செயின் பறித்த திருடனுடன் மல்லுக்கட்டி இழுத்து கீழே தள்ளி அவனுக்கு தர்மஅடி தண்டனை வாங்கிக்கொடுத்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
தலைநகர் டில்லியில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடயே பெரும்பீதியை ஏற்படுத்திவருகின்றன. டில்லி அரசு சார்பில், குற்றவாளிகளை பிடிக்கும் பொருட்டு ஆங்காங்கே சிசிடிவிக்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டில்லி நாங்க்லோய் பகுதியில், தனது மகளுடன் சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக்கொண்டு தப்பிக்க குற்றவாளிகள் திட்டமிட்டனர். செயினை பறித்ததும், அந்த பெண், திருடனை பிடித்து இழுத்து வண்டியில் இருந்து கீழிறக்கிவிட்டார். வண்டி ஓட்டிவந்த மற்றொரு திருடன் தப்பியோடி விட்டான். அந்த திருடனுடன் மல்லுக்கட்டிய பெண், அவன் ஓடிவிடாதபடி கீழே தள்ளிவிட்டார். அதற்குள் அங்கிருந்தவர்கள் அந்த திருடனை பிடித்து சரமாரியாக அடித்து செயினை அப்பெண்மணியிடம் ஒப்படைத்தனர்.
திருடனிடம் சண்டையிட்டு அவனை பிடித்ததோடு மட்டுமல்லாது, அவனுக்கு உடனடியாக தக்க தண்டனை வாங்கித்தந்த அப்பெண்மணிக்கு நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.