இந்திய ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசு, அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.
இந்தியா, ஏவுகணை சோதனை செய்தபோது தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.
இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது. மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இது தவறுதலாக நேரிட்ட விபத்து என்றும் அவர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
அத்துடன், இதுபோன்று நேரிட்டது கவலை அளிக்கிறது. யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது என்றும் அவர் கூறி இருந்தார்.
எனினும், இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்கி வரும் பிலிப்பைன்ஸ் இந்த விஷயத்தில் கவலை கொண்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, பிலிப்பைன்ஸில் உள்ள இந்தியத் தூதர் ஷாம்பு எஸ் குமரனை பிலிப்பைன்ஸ் பாதுகாப்புத் துறை செயலர் டெல்ஃபின் லோரன்சானா அழைத்துப் பேசினார்.
அப்போது, பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்தது குறித்து குமரனிடம் டெல்ஃபின் கேட்டார்.
அதற்கு, ஏவுகணையில் எந்தவித தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவில்லை.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்ததும் அதுதொடர்பாக அறிக்கைகளையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறேன் என்று அவரிடம் குமரன் விளக்கம் அளித்தார்.
பிரமோஸ் ஏவுகணை தான் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது என்று இதுவரை அதிகாரப்பூர்வகமாக தெரிவிக்கப்படவில்லை. எனினும், பிலிப்பைன்ஸ் கவலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி, பிரமோஸ் ஏவுகணைக்கான பேட்டரிகளை பெறுவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தம் 375 மில்லியன் டாலருக்கு நிகரானது ஆகும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்தியாவின் முதல் ஏற்றுமதியும் இதுவாகவே கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்: Forbes 2022 இந்திய கோடீஸ்வரர்கள்: முகேஷ் அம்பானி முதலிடம், அதானிக்கு 2-வது இடம்
முன்னதாக, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணீலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குமரன், பிரமோஸ் ஏவுகணை குறித்து பிலிப்பைன்ஸ் கவலை கொண்டது என்று கூறிவிட முடியாது. ஆனாலும் என்னிடம் சில கேள்விகளை கேட்டார்கள். பாதுகாப்புச் செயலருடன் பேசி விளக்கம் அளித்தேன் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil