திருப்பதி லட்டு விவகாரம்: தடை செய்யப்பட்ட பண்ணை, பினாமி நிறுவனங்கள் மூலம் நெய் விநியோகம் செய்தது அம்பலம்

திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த பண்ணை, பினாமி நிறுவனங்கள் மூலம் நெய் விநியோகம் செய்தது கண்டறியப்பட்டது.

author-image
WebDesk
New Update
Laddu case

திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்யப்பட்ட சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் இருக்கும் தகவல்களை, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது. அதன்படி, ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பண்ணை, அதன் பினாமி நிறுவனங்கள் மூலமாக வெங்கடேஸ்வரா கோயிலுக்கு நெய் விநியோகம் செய்தது தெரிய வருகிறது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Express Exclusive: Blacklisted dairy supplied adulterated ghee to Tirupati temple via proxy companies, says remand report in laddu case

 

Advertisment
Advertisements

உள்ளூர் நீதிமன்றத்தில் இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தடை செய்யப்பட்டிருந்த போலே பாபா ஆர்கானிக் டைரி என்ற நிறுவனம், அதன் பினாமி நிறுவனங்கள் வாயிலாக கலப்படம் செய்யப்பட்ட நெய்யை விநியோகித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2022-ஆம் ஆண்டு, லட்டு தயாரிப்பில் சுமார் 15 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,  ரூர்க்கியில் உள்ள போலே பாபா டைரியின் முன்னாள் இயக்குநர்களான பொமில் ஜெயின் மற்றும் பிபின் ஜெயின், பூனம்பாக்கம் வைஷ்ணவி பால் பண்ணையின் தலைமை செயல் அதிகாரி வினய் காந்த் சாவ்தா மற்றும் திண்டுக்கல் ஏ.ஆர் பால் பண்ணையின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் கைதாகியுள்ளனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு கிலோ நெய்யை ரூ. 291 என்று நிர்ணயிக்கப்பட்ட விலையில் போலே பாபா நிறுவனம் விநியோகித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 2022-ஆம் ஆண்டு வரை தேவஸ்தானத்திற்கு நெய் விநிநோகம் செய்துள்ளது. அதன் பின்னர், இவர்கள் விநியோகிக்கும் நெய் திருப்திகரமாக இல்லை எனக் கூறி திருப்பதி தேவஸ்தானம், இவர்களது டெண்டரை நிராகரித்துள்ளது.

எனினும், இதன் பினாமி நிறுவனங்களிடமிருந்து தேவஸ்தானம் தொடர்ச்சியாக நெய் வாங்கிக் கொண்டிருந்தது. நெய் விநியோகத்திற்கான டெண்டரை கடந்த 2020-ஆம் ஆண்டு வைஷ்ணவி டைரி நிறுவனம் பெற்ற நிலையில், 2024-ஆம் ஆண்டு இதற்கான டெண்டர் உரிமையை பெற ஏ.ஆர் டைரி நிறுவனம் போலியான ஆவணங்களை தயாரித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டர் செயல்முறையில், தனது பினாமி நிறுவனங்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிப்பது முதல் பல்வேறு கட்டங்களில் போலே பாபா நிறுவனம் உதவியதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெண்டர் படி, ஏ.ஆர் டைரி நிறுவனம் நெய்யை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், இந்நிறுவனம் வைஷ்ணவி டைரியில் இருந்து நெய்யை வாங்கியுள்ளது. அதன்படி, ஏற்கனவே, தடை செய்யப்பட்ட போலே பாபா நிறுவனத்தில் இருந்து இந்த நெய் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர் டைரி நிறுவனம், அக்மார்க் தரமான நெய்யை வழங்க வேண்டிய நிலையில், அவர்கள் அதற்கான போலி ஆவணங்களைத் தயாரித்து, கலப்பட நெய்யை வழங்கியதாக அறிக்கை கூறுகிறது.

லட்டு வடிவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் வெங்கடேஸ்வரா கோயிலின் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சி  கடந்த ஆண்டு கூறியது. சி.பி.ஐ-யைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், ஆந்திரப் பிரதேச அரசின் இரண்டு அதிகாரிகள் மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்புத் தர ஆணையத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவத்தில், முன்னர் இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் அரசை தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியது. கடந்த 2019 முதல் 2024 வரை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

- Nikhila Henry

Tirupati ghee

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: