Advertisment

உ.பி, ராஜஸ்தான், ஹரியானாவில் வீழ்ச்சிக்கு 3 காரணங்கள்; லோக் சபா தேர்தல் குறித்த பா.ஜ.க.,வின் ஆரம்ப ஆய்வில் தகவல்

ஜாட், தலித் மற்றும் முஸ்லீம் வாக்குகளை எதிர்கட்சிக்கு பின்னால் ஒருங்கிணைந்தது, மோசமான தேர்தல் நிர்வாகம்; உ.பி, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் பா.ஜ.க.,வின் மோசமான செயல்பாட்டிற்கு பங்களித்திருக்கலாம் - கட்சித் தலைவர்கள் கருத்து

author-image
WebDesk
New Update
modi

பிரதமர் மோடி (எக்ஸ்பிரஸ் புகைப்படம் – ரேணுகா பூரி)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Liz Mathew

Advertisment

உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் பா.ஜ.க.,வின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் ஆரம்ப உள் மதிப்பீட்டின்படி, ஜாட், தலித் மற்றும் முஸ்லீம் வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்குப் பின்னால் ஒருங்கிணைக்கப்பட்டதையும், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உட்பட மோசமான தேர்தல் நிர்வாகம் கட்சியின் குறைவான செயல்திறனுக்கு பங்களித்ததையும் சுட்டிக்காட்டுகின்றன.

ஆங்கிலத்தில் படிக்க:

பா.ஜ.க இன்னும் அதிகாரப்பூர்வமாக தனது தேர்தல் மறுஆய்வு செயல்முறையை தொடங்கவில்லை என்றாலும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பா.ஜ.க.,வின் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் உள்வட்டாரங்கள், என்ன தவறு நடந்திருக்கலாம் என்பது பற்றிய கட்சியின் ஆரம்ப மதிப்பீட்டின் நுண்ணறிவை வழங்கினர். ஆய்வு முடிவுகள் மத்திய தலைமைக்கு அனுப்பப்படுவதற்கு முன், "பல்வேறு நிலைகளில் கட்சியின் செயல்பாடு பற்றிய மதிப்பாய்வு மற்றும் மதிப்பீடு" இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன, இந்தச் செயல்முறைக்கு பல மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

மேற்கண்ட காரணிகளுடன், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் இந்த மூன்று மாநிலங்களிலும் கட்சிக்கு 45 இடங்கள் இழப்பு ஏற்பட்டதாக இந்த தலைவர்கள் தெரிவித்தனர். இந்த மோசமான செயல்பாட்டின் விளைவாக, 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 272 என்ற பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் 32 இடங்கள் குறைவாக பெற்று, மக்களவையில் பா.ஜ.க தனது தனிப்பெரும்பான்மையை இழந்தது. 2019 இல் உ.பி.யில் பா.ஜ.க 62 இடங்களை வென்றது, தற்போது 33 ஆகக் குறைக்கப்பட்டது, ராஜஸ்தானில் 25 இலிருந்து 14 இடங்களுக்குச் சரிந்தது, மேலும் ஹரியானாவில் கட்சியின் எண்ணிக்கை 10லிருந்து 5 ஆகக் குறைந்தது.

“அப்கி பார் 400 பார்” என்பது பா.ஜ.க.,வின் தேர்தல் முழக்கமாக இருந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம், கட்சியைத் துண்டித்துவிட்டதாக பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்தனர். பா.ஜ.க தலைவர்களில் ஒருவர், “ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்)க்குப் பிறகு அயோத்தி உற்சாகம் மற்றும் (பிரதமர் நரேந்திர) மோடி ஜியின் புகழ்” ஆகியவை கட்சி எதிர்கொள்ளும் ஒவ்வொரு பாதகத்தையும் நிராகரிக்கும் என்று மத்திய மற்றும் மாநில அளவிலான தலைமைகள் நம்பிக்கையுடன் இருந்ததாகக் கூறினார். “வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, கட்சி அடிமட்டத் தொண்டர்களின் எச்சரிக்கையைப் புறக்கணித்தது,” என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார். உ.பி மற்றும் ஹரியானாவில் உட்கட்சி பிரச்சனைகள் தேர்தல் நிர்வாகத்தை தடம் புரட்டியதாக உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஜாட் வாக்குகள் இழப்பு

2020-'21 வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் மற்றும் மல்யுத்த வீரர்களின் எதிர்ப்புகளை அரசாங்கம் கையாண்டது ஜாட்களிடையே "மகிழ்ச்சியின்மை மற்றும் அதிருப்திக்கு" வழிவகுத்தது என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். "சுவாரஸ்யமாக, எங்கள் ஆரம்ப மதிப்பீடு என்னவென்றால், அவர்களிடையே காங்கிரஸின் மீது எந்தப் பாராட்டும் அல்லது அன்பும் இல்லை, அவர்கள் பா.ஜ.க.,வுக்கு எதிராக வாக்களிக்க விரும்பினர் மற்றும் ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் காங்கிரஸே சாத்தியமான விருப்பமாக இருந்தது" என்று கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.

1999 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கம் அவர்களுக்கு ஓ.பி.சி அந்தஸ்தை வழங்கும் வரை, ராஜஸ்தானில் ஜாட் இனத்தவர்கள் நீண்ட காலமாக காங்கிரஸை ஆதரித்து வந்ததாகக் கூறினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வசுந்தரா ராஜேவின் கீழ் முதல் முறையாக பா.ஜ.க ராஜஸ்தானில் தனித்து ஆட்சி அமைத்தது. ஜாட் இனத்தவர் காங்கிரஸுக்கு சிறிது காலம் திரும்பிய போதிலும், 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இந்த பெல்ட்டில் உள்ள ஜாட் சமூகம் பா.ஜ.க.,வை பெருமளவில் ஆதரித்தது. ஜாட்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தலித்துகளின் ஒருங்கிணைப்பு அந்த ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.,வுக்கு இப்பகுதியில் பெரிய வெற்றியை பெற உதவியது. 2014 இல் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, மோடியின் முதல் பிரச்சாரம் ஹரியானாவின் ரேவாரியில் நடந்த பேரணியாகும், அங்கு மோடி முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றினார்.

ஆனால் இம்முறை, பா.ஜ.க.,வுக்கு எதிரான சமூகத்தின் உணர்வுகள் காரணமாக, ஜாட் ஆதிக்கம் செலுத்தும் பல இடங்களை அக்கட்சி இழந்தது. இதற்கு நேர்மாறாக, உ.பி.யின் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்.எல்.டி.), பாக்பத் மற்றும் பிஜ்னோர் ஆகிய இரு இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜாட் மக்கள் அதிகம் வசிக்கும் முசாபர்நகரில் முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான் 24,672 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜவாதி கட்சியிடம் தோல்வியடைந்தார். ஹரியானாவில், அம்பாலா, சிர்சா, ஹிசார், சோனிபட் மற்றும் ரோஹ்தக் போன்ற ஜாட் ஆதிக்கத் தொகுதிகளில் பா.ஜ.க தோல்வியடைந்தது.

தனித் தொகுதிகள்

நாடு முழுவதும் உள்ள பட்டியல் சாதி (SC)-ஒதுக்கீடு தொகுதிகளிலும் பா.ஜ.க பின்னடைவைச் சந்தித்தது. 84 எஸ்.சி-ஒதுக்கீடு தொகுதிகளில் அதன் எண்ணிக்கை 46ல் இருந்து 30 ஆகக் குறைந்துள்ளது, கடந்த முறை எஸ்.சி தொகுதிகளில் 6 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் இந்த முறை 20 இடங்களைப் பெற்றது. பட்டியல் பழங்குடியினருக்கு (எஸ்.டி) ஒதுக்கப்பட்ட 47 இடங்களில் பா.ஜ.க.,வின் எண்ணிக்கை 31ல் இருந்து 25 ஆக குறைந்தது. காங்கிரசுக்கு எஸ்.டி இடங்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து 12 ஆக உயர்ந்தது.

அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக பா.ஜ.க தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். "எங்கள் 400-க்கும் மேற்பட்ட இலக்கு முழக்கத்தை மாற்றியமைக்கும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை எங்களை மோசமாக சேதப்படுத்தியது" என்று கட்சிக்கு வியூகம் வகுப்பதில் ஈடுபட்டுள்ள மூத்த பா.ஜ.க தலைவர் கூறினார். "இடஒதுக்கீட்டிற்கு பா.ஜ.க மற்றும் சங் பரிவார் இரண்டும் எதிராக இருப்பதாக கூற அவர்கள் அதைப் பயன்படுத்தினர், அது நன்றாக வேலை செய்தது. அஜித் பவார் போன்ற தலைவர்கள் மற்றும் ஜே.டி(எஸ்) மற்றும் தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்ததன் மூலம் பா.ஜ.க தனது இரண்டு பெரிய பிரச்சார புள்ளிகளான ஊழல் எதிர்ப்பு மற்றும் வம்ச எதிர்ப்பு அரசியலை இழந்த நேரத்தில் இது நடந்தது.

மோசமான தேர்தல் நிர்வாகம்

பா.ஜ.க தலைவர்களின் கூற்றுப்படி, உற்சாகமான தொண்டர் படை இல்லாதது மோசமான தோல்விக்கு மற்றொரு காரணம். “மாநிலங்கள் முழுவதும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் காணவில்லை, இதன் விளைவாக பா.ஜ.க.,வின் கோட்டையாகக் கருதப்படும் நகர்ப்புறத் தொகுதிகளில் குறைவான வாக்குப்பதிவு ஏற்பட்டது. நகர்ப்புற வாக்குகளில் 18% சரிவு ஏற்பட்டு அது பா.ஜ.க.,வை நேரடியாகத் தாக்கியுள்ளது என்பது எங்கள் ஆரம்ப மதிப்பீடு,” என்று ஒரு பா.ஜ.க தலைவர் கூறினார்.

கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.,வுக்கு அதிகளவில் வாக்களித்த மாநிலமான ராஜஸ்தானில், ஜெய்ப்பூர் தவிர, பா.ஜ.க வென்ற 14 இடங்களிலும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் சரிந்தது.

தேர்தல் பிரசாரத்தின் போது செய்யப்பட்ட தவறான நிர்வாகம் களத்தை இழந்ததற்கு காரணம் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். ராஜஸ்தானில், மாநிலத் தலைவர் சி.பி ஜோஷி சித்தோர்கரில் தனது பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்தார், ஹரியானாவில் மாநில பா.ஜ.க தலைவர் நயாப் சிங் சைனி முதல்வராக மாறியிருந்தார், அதேநேரம் ஹரியானா மாநில பொறுப்பாளர் பிப்லப் குமார் தேப் தான் போட்டியிடும் திரிபுரா மேற்கு தொகுதி பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்தார், பிப்லப் குமார் பின்னர் ஒடிசா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். "இரு மாநிலங்களிலும் எந்த ஒரு ஒருங்கிணைப்பும் இல்லை மற்றும் மற்ற தலைவர்களுக்கு வழிகாட்டுதல் இல்லை," என்று ஒரு கட்சி உள்வட்டாரம் கூறினார்.

உ.பி.யில், கட்சியின் ஒரு பிரிவினர் "மாநில நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாததை" குற்றம் சாட்டும் நிலையில், மற்றவர்கள் கட்சி வேட்பாளர் தேர்வை தவறாக செய்ததாகக் கூறினர். இந்த தேர்வு முறை மூன்று மாநிலங்களிலும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஹரியானாவில், மற்ற கட்சிகளின் தலைவர்கள் பா.ஜ.க.,வில் சேர்ந்ததும், அவர்களை வேட்பாளராக நிறுத்தும் முடிவு, தொண்டர்களை வெறுப்படையச் செய்தது. சிர்சாவில், ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அசோக் தன்வாரை சிட்டிங் எம்.பி சுனிதா துக்கலுக்குப் பதிலாக பா.ஜ.க களமிறக்கியது, மார்ச் மாதம் கட்சியில் சேர்ந்த ரஞ்சித் சிங் சவுதாலா ஹிசார் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இருவரும் தோற்றனர்.

தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி இல்லை என்பதை பா.ஜ.க தலைவர்கள் நிராகரித்தனர், ஆனால் மத்திய தலைமை விரிவாக சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். ”இல்லையெனில், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட கட்சி தயாராக இருக்காது. மூன்று மாநிலங்களிலும் கட்சியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அந்த மாநிலங்களில் நாங்கள் வெற்றிபெறவில்லை என்றால் விஷயங்கள் விரும்பத்தகாத திருப்பத்தை எடுக்கலாம்,” என்று மூத்த தேசிய பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bjp Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment