/indian-express-tamil/media/media_files/2025/05/29/hquLl2l1lZ1NJ1902qVr.jpg)
பா.ஜ.க.வுடன் கட்சி பி.ஆர்.எஸ். இணைப்பு முயற்சி - கவிதா பகீர் குற்றச்சாட்டு
தெலுங்கானாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியடைந்தது. காங்கிரஸ் வெற்றி தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தெலுங்கானாவில் பா.ஜ.க மேலிடம் கட்சியை வளர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானாவில் தனது பலத்தை காட்ட துடித்து வருகிறது. பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவராக முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் (கே.சி.ஆர்) உள்ளார். செயல் தலைவராக கேடி ராமராவ் (கே.டி.ஆர்) செயல்பட்டு வருகிறார். இந்நிலையில்தான், கே.சி.ஆர். மகள் கவிதா ஹைதராபாத்திலுள்ள தனது இல்லத்தில் இன்று (மே29) பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தனது சகோதரரான கே.டி.ஆரின் பெயரை கூறாமல் கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு, பி.ஆர்.எஸ். கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவிதா அளித்த பேட்டியில், ‛‛எனக்கு ஒரு தலைவர்தான் உள்ளார். அது கேசிஆர். நான் அவரது தலைமையின் கீழ் தான் செயல்படுவேன். நான் சிறையில் இருந்தபோது பி.ஆர்.எஸ்-ஐ பாஜகவுடன் இணைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. பி.ஆர்.எஸ் ஒரு பிராந்தியக் கட்சி. அதேபோல், தெலுங்கானா மக்களின் பிரச்னைகளை தீர்க்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பி.ஆர்எஸ் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். இதனால், பி.ஆர்.எஸ். கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினேன்” என்றார்.
டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அதே வழக்கில், சி.பி.ஐ கைது செய்தது. 5 மாதம் வரை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
கட்சிக்கு தான் உறுதுணையாக நின்றபோதிலும், கட்சிக்குள் ரகசியமாகச் செயல்படுபவர்கள் தனக்கு எதிராக வேலை செய்வதாக கவிதா கூறினார். பா.ஜ.க.வுடன் கட்சியை இணைக்க ரகசிய முயற்சிகள் நடப்பதாக கூறுவதைக் கருத்தில் கொண்டு, கட்சி பலவீனமாக உள்ளதா? என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கவிதா, ‛‛பி.ஆர்.எஸ். கட்சி பலவீனமாக இல்லை. பி.ஆர்.எஸ். பலவீனமடைந்தால் பா.ஜ.க ஆதாயமடையும் என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வாக இருந்தாலும், பி.ஆர்.எஸ்.-ஐ வேறு எந்தக் கட்சியுடனும் இணைக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்'' என்றார். மேலும், பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கேடிஆருடன் இணைந்து பணியாற்ற தயாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கவிதா, ‛‛ எனது ஒரே தலைவர் கே.சி.ஆர்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் சகோதரர் கே.டி.ஆர். உடன் கவிதாவுக்கு பிரச்னை இருப்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகி உள்ளது. தற்போது கவிதா தற்போது பி.ஆர்.எஸ் கட்சியின் மகளிர் அணி தலைவராக உள்ளார். அதேபோல் எம்எல்சியாக (தெலுங்கானா மேல்சபை) பொறுப்பு வகித்து வருகிறார்.
முன்னதாக கடந்த 2ம் தேதி கே.சி.ஆருக்கு, கவிதா கடிதம் எழுதினார். அந்த கடிதம் சமீபத்தில் வெளியே வந்தது. அந்த கடிதத்தில் சகோதரர் கே.டி.ஆரை அவர் விமர்சனம் செய்திருந்தார். அவர் பா.ஜ.கவை எதிர்ப்பது இல்லை. பா.ஜ.க.வுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க.வை எதிர்த்துதான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இப்போது, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். ஆனால், அவர் பாஜகவை எதிர்ப்பது இல்லை'' என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.