பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி தொடரும். ஆந்திராவின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் போராடுவார்கள் என்றும் நாயுடு கூறியிருக்கிறார்.
பாஜக-தெலுங்கு தேசம் இடையே கூட்டணி நீடித்து வருகிறது. 2014 முதல் பாஜக.வின் நிரந்தரமான கூட்டணித் தலைவராக சந்திரபாபு நாயுடு திகழ்கிறார். ஆந்திர மாநில பிரிவினையின்போது, அந்த மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு உரிய நிதி உதவி அளிக்க வேண்டும் என பேசப்பட்டது. ஆனால் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு சிறப்பான எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை.
ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கு இது நெருக்கடியை உருவாக்கியது. மத்திய ஆளும் கட்சியின் கூட்டணியில் இருந்தபோதும், மாநில நலனுக்கு தேவையான நிதியை பெற முடியவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. எனவே பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து தெலுங்கு தேசம் ஆய்வு செய்யத் தொடங்கியது.
தெலுங்கு தேசம் சார்பில் மத்திய அமைச்சரவையில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறை இணை அமைச்சர் சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களும் ராஜினாமா செய்வார்களா? என்கிற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து ஆலோசிக்க நேற்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மாநில அமைச்சரவை கூட்டத்தை கூட்டி விவாதித்தார். பின்னர் கட்சியின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது பா.ஜனதா மீது தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் விமர்சனம் செய்தனர். அதை தொடர்ந்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசினார். அப்போது அவர், ‘மக்களின் நாடியை சரியான நேரத்தில் கண்டு பிடித்து அதன் அடிப்படையில் முன்னுக்கு செல்கிறவர்களால் தான் அரசியலில் வெற்றி பெற முடியும். எனவே இப்போதைக்கு கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தில் தீவிரமான ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்க முடியும்.’ என்றார்.
இன்று மாநில தலைநகரான அமராவதியில் கட்சி நிர்வாகிகள், எம்.பி.க்கள் ஆகியோரை அழைத்து மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ இதில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் இணை அமைச்சரான சவுத்ரி பங்கேற்றார். கூட்டத்திற்கு பிறகு சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், ‘பாஜக.வுடன் உறவை முறிக்கும் கேள்விக்கு இடமில்லை. டைவர்ஸை (கூட்டணி முறிவு) பற்றி நாங்கள் பேசவில்லை. திருமணத்தை (கூட்டணி) பற்றியே பேசினோம்’ என குறிப்பிட்டார்.
கூட்டணியை முறிக்க வேண்டாம் என நிர்வாகிகள் கூட்டத்தில் மீண்டும் திட்டவட்டமாக கூறிய சந்திரபாபு நாயுடு, ‘செவ்வாய்கிழமை தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆந்திராவின் தேவைகளுக்காக வலுவாக குரல் கொடுங்கள். அது போராட்ட வடிவில் இருக்கலாம். சஸ்பெண்ட் செய்யும் அளவிலும் இருக்கலாம். மக்கள் நலனுக்காக போராடவேண்டியது முக்கியம்’ என குறிப்பிட்டிருக்கிறார். அதேசமயம், ‘கூட்டணி தர்மத்தை நான் மீற முடியாது’ என்றும் விளக்கியிருக்கிறார்.
ஆந்திராவில் பாஜக அணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகினால், அந்த இடத்தில் போய் உட்கார ஜெகன் ரெட்டி தயாராக இருக்கிறார். சந்திரபாபு நாயுடு பதுங்குவதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள், அரசியல் வட்டாரத்தில்!