ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி மோதல்கல்கள் பொது வெளிக்கு வந்த நிலையில் , போபாலில் இதேபோன்ற அரசியல் சூழ்நிலையை உபயோகப்படுத்திய பாஜக, ஜெய்ப்பூரில் மாற்று ஏற்பாட்டை அமைப்பதற்கான வாய்ப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இருப்பினும், அதற்கான நடவடிக்கையை தற்போது முடிக்கிவிட அக்கட்சி தயாராக இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
“நாங்கள் அரசியல் சூழல்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். தர்போதைய களம் பாஜகவிற்கு அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை, ”என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு மூத்த அரசியல் தலைவர் கூறுகையில், “உட்கட்சி மோதலில் தலையிட வேண்டாம் என்பது தான் தற்போது வரை எங்களின் அணுகுமுறையாக உள்ளது. இருப்பினும் அரசியல் நிலவரங்களை கவனித்து வருகிறோம். கட்சிக்குள் ஏற்பட்ட விரிசல் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கட்டும் ” என்று தெரிவித்தார்.
ராஜஸ்தானின் அரசியல் நிலவரம் குறித்து பாஜகவில் பரபரப்பான விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. நேற்று மாலை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கலந்துரையாடினார். ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைவதற்கு தர்மேந்திர பிரதான் முக்கிய பங்கு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானின் தற்போதைய துணை முதல்வர் சச்சின் பைலட், பாஜாகவில் இணைவதை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்க்க வில்லை என்றாலும், அதுபோன்ற ஒரு சூழல் என்றைக்கும் நிகழாது என்று காங்கிரஸ் கூறி வருகிறது.
முதல்வர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட தீவிர மோதலுக்குப் பின் கட்சியின் முக்கியத் தலைவர்களை சச்சின் பைலட் சந்தித்தார் என்ற செய்தியை பாஜக தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.
இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ” சச்சின் பைலட்டின் மதிப்பைக் குறைக்கவும், காங்கிரஸ் தலைமையுடன் தனது செல்வாக்கை உறுதிப்படுத்த கெலாட் தரப்பால் பரப்பப்படும் வதந்திகள்” என்று ராஜஸ்தான் பாஜக எம்.பி ஒருவர் தெரிவத்தார்.
“சச்சின் பைலட்டுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட தாக்குதலை அசோக் கெலாட் துவங்கியுள்ளார். அதிகாரமற்ற துணை முதல்வராக ஆக்கியதோடு, தற்போது கட்சி தலைமைக்கு முன் அவரை மேலும் பலவீனப்படுத்த அசோக் கெலாட் விரும்புகிறார் ” என்று மற்றொரு கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் எம்.பி கருத்து தெரிவித்தார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
“பேச்சுவார்த்தைகள் கூட தற்போது நடைபெறவில்லை. இன்றைய நிலவரப்படி, அரசைக் கவிழ்க்க தேவைப்படும் எண்ணிக்கையை உறுதி செய்யும் திறன் சச்சின் பைலட்டிடம் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். எனவே, அவசரமாக கட்சித் தலைமை இதில் களமிறங்காது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
இருப்பினும், எந்த வாய்ப்பையும் பாஜக நிராகரிக்கவில்லை என்பதை கட்சி வட்டாரங்கள் ஒப்புக் கொள்கின்றன.
200 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், காங்கிரசில் 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுதவிர, பாரதிய பழங்குடியினர், சி.பி.எம். கட்சி, ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ க்கள் ஆதரவும், 12 சுயேச்சைகளின் ஆதரவும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. பாஜக தரப்பில் 72 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். மேலும், கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களின் ஆதரவும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது.
எனவே, காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய பிளவு எற்படாத வரை, ஆட்சி அமைக்க முனைவது புத்திசாலித்தனமாக இருக்காது என்று பாஜக கருதுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவியேற்ற புதிய அமைச்சர்களுக்கு துறையை ஒதுக்குவதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பாஜக தேசிய தலைமை இன்னும் போராடி வருவதையும் பாஜக தலைவர் சுட்டிக்காட்டினார். முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக அமைச்சரவை உருவாக்கம் கூட தாமதமானது என்றும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் உத்தரகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஆட்சி அமைப்பதற்கான பாஜகவின் முயற்சிகளில் நீதித்துறையின் தலையீடுகள் இருந்தது என்பதை நாங்கள் மனதில் வைத்துள்ளோம். எனவே, மத்திய பிரதேசத்தில் சிந்தியா செய்ததைப் போலவே, சச்சின் பைலட் கெலாட் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil