சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
“சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E-5188 மும்பையில் தரையிறங்குவதற்கு 40 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்தபோது, விமானக் கழிப்பறை ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் செய்தியைக் கண்டறிந்ததாக விமானிகள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்குத் தெரிவித்தனர்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. அதே நேரத்தில், ஏ321 நியோ விமானம் காலை 8.47 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது.
“இது ஒரு குறிப்பிட்ட எச்சரிக்கையாக இருந்ததால் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் வீரர்கள் விமானத்தை சோதனை செய்தனர். ஆனால், அந்த விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று தகவல் வெளியானது.
இது குறித்து இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் 6E 5188 என்ற விமானம் மும்பையில் தரையிறங்கும்போது வெடிகுண்டு மிரட்டல் அஞ்சல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு சோதனை செய்ய உரிய அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு, விமான நிலைய பாதுகாப்பு முகமைகளின் வழிகாட்டுதல்களின்படி விமானம் தொலைதூர பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்ததும், விமானம் மீண்டும் விமான நிலைய முனையப் பகுதிக்கு நிலைநிறுத்தப்படும்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை தொடர்பான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொது சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பி.சி.ஏ.எஸ்) மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில செய்தி தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“