ரூ.10 லட்சம் மதிப்புள்ள 90 கிராம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.
போதை பொருள் கடத்தல் வழக்கில், கோஸ்வாமி (23), பிரபீர் குமார் டே (38), சோம்நாத் சாட்டர்ஜி (26) என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் (NDPS சட்டம் 1985) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டம் அதன் கடமையை செய்யும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர், ” இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. முன்னதாக குழந்தை கடத்தல் வழக்கில் பாஜக பெண் தலைவர் கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்தனர்.
தெற்கு கொல்கத்தா மண்டல துணை ஆணையர் சுதீர் குமார் நீலகண்டம் கூறுகையில், “ரகசிய தகவல்கள் அடிப்படையில், நியூ அலிபூர் காவல் நிலையம் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. என்.ஆர் அவென்யூவில் உள்ள பரமேஸ்வரி பவனுக்கு முன்னால் WB-06P-0233, என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்ட ஹோண்டா பிஆர்-வி கார் நின்றுக் கொண்டிருந்தது. இதில், ரூ .10 லட்சம் மதிப்புள்ள சுமார் 90 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் உட்கொள்ளுதல் ஆகிய குற்றங்களில் பமீலா கோஸ்வாமி ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. இந்த, மோசடியின் முக்கியப்புள்ளி யார், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது போன்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பாஜக இளைஞரணி பொதுச் செயலாளரான பமீலா கோஸ்வாமி, மேற்கு வாங்க சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிர அரசியலில் பங்காற்றி வந்தார்.
திருணாமுல் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய பாஜக தலைவர் ராஜீவ் பானர்ஜி, “இந்த சம்பவம் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. சட்டவிரோத செயல்களை யார் செய்தாலும்,அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும். ஆனால், அரசியல் தாழ்ப்புணர்ச்சி காரணமாக சிக்க வைக்கப்பட்டிருந்தால் அது துரதிர்ஷ்டவசமானது, ”என்று அவர் கூறினார்.
மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாமிக் பட்டாச்சார்யா கூறுகையில்,“இது குறித்து என்னிடம் தெளிவான தகவல் இல்லை. வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாரா? என்ற கேள்வி முக்கியத்துவமானது. தேர்தல் நடத்தை விதிகள் இன்னும் அமலுக்கு வரவில்லை. காவல்துறை இன்னும் மாநில அரசின் கட்டுபாட்டில் தான் உள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook