திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்தில் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. திரிபுராவில் கடந்த 18ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. நாகலாந்து, மேகாலயாவில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. நாளை மறுதினம் (மார்ச் 3) ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
இந்தநிலையில், திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்துள்ளன. தலா 60 தொகுதிகளை கொண்ட இம்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க குறைந்தபட்சம் 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
ஆனால், இம்மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 35 முதல் 45 இடங்களை கைப்பற்றும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதேபோல், மற்றொரு கருத்துக் கணிப்பில் பாஜக 45 முதல் 50 இடங்களை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல், மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.