புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை வெளியேற்றி மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி, கோரிமேடு பகுதியில் உள்ளது. புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 7-ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் ஜிப்மர் நிர்வாகத்தின் மெயிலுக்கு மர்ம நபர் ஒருவர் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்துறைக்கு ஜிப்மர் நிர்வாகம் தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் பல்வேறு பிரிவுகளில் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை வெளியேற்றி தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வெடிகுண்டு சோதனையின்போது மருத்துவமனைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை, அதே போல், நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையில், முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் நார சைத்தன்யா, கலைவாணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் எந்தவித அச்சமுமின்றி இருக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“