மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, நல்ல காலம் (acche din) வரும் என்று மார்த்தட்டிக் கொண்ட நிலையில் பொருளாதாரம் காலியாகி, பஞ்சராகிவிட்டது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கடுமையாகச் சாடியுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டு அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் முதலாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்தது. கடந்த 2012-13-ம் ஆண்டின் 4வது காலாண்டில் இருந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்தது, அதாவது ஏறக்குறைய 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.
குறிப்பாக உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்ததுள்ளது. வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ட்விட்டரில், "நல்லகாலம் பிறக்கும் என்று பாஜக அரசு பெருமையாக சொல்லிக் கொண்டிருந்த நிலையில் இப்போது ஜிடிபி புள்ளிவிவரங்கள் பொருளாதாரம் பஞ்சராகிவிட்டது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. பொருளாதார வளர்ச்சியும் இல்லை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் வலிமையாகவில்லை.
பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்றதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பதை தெளிவுப்படுத்துங்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.