scorecardresearch

பீகார் தோல்விகளை ஈடுகட்ட முயற்சி… பாஜக உ.பி. தலைவர் 3 மாநிலங்களுக்கு பொறுப்பாளராக நியமனம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியில் இருந்து பிரிந்த ஒரு நாள் கழித்து, அரசியல் ரீதியாக முக்கியமான பீகாரில் பாஜகவின் தேர்தல் கணக்குகள் திகைக்க வைக்கிறது.

பீகார் தோல்விகளை ஈடுகட்ட முயற்சி… பாஜக உ.பி. தலைவர் 3 மாநிலங்களுக்கு பொறுப்பாளராக நியமனம்

2014 ஆம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் வெற்றிகளில் முக்கியப் பங்காற்றிய சுனில் பன்சாலை, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய எதிர்க்கட்சி ஆளும் மூன்று மாநிலங்களுக்கு தேசிய பொதுச்செயலாளர் என்ற முறையில் பொறுப்பாளராக பாஜக புதன்கிழமை நியமித்து 2024 தேர்தலில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியில் இருந்து பிரிந்த ஒரு நாள் கழித்து, அரசியல் ரீதியாக முக்கியமான பீகாரில் பாஜகவின் தேர்தல் கணக்குகள் திகைக்க வைக்கிறது.

2014 ஆம் ஆண்டு முதல் உ.பி.யில் பாஜக அமைப்பு பொதுச் செயலாளராக இருந்து வந்த பன்சாலுக்கு பதிலாக ஜார்கண்ட் பாஜகவின் அமைப்புச் செயலாளராக இருந்து வந்த தரம்பால் நியமிக்கப்படுகிறார் என்று பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்செயலாக, தரம்பால் மற்றும் பன்சால் இருவரும், பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யா பரிஷத் (ஏபிவிபி) பின்னணி கொண்டவர்கள். மேற்கு உ.பி.யின் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த தரம்பால், 1990 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் மாணவர் முன்னணியில் முழுநேர ஊழியராகச் சேர்ந்தார். உ.பி மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கான ஏ.பி.வி.பி-யின் இணை மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தார்.

பாஜகவின் ஜார்கண்ட் பிரிவு பொதுச் செயலாளராக கரம்வீர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இவர் இதற்கு முன்பு உ.பி.யில் பாஜக இணைப் பொதுச் செயலாளராக (அமைப்பு) இருந்தார்.

மேற்கு வங்கத்தில், பன்சால், கைலாஷ் விஜயவர்கியாவுக்குப் பதிலாக, மாநிலத்தின் பொறுப்பு பாஜக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் – அவர் தெலங்கானாவில் தருண் சுக் மற்றும் ஒடிசாவில் டி புரந்தேஸ்வரி ஆகியோருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் பிறந்த 52 வயதான பன்சால், மாணவப் பருவத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் உடன் இருந்து வருகிறார். உ.பி-க்கான 2014 லோக்சபா தேர்தல் வியூகத்தை உருவாக்கும்போது பன்சால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன், பன்சால் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகராக இருந்தார்.

அமித்ஷாவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் பன்சால். பாஜகவில் அவருடைய வளர்ச்சி அவரை அமைப்பில் குறிப்பிடத்தக்க அதிகார மையமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைப்பு பொதுச் செயலாளர் அல்லது சங்கதன் மகாமந்திரியின் பங்கு பாஜகவின் எந்த அணியிலும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்தத் தலைவர்கள் கட்சியில் ஆர்.எஸ்.எஸ்-ஸால் நியமிக்கப்பட்டவர்கள். பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளர் பாஜக ஆட்சியில் இருக்கும் எந்த மாநிலத்தின் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு தொடர்பாளராக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் – இவை அனைத்தும் கட்சி மற்றும் அரசாங்கத்தின் முக்கிய குழுவின் ஒரு பகுதியாக இருக்கும்.

2024 ஆம் ஆண்டில் பாஜக தனது எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பும் மாநிலங்களில் பன்சாலை நியமிப்பது அவர் மீது பாஜக தலைமையின் நம்பிக்கை என்பது தெரிகிறது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயம், இது அவருக்கு ஒரு பெரிய சவால் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு பீகாரில் ஏற்படக்கூடிய தோல்விகளை ஈடுகட்ட – 2019-இல் பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயாகக் கூட்டணி 39 இடங்களை வென்றது – பாஜக அதன் எண்ணிக்கையில் பெங்கால், ஒடிஷா, ஜார்கண்ட் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையில் பங்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். “தேசிய அரசியலில் தனது ஆதிக்கத்தை தக்கவைக்க இந்த மாநிலங்களில் இருந்து பாஜக அதிக இடங்களைப் பெறுவது மிகவும் முக்கியம் என்பதால், அவர் பொறுப்பேற்றுள்ள மாநிலங்களில் குறைந்தது இரண்டு மாநிலங்களிலாவது பன்சால் அதிக இடங்களை அளிக்க வேண்டும்.” என்று முன்னாள் பாஜக பொதுச் செயலாளர் ஒருவர் கூறினார்.

“உ.பி.யை விட்டு வெளியேறி தேசிய அளவில் வருவதற்கு பன்சால் ஆர்வமாக இருந்தபோதிலும், அவரது எண்ணம் எல்லாம் மாநில பாஜக அமைப்பில் இருக்கும், ஏனெனில் அவர் அங்கு ஏற்கனவே ஆழமான நெட்வொர்க்குகள் மற்றும் இணைப்புகளை உருவாக்கியுள்ளார்” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்கும் பன்சாலுக்கும் இடையிலான தொடர்பு நீண்ட காலமாக சுமூகமாக இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்ததால், இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உ.பி.யில் இருந்து பன்சாலை மாற்றுவதற்கான முடிவு எதிர்பார்க்கப்பட்டது.

பன்சால் உ.பி.யை விட்டு வெளியே செல்வது உ.பி.யில் ஆதித்யநாத்தின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு அதிக வாய்ப்பை அளிக்கும் என்று பாஜக தலைவர்களில் ஒரு பகுதியினர் வாதிடுகிறார்கள். ஆனால், அதே நேரத்தில், ஆதித்யநாத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்குப் பதிலாக கேசவ் பிரசாத் மௌரியாவை மாநில சட்டமன்றக் குழுத் தலைவராக நியமித்ததன் மூலம், பாஜக மத்திய தலைமை உ.பி முதல்வரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக ஒரு தலைவர் சுட்டிக்காட்டினார்.

சிங் மற்றும் மவுரியா இருவரும் துணை முதல்வர்கள், ஆனால், மௌரியா, ஒரு முக்கிய ஓ.பி.சி தலைவர், ஆதித்யநாத்துடனான கருத்து வேறுபாடுகளுக்கு பெயர் பெற்றவர்.

பன்சாலின் உயர்வு, கட்சி அமைப்பில் அமித்ஷாவின் தொடர் பிடியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. முக்கியமான மாநிலங்களில் வெற்றியை வழங்குவதற்கு அமித்ஷாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அமைப்பு நம்புகிறது என்று ஒப்புக்கொள்வதாக ஒரு பாஜக தலைவர் கூறினார். 2024ல் பாஜகவுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் மூன்று மாநிலங்களின் பொறுப்பை அவருக்கு கட்சித் தலைமை வழங்குவது, தேர்தல் வியூகங்களில் அனுபவம் வாய்ந்த பல மூத்த தலைவர்கள் கட்சிக்குள் இல்லை என்பதையே காட்டுகிறது என்று பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் பாஜக அமைப்பைக் கட்டியெழுப்பிய புகழுக்கு உரிய விஜய்வர்கியா, அங்கே 2015ஆம் ஆண்டு முதல் பாஜக பொறுப்பாளராக இருந்து, மக்களவையில் 18 இடங்களையும், சட்டமன்றத் தேர்தலில் 70-க்கும் மேற்பட்ட இடங்களையும் பெற்றுள்ளார். மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸால் அவர் மீது தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக அவர் மாநிலத்திற்கு செல்லவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Bjp sunil bansal bjp national general secretary dharampal up