விசாக்களுக்கு லஞ்சம்’ பெற்ற வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பல மணிநேர விசாரணைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
"அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, எனவே நாங்கள் அவரை கைது செய்ய வேண்டியிருந்தது. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்” என்று சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2009-2014ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பஞ்சாப் மாநிலம், மான்ஸா பகுதியில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வந்த மின் திட்டப் பணிகளில் வேலை செய்ய 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்க ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
2018 ஆம் ஆண்டு அமலாக்க இயக்குனரகம் (ED) அனுப்பிய குறிப்பின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், சிபிஐ, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்தான் விசாரணையை தொடங்கி, மே 14 அன்று எஃப்ஐஆர் பதிவு செய்தது.
பாஸ்கரராமனின் மடிக்கணினியில் இருந்து, சீன நாட்டினருக்கு விசா வசதிக்காக’ வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து ரூ. 50 லட்சம் கோருவது பற்றி விவாதிக்கப்பட்ட மின்னஞ்சலை அமலாக்க இயக்குனரகம் மீட்டெடுத்தது. இந்த லஞ்சம் மும்பையை சேர்ந்த நிறுவனம் மூலம் கார்த்திக்கு கொடுக்கப்பட்டதாக சிபிஐ கூறியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை வீடு உள்பட மும்பை, ஒடிசா, கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய் கிழமை சோதனையில் ஈடுபட்டனர். கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கரராமன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் முதல் குற்றவாளியாகவும், கார்த்தி சிதம்பரம் 2 வது குற்றவாளியாக சேர்த்து சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்காததால் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“