கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக ஆளும் கோவாவை கைப்பற்ற திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பணியில் ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பாஜக அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் அந்தக் கட்சிதான் மையமாக இருக்கும். அதாவது காங்கிரஸ் கட்சி முதல் 40 ஆண்டுகளில் இருந்ததைப் போல் பாஜகவும் இருக்கும். பாஜக எங்கும் செல்லாது. இந்திய அளவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிட்டால், அக்கட்சியை உடனடியாக அப்புறப்படுத்த முடியாது.
எனவே, மக்கள் கோபமடைந்து (பிரதமர் நரேந்திர) மோடியை தூக்கி எறிவார்கள் என சொல்லப்படும் வலையில் ஒருபோதும் சிக்க வேண்டாம்.
மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பாஜக எங்கும் போகாது.அவர்கள் இங்கேதான் இருக்கப் போகிறார்கள், அடுத்த பல பத்தாண்டுகளுக்கு அவர்கள் இங்குதான் போராட போகிறார்கள். இதுதான் ராகுல் காந்தியின் பிரச்னையே. மக்கள் (மோடி) அவரை தூக்கி எறிந்து விடுவார்கள் என்று அவர் நினைக்கிறார். அது நடக்காது. ராகுல் காந்தியிடம் உள்ள பிரச்னையே அவர் இதை உணராமல் இருப்பதுதான்
பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது" என்றார்.
பிரசாந்த கிஷோர் பேசிய காணொலியை ட்வீட் செய்த பாஜகவின் செய்தித்தொடர்பாளர் அஜய் செஹ்ராவத், "இறுதியாக பிரசாந்த் கிஷோர், வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு இந்திய அரசியலில் பாஜக தொடர்ந்து பலம் வாய்ந்த சக்தியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொண்டார். இதைத்தான் அமித் ஷாஜி முன்னரே கூறினார்" என பதிவிட்டிருந்தார்.
ராகுல் காந்தி குறித்து பிரசாந்த கிஷோர் தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம் காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு ஏற்பட்ட அதிருப்தி தெரியவந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil