கொல்கத்தாவில் தெற்குப் பகுதியில் செட்லா, நியூ அலிபூர் பகுதியை இணைக்கும் பழமையான மெஜெர்ஹத் பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ரயில் தண்டவாளத்தின் மேல்பகுதியில் இந்த பாலம் இருக்கிறது. விபத்து நடந்த போது பாலத்தின் மீது சென்ற வாகனங்களும் சிக்கியுள்ளன. மேற்பகுதியிலிருந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி இருக்கும் வாகனங்களையும், மக்களையும் மீட்க மீட்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தீயணைப்பு படையினர், மீட்புப்படையினர் போலீஸார் ஆகியோர் இணைந்து, மீட்புப்பணியல் ஈடுபட்டு வருகின்றனர். மிகவும் பழமையான பாலம் மழை காரணமாக விழுந்ததா? முறையான பராமரிப்பு இல்லாமல் விழுந்ததா? என்ற கேள்வியும் எழுகிறது. பாலம் இரண்டடுக்கு பாலமாகும், பாலத்தின் மேற்குப்பகுதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு புதிய பாலத்தினை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பாலம் இடிந்து விழுந்த பகுதியில் ஆம்புலன்ஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, முதலுதவிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இது 40 ஆண்டுகால பழமையான பாலமாகும். மீட்பு பணிகள் விரைவில் நடைபெற்று வருகிறது என்று மேற்கு வங்க அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.