வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட சிறுமி கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாய் வெட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது. 2 பேருக்கு வலைவீச்சு.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி சோனி குமாரி. 16 வயதான சிறுமியை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, மஞ்சீத் சிங் தனது இரண்டு நண்பர்களின் உதவியோடு டெல்லிக்கு அழைத்து வந்தார்கள். அங்கு அந்தச் சிறுமிக்கு ஒரு வீட்டில் பணிப்பெண் வேலையும் வாங்கித் தந்தனர்.
டெல்லியில் வேலை பார்த்து வந்த சிறுமி கொலை செய்யப்பட்டது கடந்த மே 4ம் தேதி உறுதியானது. அன்று சிறுமியின் உடல் துண்டு துண்டாக வெட்டிய நிலையில் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது. இந்தக் குற்றத்தை டெல்லி மியான்வாலி நகர் போலீஸ் விசாரித்து வந்தது. இந்நிலையில் கடந்த மே 17ம் தேதி 3 குற்றவாளிகளில் ஒருவரான மஞ்சித் சிங்கை வாடகை விடுதியில் இருந்து போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துக் கூடுதல் துணை கமிஷனர் ராஜேந்தர் சிங் சாகர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சிறுமி கொலை குற்றத்தைப் பற்றி பேட்டியளித்துள்ளார். அதில், “ 30 வயதான மஞ்சித் சிங் 2 நண்பர்களுடன் சேர்ந்த ஜார்கண்டை சேர்ந்த 16 வயது சோனி குமாரியை டெல்லி அழைத்து வந்துள்ளனர்.
அவர்கள் சிறுமியை அழைத்து வந்தபோது சோனி குமாரிக்கு 14 வயது. சோனிக்கு ஒரு வீட்டில் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை வாங்கித் தந்துள்ளனர். ஆனால் மூன்று வருடங்களாக அந்தப் பெண்ணின் சம்பளத்தை மஞ்சித் வைத்துக்கொண்டார். சோனியின் சம்பளப் பணத்தை வைத்துக்கொண்டு சிறுமியை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார் மஞ்சித்.
3 வருடங்கள் கழித்து, சமீபத்தில் தனது சொந்த ஊருக்கே திரும்ப வேண்டும் எனவே சம்பாதித்த பணத்தைத் திரும்ப கொடுங்கள் என்று சோனி கேட்டாள். ஆனால் மஞ்சித் பணத்தை திரும்ப தர மறுத்துள்ளார். மீண்டும் மீண்டும் சிறுமி பணத்தைக் கேட்டதற்கு மஞ்சித் சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்று சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால் சிறுமி அடம் பிடித்ததால் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். பின்னர் கொலை செய்தது தெரியக் கூடாது என்பதற்காக உடலைத் துண்டு துண்டாய் வெட்டி பிளாஸ்டிக் பேகில் கட்டி, சாக்கடையில் வீசினார்கள். மே 4ம் தேதி உடலின் துண்டுகளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.” என்று சாகர் கூறினார்.
இந்தக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சோனி குமாரி வேலை செய்து வந்த குடும்பத்தினரிடம் விசாரணை செய்யப்படும் என்று போலீஸ் கூறியுள்ளது. விசாரணைக்குப் பிறகு குழந்தை தொழிலாளி குற்றம் நிரூபனம் ஆனால் குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.