மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கடுமையான கருத்துகளைத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மணிப்பூர் காவல்துறையினரால் நடத்தப்படும் விசாரணை மிகவும் மந்தமாக இருக்கிறது என்றும், பெண்களை வன்முறை கும்பலிடம் ஒப்படைத்த காவலர்கள் மாநில காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு இயந்திரங்கள் முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் கூறிய உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணைக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி ஆஜராகுமாறு மணிப்பூர் டி.ஜி.பி-க்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கடுமையான கருத்துகளை வெளியிட்ட உச்ச நீதிமன்றம், மணிப்பூர் காவல்துறையினரால் நடத்தப்படும் விசாரணையை மிகவும் மந்தமானது என்று அழைத்தது. மேலும், வன்முறை கும்பலிடம் பெண்களை ஒப்படைத்த காவலர்கள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டார்களா என்று கேள்வி எழுப்பியது.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மணிப்பூரில் வன்முறைக் கும்பலால் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உட்பட மணிப்பூர் வன்முறை தொடர்பான பல மனுக்களை விசாரித்து வருகிறது. கடந்த மாதம், குக்கி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மே 4-ம் தேதி நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு வீடியோ வெளிவந்தது. இது நாடு முழுவதும் கோபத்தையும் கொந்தளிப்பையும் தூண்டியது. மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ கையிலெடுத்து விசாரித்து வருகிறது.
நீதிபதி ஜே.பி. பரித்வாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, “சட்டம் ஒழுங்கு அரசு இயந்திரங்களால் மக்களைப் பாதுகாக்க முடியாவிட்டால், குடிமக்களுக்கு என்ன நடக்கும்?” என்று கேள்வி எழுப்பினர்.
“இந்த வீடியோ வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டது என்கிற ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மாநில காவல்துறை விசாரணை செய்ய இயலாது. அவர்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மணிப்பூர் வீடியோ வழக்கில் மாநில காவல்துறை பாதிக்கப்பட்டவர்கள் எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம் என்ற அடிப்படையில், காவல்துறை ‘ஜீரோ’ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாகவும், இந்த வீடியோ வழக்கில் இளம் குற்றவாளி உட்பட 7 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளதாகவும் கூறினார்.
பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க கோரியுள்ளனர்.
மணிப்பூரில் மேய்தேய் மற்றும் குக்கி மக்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மே மாத தொடக்கத்தில் இருந்து 140-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”