பிரதமர் மோடி வரும் 11ம் தேதி திறந்து வைக்க இருக்கும் நேபாளம் நீர்மின் திட்டம் அலுவகத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இதனால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
நேபாளத்தில் இந்திய அரசின் உதவியுடன் தும்லிங்டார் பகுதியில் காண்ட்பரி 9 என்ற இடத்தில் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்மின் திட்டம் செயல்பட உள்ளது. இதற்காகக் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 25ந்தேதி நேபாளம் சென்ற பிரதமர் மோடி மற்றும் அப்பொழுது பிரதமராக இருந்த சுஷில் கொய்ராலா முன்னிலையில் திட்ட வளர்ச்சிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்தத் திட்டம் 2020ம் ஆண்டில் இருந்து செயல்பட தொடங்கும். இந்தத் திட்டத்திற்கான அலுவலகத்தினை பிரதமர் மோடி வருகிற மே 11ந்தேதி திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில், இந்த அலுவலகத்தில் குண்டு வெடித்ததில் அதன் தெற்கு பகுதியில் உள்ள சுவர் சேதமடைந்து உள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணையில் குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வால் பிரதமர் மோடி 11ம் தேதி நேபாளம் செல்வது உறுதியானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.