆறு ஜன் விஸ்வாஸ் யாத்திரைகளின் போது ஆதித்யநாத் உட்பட மூத்த பாஜக தலைவர்கள் 399 பொதுக் கூட்டங்கள் மற்றும் நக்கட் சபாக்களில் உரையாற்றியது மட்டுமின்றி ரோட்ஷோ சென்றதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 2017இல் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வியடைந்த 78 இடங்களை மையமாகக் கொண்டு, ஆதித்யநாத் இந்தத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், பல்வேறு சாதிகள் மற்றும் பிரிவினரை சென்றடையும் வகையில், பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்திருந்த சமாஜிக் பிரதிநிதி சம்மேளனங்களிலும் உரையாற்றினார்.
பாஜகவின் முக்கிய பிரச்சாரகரான பிரதமர் நரேந்திர மோடி, கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு மெகா உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கவும், பொதுக் கூட்டங்களில் உரையாற்றவும் உத்தரப் பிரசேத்தில் உள்ள டஜன் கணக்கான மாவட்டங்களுக்குச் சென்றுள்ளார்.
அக்டோபர் 20-ம் தேதி குஷிநகரில் சர்வதேச விமான நிலையம் திறப்பு விழா தொடங்கி, சுல்தான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி, கோரக்பூர், மஹோபா, ஜான்சி, பல்ராம்பூர், ஷாஜஹான்பூர், நொய்டா, கான்பூர் வரை பயணித்துள்ளார். இறுதியாக, ஜனவரி 2-ம் தேதி மீரட்டில் பொது கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, அவர் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, ஜனவரி 9 ஆம் தேதி லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் தனது ஜன் விஸ்வாஸ் யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் வகையில் பிரமாண்டமான ஜன் விஸ்வாஸ் பேரணியை பாஜக திட்டமிட்டிருந்தது. அதில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பேரணி ரத்து செய்யப்பட்டது.
இதுதவிர, உ.பி.,யில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பல மூத்த பாஜக தலைவர்கள் ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களில் பொதுக் கூட்டங்கள் மற்றும் பூத் தலைவர் சம்மேளனங்களை நடத்தியுள்ளனர்.
மெய்நிகர் பேரணி
அதே நேரத்தில், கொரோனா அதிகரிப்பால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பதை அறிந்த கட்சி மேலிடம், ஏற்கனவே மெய்நிகர் பேரணிகளுக்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், "குறிப்பிட்ட நேரத்தில் அதிகபட்சம் 50,000 பேர் வரை மெய்நிகர் பேரணியில் கலந்துகொள்ளும் வகையில் பாஜக அதன் சொந்த நெட்வொர்க் அமைப்பை உருவாக்கியுள்ளது. டெல்லி, லக்னோ மற்றும் பிற இடங்களில் இருந்து மூத்த தலைவர்கள் இந்த பேரணிகளில் உரையாற்றுவார்கள்.
மேலும், வேன்களில் பெரிய திரை அமைத்து, மெய்நிகர் பேரணியை மக்கள் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு வேனை அனுப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது.பாஜக தனது உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய தளத்தைக் கொண்டுள்ளது. இது மெய்நிகர் பேரணிகளின் போது மக்களுடன் இணைக்க நிச்சயம் உதவும்" என்றார்.
மற்றொரு தலைவர் பேசுகையில், " ஊரடங்கின் போது, மக்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக வீட்டிற்கே சென்று செய்தோம். கொரோனா கட்டுப்பாடுகளின்போது எப்போது பணியாற்ற வேண்டும் என்பது தெரியும். லாக்டவுனில் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் அனைவரையும் சந்தித்து பரப்புரை மேற்கொள்ள மற்ற அனைத்து கட்சிகளையும் விட பாஜகவுக்கு நன்கு தெரியும்" என்றார்.
முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் நேரடி பரப்புரையானது கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அவரது சமாஜ்வாடி விஜய் யாத்ராவை மையமாகக் கொண்டுள்ளது. சமாஜ்வாதி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கடந்த மூன்று மாதங்களில் ஏழு வெவ்வேறு யாத்திரைகளை மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தினர்.
மக்கள் கூட்டத்தை ஒன்றுதிரட்டிய மிகப்பெரிய பேரணியான அகிலேஷ் தலைமையிலான விஜய் யாத்ரா, அக்டோபர் 12 அன்று கான்பூரில் இருந்து தொடங்கி, கிழக்கு உ.பி., புந்தேல்கண்ட் மற்றும் மேற்கு உ.பி.யின் இரண்டு டஜன் மாவட்டங்களை கடந்து சமீபத்தில் லக்னோவில் நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், பொதுக்கூட்டங்களில் உரையாற்ற இன்னும் முன்வரவில்லை.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் எஸ்.சி.மிஸ்ரா மட்டும்தான் இதுவரை மாநிலம் முழுவதும் அனைத்து ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் சம்மேளனங்களையும், மாவட்ட அளவில் பொதுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளார். கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்கள் யாரும் நடத்திட முன்வரவில்லை.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் “லட்கி ஹூன், லட் சக்தி ஹூன்” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான்களை ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது வரை, மீரட், ஜான்சி, லக்னோ மற்றும் பரேலி ஆகிய இடங்களில் இந்த மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, அசம்கர், வாரணாசி மற்றும் நொய்டாவில் நடத்தப்படவிருந்த மாராத்தான்கள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
காங்கிரஸ் தற்போது பெண் வாக்காளர்களை சென்றடைய "டிஜிட்டல் மாரத்தான்" எனப்படும் மெய்நிகர் வினாடி வினா போட்டியை நடத்திட முடிவு செய்துள்ளது.
முன்னதாக, பிரியங்கா கோரக்பூர், வாரணாசி, மொராதாபாத் மற்றும் மஹோபா ஆகிய இடங்களில் உ.பி.யில் சட்டம் ஒழுங்கு நிலைமை மட்டுமின்றி விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொது பேரணிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.