அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பதற்கு அதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு காங்கிரஸின் பதிலுக்காக காத்திருப்பதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 100 இடங்களைத் தாண்ட முடியாது என்று கூறினார்.
நிதிஷ்குமார் பா.ஜ.க உடனான கூட்டணி முறிவுக்குப் பின் அக்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பீகாரில் தற்போது நிதிஷ் குமார் தலைமையில் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மகாகத்பந்தன் அரசாங்கத்தை ஆதரிக்கும் சிபிஐ (எம்எல்) கட்சியின் தேசிய மாநாட்டில் நிதிஷ் கலந்து கொண்டு பேசினார். “ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள், அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள், பாசிசத்தை விரட்டுங்கள்” என்ற தலைப்பில் மாநாட்டில் நிதிஷ் பேசினார்.
நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷீத், ஆர்ஜேடியைச் சேர்ந்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ (எம்எல்) கட்சியின் பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா மற்றும் மகாகத்பந்தன் கூட்டணியைச் சேர்ந்த பிற தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக மேடையைப் பகிர்ந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு பா.ஜ.க-வில் இருந்து நாங்கள் வெளியேறினோம். மாநிலத்தில் தனது கால்தடங்களை விரிவுபடுத்தும் பா.ஜ.கவின் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனால் தேசிய அளவில் நாம் இதே போன்ற ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நிதீஷ் கூறினார்.
நான் தயாராக உள்ளேன்
“‘சமாதன் யாத்திரையை’ நான் இப்போதுதான் முடித்து வந்தேன். அது நன்றாக முடிந்தது. நான் இப்போது தயாராக இருக்கிறேன் (பீகாருக்கு வெளியே சென்று எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக பணியாற்ற) தயாராக உள்ளேன். பல எதிர்க்கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது. காங்கிரஸ் சிக்னலுக்காக மட்டுமே காத்திருக்கிறேன்” என்று கூறினார்.
மேடையில் இருந்த குர்ஷீத்தைப் பார்த்து நிதீஷ் பேசுகையில், நான் இப்போது தேசிய எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாம் ஒற்றுமையாக இருந்தால், 2024 தேர்தலில் பாஜக 100 இடங்களைத் தாண்ட முடியாது. தற்போது இதற்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.
யார் முதலில் ‘ஐ லவ் யூ’ சொல்வது
நிதீஷை தொடர்ந்து தேஜஸ்வியும் இதைக் கூறினார். காங்கிரஸ் இதில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்றார்.
இரு கூட்டணிக் கட்சிகளின் செய்திக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், “எனக்கு தெரிந்த மற்றும் எனது கட்சியைப் புரிந்து கொண்ட வரையில், காங்கிரஸும் இதே நிலையையே (எதிர்க்கட்சி ஒற்றுமை குறித்து) சிந்தித்து வருகிறது என்று என்னால் கூற முடியும். இது பற்றி கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்பேன் என்றார். மேலும் அவர் சுவாரஸ்யமான கருத்து ஒன்றைத் தெரிவித்தார். காதலிக்கும்போது, முதலில் யார் ‘ஐ லவ் யூ’ சொல்வது என்பதுதான் விஷயம். இதை தேஜஸ்வியும் புரிந்துகொள்வார் என்று கூறினார்.
பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பிப்ரவரி 25-ம் தேதி மகாகத்பந்தன் பூர்ணியா பேரணி நடத்துகிறார். நிதீஷின் இந்த கருத்துகள் அந்த மாநாட்டிற்கு தொடக்கமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/