பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற ஹெச்.ராஜா கருத்திற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திரிபுரா மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி அமைத்தவுடன், அம்மாநிலத்தில் வைக்கப்பட்டிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. இதுகுறித்து பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். குறிப்பாக, சமூக ஊடகங்களில் ஹெச்.ராஜா மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இதையடுத்து ஹெச்.ராஜா தனது கருத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்கி, இன்று வருத்தம் தெரிவித்தார். அதன்பின்னரும் அவர் மீதான விமர்சனமும் எதிர்ப்பும் தொடர்கிறது.
ஏற்கனவே, ஹெச்.ராஜாவின் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தம் இல்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். இந்நிலையில் ஹெச்.ராஜா கருத்திற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தனது ட்விட்டரில், "சிலைகளை உடைப்பது குறித்த விவகாரம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பா.ஜ.க இதை ஒரு போதும் அனுமதிக்காது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் இன்று தனது ட்விட்டரில், "பெரியார் போன்ற பெரிய தலைவர்களை அவமதிப்பு செய்வதையும், சிலைகளை இடிப்போம் என்ற மரியாதை குறைவான கருத்துகளையும் பா.ஜ.க. ஆதரிக்காது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு பா.ஜ.க வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எவருடைய சிலையை அவமானப்படுத்தினாலும் பா.ஜ.க ஏற்றுக்கொள்ளாது என கூறியுள்ளார். மேலும், ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சி முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.